கரிப்பிடித்த அரிக்கேன் விளக்குச் சிமினிக்குள்
விபூதியைப் போட்டு விரலால்
பளிச் சென்றாக்குவாள் காமாட்சிப்பாட்டி
மறுநாள் காலை அழகுநாச்சியம்மன்
பெயரைச் சொல்லி அதையே நெற்றியில் பூசிக்கொள்வாள்.
எதுவோ கடித்து விட்டதெனத் தடிப்பைக் காட்டினால்
அவ்விடத்தில் விபூதியை அள்ளிப் போட்டுக்
கரகரவெனத் தேய்ப்பாள்
வரலெட்சுமி விரதத்திற்கு முந்தைய நாள்
கறுப்படித்த வெள்ளி அம்மன் முகத்தை
விபூதியால் வெள்ளை வெளேறென்றாக்கிடுவாள்.
பாட்டி! அசதியாயிருக்கிறதெனச் சொன்னால்
அன்பாய் தலைமுடி கோதி
விபூதி எடுத்து மந்திரித்து
ஐந்தாறு முறை கொட்டாவி விட்டுத்
தலையைச் சுற்றிக் கண்ணேறு கழிந்ததெனத்
தலைவாசலில் நின்று ஊதிவிடுவாள்.
நள்ளிரவு நேரம்
தொட்டிலில் தூங்கும் விஷால் அலறியழுதால்
வாரிச் சுருட்டி எழுந்து
சுடலையோட்டமெனச் சொல்லி
அவன் நெற்றியில் விபூதியிட்டுத்
தோளில் தட்டி உறங்க வைப்பாள்
தசரா வந்தால்
கண்ணாடிப் படங்களைக் கழற்றி
விபூதியால் பளிச்சென்றாக்குவாள்.
ஒற்றைப் பொருளால் ஊர்ப்பட்ட வேலை
செய்யத் தெரிந்த என் பாட்டி தந்த
விபூதி மட்டுமே இப்போது கொட்டானில் உள்ளது
பாவம்... கடந்த மாதம் வெள்ளக்கோயில்
சுடுகாட்டில் அவள் விபூதியாகித் தாமிரபரணியில்
கலந்து போனாள்.
முனைவர் ச .மகாதேவன்
முடிகிறது
- முனைவர். ச. மகாதேவன் www.mahatamil.com
மடியிலமர்த்திக் கதை சொல்கிறேன்
'ம்' ஒலியோடு தலையாட்டித்
தூங்குகிறது என்சிறு குழந்தை
பொம்மைகளை உண்மைகளாய் நம்பவும்
செப்புச் சாமான்களில் சோறுகறி பொங்கவும்
ஆடைகளற்றுத் தெருவரை போகவும்
பொக்கை வாய் குழிவிழ அழகாகச் சிரிக்கவும்
பிடித்த கரம் நம்பி விரல் தந்து நடக்கவும்
மண்ணள்ளி மகிழ்வாய் மறைவாய் வைத்துத் தின்னவும்
சுவற்றுப் பரப்பில் சுதந்திரமாய் ஓவியங்கள் வரையவும்
இருளைக் கண்டால் தாயிடம் பதுங்கவும்
பிரணவ் போன்ற குட்டிக்குழந்தைகளால் முடிகிறது
சுள்ளென்று எரிந்து விழுந்து
அடித்துத் துவைக்க மட்டுமே
நம்மால் முடிகிறது.
ஆய்வு முன்னுரை
மாற்றமடையாத எதுவும் இந்த உலகில் தப்பிப்பிழைப்பது இல்லை. ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் தமிழ்மொழியிலும், தமிழிலக்கியத்திலும், எதிர்காலத்தில் நடைபெற வேண்டும் என்பதை முன்னிறுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.
எழுத்துச் சீர்திருத்தம்
26 எழுத்துகளைக் கொண்டு எளிமையாய் அமையும் ஆங்கிலமொழி போல், தமிழ் எழுத்துகள் சீர்த்திருத்தப்பட்டு தமிழின் வரிவடிவம் எளிமைப்படுத்தப்பட வேண்டும். “இன்று 247 தமிழ் எழுத்துகளையும் கணினிப் பயன்பாட்டில் 107 குறியீடுகளைக் கொண்டு எழுதுகிறோம்“. என மலைக்கிறார் அறிவியல் தமிழ் அறிஞர் முனைவர் வா.செ. குழந்தைசாமி. தமிழைத் தாய்மொழியாய் கொண்டிராத பிற நாட்டவரும் எளிமையாய் தமிழ் படிக்க எதிர்கால எழுத்துச் சீர்திருத்தம் அமையும். கணினியை இன்னும் எளிமையாகப் பயன்படுத்த வாய்ப்பாக அமையும்.
பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள்
இலக்கியங்கள் குறித்த ஆய்வுகள் நடைபெற்ற அளவுக்கு, வட்டாரப்பேச்சு வழக்கு பற்றிய ஆய்வுகள் நடைபெறவில்லை. திருநெல்வேலித் தமிழுக்கும், சென்னைத் தமிழுக்குமான ஒப்பியல் ஆய்வுகள், வட்டார வழக்குச் சொல்லகராதி தொடர்பான ஆய்வுகள் தமிழகத்திற்குள் மட்டுமல்லாமல் உலகளாவிய அளவில் நடத்தப்பட்டு இணையத்தில் அந்தந்த மக்களின் குரலில் பதிவாக்கப்படவேண்டும்.
கல்வெட்டுப்பதிவுகள் இணையத்தில் ஆவணமாக்கப்பட வேண்டும்
ஆய்வறிஞர் திரு. ஐராவதம் திரு. மகாதேவன், நாகசாமி போன்றோரின் கல்வெட்டாய்வுகளைப் போன்று பல்கலைக்கழகங்கள் தங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரிய கல்வெட்டுகளைப் படங்களாக எடுத்து, இணையத்தில் ஆவணமாக்கினால் உலகளாவிய அளவில் ஆய்வுகளை நிகழ்த்தலாம். “2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட அரிய கல்வெட்டுகள் இந்தியாவில் உள்ளன. அதில் 90% தமிழ்நாட்டில் உள்ளன. திருநெல்வேலி மாவட்டம் மறுகால் தலையில் அதிக செய்திகளைக் கூறும் கல்வெட்டு உள்ளது”.
நாடு முழுக்கத்தமிழ்க் கல்வி
பல்கலைக்கழக நிதி நல்கைக்குழுவின் 2001 – 2002 அறிக்கைப்படி இந்தியாவில் 213 பல்கலைக்கழகங்களும் 16,000 கல்லூரிகளும் உள்ளன. அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தமிழியற் புலங்கள் உருவாக்கப்பட்டு கற்பித்தலும் ஆய்வுகளும் நடைபெற வேண்டும்.
திருக்குறள் உலக இலக்கியமாய் அறிவிக்கப்பட வேண்டும்
உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலக இலக்கியமாய் ஐ.நா. சபை மூலம் அறிவிக்க வைப்பதும், உலகின் அனைத்து மக்களுக்கும் அவரவர் மொழியில் திருக்குறளைக் கொண்டு செல்ல வேண்டும்.
கணினித்தமிழ் – இணையத்தமிழ்
தமிழ் மட்டுமே அறிந்த ஒருவர் எளிமையாகப் பயன்படுத்தும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்படவேண்டும். தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ‘www.tamilvu.org.’ எனும் வலைத்தள முகவரியில் இட்டு, அழகான மின்நூலகத்தை அமைத்து, இணையக் கல்வியை 54 நாடுகளிலுள்ள 5000 தமிழ் மாணவர்களுக்கு அளித்து வருகிறது. இணையத்தமிழை முதுநிலைப் பாடமாக்கி, கணினியோடு இணைந்தகல்வி உருவாக்கப்பட வேண்டும்.
டிஸ்கி, டாப், டாம், யூனிகோடு எனும் நால்வகை எழுத்துருவாக்கத்தினை உலகத்தமிழர்கள் கணினியில் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் வெவ்வேறு எழுத்துருவாக்கத்தினைப் பயன்படுத்துவதால், சில இணையப் பக்கங்களை நம்மால் வாசிக்க முடியாமல் போகிறது. உலகம் முழுக்க “யூனிகோடு“ முறையைத்தான் மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. தமிழ்க்கணினிகள் யாவற்றிலும் விதவிதமான உள்ளிடல்கள் நிறுத்தப்பட்டு, எதிர்காலத்தில் ஒரேமாதிரியான உள்ளிடல்கள் செயல்படுத்தப்பட வேண்டும். “எந்த எழுத்துரு இருந்தாலும் யூனிகோடுக்கு அதை மாற்றும் எந்திரம் கண்டறியப்பட வேண்டும்“ என்ற அறிவியல் தமிழறிஞர் சுஜாதாவின் கருத்து நோக்கத்துக்கது. அதோடு அவர் கூறும் மற்றொரு கருத்து “இணையத்தில் கோப்புகளை அனுப்ப இன்று 26 முறைகள் உள்ளன. 4 விசைப்பலகை ஒதுக்கீடு உள்ளன. ஒரே ஒரு விசைப்பலகை ஒதுக்கீடு, ஒரே ஒரு குறியீடு என்பது எதிர்காலத்தில் பாமர மக்களுக்கும் கொண்டு செல்ல உதவும்“ என்பதாக அமைகிறது.
புதிய நோக்கில் தமிழ் ஆய்வுகள்
உலகில் தமிழியற்புலங்கள் உள்ள அனைத்துப்பல்கலைக்கழக நூலகங்களும் இணையம் வழியே தொடர் இணைவு செய்யப்பட்டால், “மின்னணு நூலகம் உருவாக்கப்பட்டு ஆய்வுகள் சிறப்பாக நடைபெறும். அனைத்துப் பல்கலைக்கழக ஆய்வு நூலடைவுகளும் இணையத்தில் இடப்படுவதன் மூலம், திரும்பத் திரும்ப ஒரே துறையில் நடைபெறும் ஆய்வுகள் குறையும். லெமூரியாக்கண்டம், பூம்புகார் ஆகியன கொற்கை தொடர்பான கள ஆய்வுகள் ஊக்குவிக்கப்படுட வேண்டும்.
புதிய நோக்கில் தமிழ் இலக்கியம் பயிலலாம்
தமிழ் இலக்கியப் படைப்புக்களின் நோக்கும் போக்கும் எதிர்காலத்தில் மாற்றம் பெறும். இயந்திர யுகத்தில் கவிதை, சிறுகதை, உரை நடை இன்னும் சொற்சுருக்கம் பெறும்; மண்மரபு சார்ந்த பதிவுகள், ஏழைமக்களின் அவலங்களே இனி கவிதை முழுக்க இடம் பிடிக்கும். நவீன இரட்டைக்காப்பியங்களாய் வைரமுத்துவால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள கருவாச்சி காவியமும், கள்ளிக்காட்டு இதிகாசமுமே இதற்குச் சாட்சி, தமிழ்க் கவிதைகள் மொழிபெயர்ப்பின் மூலம் உலகத்தின் பார்வைக்குள்ளாகி நோபல் பரிசுகளும் பெறவாய்ப்பாகும். சிறுகதைகளின் வடிவம் இன்னும் சுருங்கும். புதிய பாடுபொருட்களால் நாளைய இளம் படைப்பாளிகள் புதுமைப்பித்தனையும், கு.ப. ரர்வையும், மௌனியையும், சரியாக உள்வாங்க தாண்ட முயல்வார்கள் தமிழ் வகுப்பறைகளில் மாணவர்களே, படைப்பாளிகளாகவும் திறனாய்வாளர்களாகவும் திகழ்வார்கள். தமிழ்மொழி, ஆய்வகங்கள் மூலம் இன்னும் நவீன உத்திகளோடு ஒலி வடிவிலும், ஒளி வடிவிலும் கற்றுத்தரப்படும். சிலப்பதிகாரம் இசைப்பண்ணாகவே மாற்றப்பட்டு இசை நுணுக்கங்களோடு கற்றுத்தரப்படலாம். விரிவுரைகளும் அருஞ்சொற்பொருள் விளக்கங்களும் பொருளற்றுப் போகலாம். சங்கஇலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை அனைத்து இலக்கிய வகைமையும் மறுவாசிப்பிற்குள்ளாகி இன்னும் ஆழமாகப் புரியப்படலாம். தமிழ்த்துறை – வணிகம், பொருளாதாரம், மானுடவியல், இயற்பியல், புவியியல், வானியல், மண்ணியல் போன்ற பல்துறைகளோடு இணைந்த பல்துறையாக மாறி அதிலிருந்து புதிய துறைகள் உருவாகலாம். உ.வே.சா. அழிந்து கொண்டிருந்த நூல்களைத் தேடிப்பிடித்து பல ஓலைச்சுவடிகளை ஒப்பு நோக்கிப் பாடபேதம் கண்டு அடிக்குறிப்போடு பல இலக்கியங்களை அச்சிட்டு வெளியிட்டார். அதன்பின் சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்தல் குறைந்து போனது. எதிர்காலத்தில் இந்நிலை மாறவேண்டும். ஓலைச்சுவடிகள் யாவற்றையும் “ஸ்கேன்“ செய்து இணையத்தளத்தில் உலகம் முழுக்க உள்ளிடும் பணி நடந்தால் உலகளாவிய முன்முயற்சியாக அது அமையும். புதிய இலக்கியங்களின் மூல எழுத்துப்படி ஒவ்வொன்றும் இம்முறையில் ஆவணப்படுத்தப்பட்டால் எதிர்கால ஆய்வுகளுக்கு வழிகாட்டியாய் அமையும். படைப்பாளிகளின் வாழ்வியல் பதிவுகள் அவர்கள் வாழும்போதே செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டால், அவை அவர்களின் படைப்பில் வெளிப்பட்ட முறையை நம்மால் அறியமுடியும். எதிர்காலத்தில் வெளியாகும் அனைத்துப் படைப்புக்களோடும் அந்தப் படைப்பு பிறந்த சூழல் குறித்த “குறுந்தகட்டு ஒலிப்பதிவுடன் இணைந்து வெளியானால் வாசனால் படைப்பை முழுமையாய் உணர முடியும். நாளைய பல்கலைக்கழகத்துறைகளில் பேராசிரியர்களோடு படைப்பாளிகளும் இணைந்து பணிபுரிவார்கள். கரிசல் காட்டு எழுத்தாளர்
கி. ரா. புதுவைப் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தியதைப் போன்ற சூழல் எங்கும் நிலவும்.
கி. ரா. புதுவைப் பல்கலைக்கழகத்தில் பாடம் நடத்தியதைப் போன்ற சூழல் எங்கும் நிலவும்.
எதிர்காலம் தமிழின் எழுச்சிக்காலமாய் அமையும். சொந்த மண்ணில் அந்நியப்படுத்தப்பட்ட மொழியாக இனி தமிழை யாரும் நினைக்க முடியாது போகும். தமிழ் ஆட்சிமொழியாக அனைத்துத்துறைகளிலும் திறம்படச்செயல்படும். புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு இணையான தமிழ் உணர்வு தமிழகத்திலும் உருவாகும். தமிழ் நவீன ஊடகமான இணையத்திலும் சாதனை படைத்து உலகத்தோரால் பாராட்டப்பெறும். பேச்சுத்தமிழுக்கு இலக்கணம் வகுக்கப்படலாம், வேலைவாய்ப்புத் தரும் துறையாக மலரும். தொன்மையின் வேரில் தமிழ் எனும் கற்பகதரு நவீன கனிகளைத்தரும். மொழிபெயர்ப்புகள் நிறைய நடைபெற்று “தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்“. நம் தேர்ந்த பண்பாடும், திராவிட நாகரிகமும் உலக மக்களால் ஏற்றுக்கொள்ளப் பெற்று பின்பற்றப்படும். தனித்தியங்கும் தன்மை தமிழனுக்கு உண்டு. தமிழே ஞாலத்தில் முதுமொழி பண்டு என்ற பாவேந்தர் கூற்று அப்போது மெய்ப்பிக்கப்படும்.
சென்னைப் பல்கலைக்கழகத் தமிழாய்வு மன்றம் நடத்திய “தமிழாய்வு கடந்த காலமும் வருங்காலமும்“ எனும் பன்னாட்டுக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரை. ஆய்வுக்கதிர் – 5, மெய்யப்பன் பதிப்பகம், பக்.102-107.
தொடக்கம்
பத்திரிகையாளரின் எழுதுகோல் தலைகுனிவதே இச்சமூகம்
தலைநிமிரத்தான். ஆட்சிப்பீடம், நாடாளுமன்றம், நீதிமன்றம் எனும் முத்தூண்களோடு, நான்காம் தூணாய் அமைந்து சனநாயகத்தைச் சலவை செய்துவரும் முக்கியத்தூண் பத்திரிக்கைகள் ஆகும். “தமிழா! நீ இருந்ததுபோதும் செருப்பாய், இனிமேல் இருப்பாய் நெருப்பாய்” எனும் கவிஞர் காசிஆனந்தனின் எழுச்சி வரிகளை நாம் அறியத் தந்த ஊடகங்கள் பத்திரிகைகள். கீழவெண்மணியில் கொடூரமான மனிதர்நோகப் படுகொலை நடந்தபோது உலகப் பார்வைக்குக் கொண்டு சென்றதும் பத்திரிகைகள்தாம். நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத கம்பீரம், சமூக மாற்றத்திற்காகத் தன் உடல் பொருள் ஆயுளாலே அளித்த தியாகம்... இவை போன்ற பண்புகளால் தன்மானம் ஊட்டிய இனமானப் பெரியாரின் “குடியரசு” எண்பதை எட்டுகிறது என்பதால் இக்கட்டுரை ஒருசில இதழ்களை முன்னிறுத்துகிறது.
தலைநிமிரத்தான். ஆட்சிப்பீடம், நாடாளுமன்றம், நீதிமன்றம் எனும் முத்தூண்களோடு, நான்காம் தூணாய் அமைந்து சனநாயகத்தைச் சலவை செய்துவரும் முக்கியத்தூண் பத்திரிக்கைகள் ஆகும். “தமிழா! நீ இருந்ததுபோதும் செருப்பாய், இனிமேல் இருப்பாய் நெருப்பாய்” எனும் கவிஞர் காசிஆனந்தனின் எழுச்சி வரிகளை நாம் அறியத் தந்த ஊடகங்கள் பத்திரிகைகள். கீழவெண்மணியில் கொடூரமான மனிதர்நோகப் படுகொலை நடந்தபோது உலகப் பார்வைக்குக் கொண்டு சென்றதும் பத்திரிகைகள்தாம். நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத கம்பீரம், சமூக மாற்றத்திற்காகத் தன் உடல் பொருள் ஆயுளாலே அளித்த தியாகம்... இவை போன்ற பண்புகளால் தன்மானம் ஊட்டிய இனமானப் பெரியாரின் “குடியரசு” எண்பதை எட்டுகிறது என்பதால் இக்கட்டுரை ஒருசில இதழ்களை முன்னிறுத்துகிறது.
சுதேசமித்ரனும் சமூக மாற்றமும்
ஜி. சுப்பிரமணிய ஐயரால் தொடங்கப்பெற்ற (1882) “சுதேசமித்ரன்”
வார இதழ், 1889 ஆம் ஆண்டிலிருந்து நாளிதழாய் உருப்பெற்றது. சமூக
மாற்றத்தை முன்னிறுத்திப் புதுமை போக்குடன் திகழ்ந்தது. சமூக, அரசியல்,
பொருளாதார நோக்கில் இவ்விதழ் ஒவ்வொரு நிகழ்வையும் விமர்சித்தது. தேச
விடுதலையும், சமூக விடுதலையும் இதன் இரு கண்களாகத் திகழ்ந்தன. பாரதி 1904
இதன் துணை ஆசிரியராகப் பணியாற்றினார். அவரது கட்டுரைகள் பெண்விடுதலை,
தீண்டாமை ஒழிப்பு, விதவை மறுமணம், பெண் கல்வி போன்ற கோணங்களில் சமூகம்
எழுச்சி பெற உதவின.
அதன்பின் 1906இல் பாரதி தொடங்கிய “இந்தியா” தமிழ் வார இதழும் பாரதி ஆசிரியராயிருந்து வழிகாட்டிய “சக்ரவர்த்தினி” மாத இதழும் சமூக மாற்றத்திற்குப் பேருதவி புரிந்தன. பாரதி ஆசிரியராயிருந்து (1909 – 1910) புதுவையிலிருந்து நடத்திய “விஜயா”
நாளிதழ் தீண்டாமையைக் கடுமையாகச் சாடியது. அந்நாளிதழின் 18.02.1910
தேதியிட்ட இதழில் பாரதி தீண்டாதவர்கள் எனும் கட்டுரையில் தீண்டாமையைக்
கடுமையாகச் சாடுகிறான். “நாம்
இந்தச் ஜாதியாரில் ஒவ்வொருவனும் நற்குணமில்லாதவனென்று கருதுவது
கண்மூடித்தனமாகும். உலகத்தில் ஒவ்வொரு ஜாதியாரும் பெருமையாய் வாழ விரும்ப
வேண்டுவது இயற்கை. ஒருவன் பிறப்பில் தாழ்ந்த ஜாதியென்றும் மேலான
ஜாதியென்றும் பிரிக்கப்படுவது நியாயமாகாது. எல்லோரும் தெய்வ சிருஷ்டி.” (பாரதி விஜயா கட்டுரைகள் தொ.ஆ. – ஆ.இரா. வெங்கடாசலபதி, ப.130 – 131) தீண்டாமையைக் கருத்தில் மகாத்மாவோடு பாரதி முரண்பட்டு இதழ்களில் எழுதிக் கண்டித்ததை உணர முடிகிறது.
தேசபக்தனும் சமூக மாற்றமும்
திரு.வி.க. 1917இல் ஆசிரியராய் பொறுப்பேற்ற “தேசபக்தன்”
தூயத் தமிழில் சமூக முன்னேற்றக் கருத்துக்களை முன் வைத்து சாதிமத
பேதங்களைத் தேசபக்தன் கடுமையாய் சாடியது. தொழிலாளர் முன்னேற்றம், பெண்
கல்வி, சாதி ஒழிப்பு போன்ற கருத்துகளைத் தேசபக்தனில் திரு.வி.க. தொடர்ந்து
எழுதினார்.
தந்தை பெரியாரின் எழுத்தோவியங்கள் ஏற்படுத்திய சமூக மாற்றம்
தந்தை பெரியாரின் இதழியல் சாதனைகள் மகத்தானவை கடவுள் மறுப்பாளர் எனும்
ஒரே காரணத்தால் அவர் செய்த சமூக முன்னேற்ற முயற்சிகள், அவர் நடத்திய
இதழ்கள் சாதித்த சாதனைகள் ஆகியன இன்றும் இருட்டடிப்பு செய்யப்படுவதையும்
கொச்சைப்படுத்தப்படுவதையும் காணமுடிகிறது. “அச்சமற்றவன் ஒற்றை மனித இராணுவம் எனும் கூற்றுக்கேற்பப் பெரியார் பகுத்தறிவு இராணுவமாகவே”
திகழ்ந்தார். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடின்றி வாழ்ந்ததால்
இன்று அவர் மட்டுமே பெரியார் எனும் அடைமொழிக்குச் சான்றாகிறார். 1929
ஏப்ரலிலிருந்து பெரியார் “திராவிடன்”
இதழின் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, எரிமலையாய் எழுதினார். அதன்பின்
கோவைச் சிறையில் தன் நண்பர் தங்கபெருமாள் பிள்ளையுடன் இருந்தபோது (1922) “குடியரசு”
எனும் இதழைத் தொடங்கப் பெரியார் எண்ணினார். அக்கனவு 1924இல் நனவானது.
இதழின் முகப்பில் பாரதமாதா படம், மகாத்மா காந்தி வாழ்க எனும் வாசகமும்
இடம் பெற்றது தலையங்கப் பக்கத்தில் கைராட்டை இடம் பெற்றது.
மக்களின் சுயமரியாதை ஓங்க வேண்டும்.
சாதி என்ற சொல்லே சாக வேண்டும்.
இன உணர்வுகளும் ஒற்றுமையும் உருப்பெற வேண்டும்.
என நினைத்த பெரியார் 1933 இல் குடிஅரசு தடை செய்யப்பெற்ற பின் புரட்சி “பகுத்தறிவு, விடுதலை உண்மை”,
போன்ற இதழ்களைத் தொடங்கி நடத்தினார். பகுத்தறிவில் அவர் முன் வைத்த
எழுத்துச் சீர்திருத்தமே இன்று நடைமுறையில் உள்ளது. எழுதியதோடு
மட்டுமல்லாது, செயல்பாட்டிலும் சிறந்து விளங்கினார். தாழ்த்தப்பட்டோர்
அவரால் வைக்கம் தெருவில் கம்பீரமாய் நடந்தனர். வ.வே.சு.ஐயர்
சேரன்மகாதேவியில் நடத்திய பரத்வாஜ குருகுலத்தில் நடைபெற்ற சாதிய ஏற்றத்
தாழ்வுகளை எதிர்த்து எழுதித் தீண்டாமையைத் தடுத்தார். 48 ஆண்டுகள்
பத்திரிகையாளராய் எழுதிச் சாதனை படைத்தார் வெண்தாடி வேந்தர் ஈ.வே.ரா.
பெரியார்.
பேரறிஞர் அண்ணாவும் சமூக மாற்றமும்
அரசியல் விழிப்புணர்ச்சி சீர்திருத்தம், பகுத்தறிவு கருத்துக்களோடு அண்ணா 1942ல் திராவிடநாடு இதழில் அனலாய் எழுதினார். “தம்பிக்கு”
என் கடிதம் மூடநம்பிக்கைகளைச் சாடினார். 21 ஆண்டுகள் திராவிட இன
எழுச்சிக்காக, மொழிவளர்ச்சிக்காக அரியகட்டுரைகள் தந்தார் அறிஞர் அண்ணா
நவயுகம், விடுதலை, பாலபாரதி, மாலைமணி, நம்நாடு, காஞ்சி போன்ற இதழ்களில்
எழுதித் தொடர்ந்து சமூக மாற்றம் கண்டார்.
ஆனந்த விகடனின் சமூகப் பார்வை
“பிரம்மன் எழுத்து ஆயுசோடு முடிகிறது. ஆனால் பேனா பிடித்தவன் எழுத்து எத்தனை காலம் நீடித்து நிற்கிறது”.
(அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் ப.96) என்று கூறிய எஸ்.எஸ்.
வாசன் புதூர் வைத்தியநாதையரிடமிருந்து எழுத்துக்கு 25 ரூபாய்வீதம் தந்து
1926 இல் ஆனந்த விகடனை வாங்கி வெற்றிகரமாய் நடத்தினார். சென்னையிலிருந்து
கொண்டே ஈரோட்டில் ஈ.வெ.ரா. பெரியார் நடத்திய “குடியரசு”
இதழுக்கு விளம்பரம் சேகரித்து அனுப்பினார். கேலிச்சித்திரங்கள்,
தலையங்கங்கள் மூலம் சமூக மாற்றத்திற்கு ஆதரவு அளித்தார். ஆனந்தவிகடன் நாடக
இலக்கியப் போட்டிகள், முத்திரைக்கதைகள் போட்டி, முத்திரை ஓவியங்கள்
போட்டிகள் நடத்தி சமூக மறுமலர்ச்சியினை ஏற்படுத்திப் பெரும்பரிசு தந்தார்.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை விகடனில் நடைமுறைப்படுத்தி
ஸ்ரீமான்களைத் திருவாளராக்கினார். “விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டம்”
வகுத்து இளைஞர்களைச் சமூக மாற்றத்திற்காக எழுத வைத்தார். கல்கியின்
தியாக பூமியை ஆனந்த விகடனில் வெளியிட்டு நாட்டுப்பற்று, தீண்டாமை ஒழிப்பு,
பெண்ணுரிமை ஆகியவற்றை இலட்சக்கணக்கான வாசகர்கள் சிந்திக்க வைத்தார்.
இன்றும் இதே போக்கு ஜுனியர் விகடன் (1982லிருந்து) அவள் விகடன் (1996லிருந்து) சுட்டி விகடன் (1999லிருந்து) சக்திவிகடன் (2004லிருந்து) நாணயம் விகடன் (2005லிருந்து) சிறப்பாகத் தொடர்கிறது.
கலைஞரின் எழுத்தோவியங்களில் சமூக மாற்றம்
திருக்குவளையில் மாணவராயிருந்தபோதே மாணவநேசன் கையெழுத்து இதழ் நடத்திய
கலைஞர் மு.கருணாநிதி குடி-அரசு இதழில் துணை ஆசிரியராய் பணியாற்றி விதவை
மறுமணம். பகுத்தறிவு, இந்தி எதிர்ப்பு பற்றிய நிறைய எழுதியுள்ளார். மறவன்மடல், முத்தாரம்
போன்ற இதழ்களை நடத்திய கலைஞரின் எழுத்து, கத்தியை விடக் கூர்மையான
நாசூக்கா கலைஞர் எழுதும் திறன் பார்த்துத் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் “கருணாநிதியைப் போலப் பொடி வைத்து எழுத வேண்டும்” எனப் பாராட்டினார் முரசொலி நாளிதழை உருவாக்கிப் பேனா முனையில் கலைஞர் சமூக மாற்றம் செய்து தமிழக முதல்வராய் அரியாசனம் ஏறி உள்ளார்.
தினமணியின் சமூகச் சிந்தனை
இதழாளர் திரு. சந்தானத்தால் 11.09.1934இல் தொடங்கப் பெற்ற தினமணி
தேசப்பற்றை மிகத் தரமான தமிழில் தந்தது. முதல் எட்டு ஆண்டுகள்
டி.எஸ்.சொக்கலிங்கமும், அதன் பின் ஏ.என். சிவராமனும், ஐராவதம் மகாதேவன்,
புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா போன்றோர் பணியாற்ற உருவான தினமணி என்றும்
எவருக்கும் எதற்கும் அஞ்சாமல், தரமாக, ஏழை எளிய மக்களின் சமூக
மறுமலர்ச்சிக்காகத் தொண்டாற்றி வருகிறது.
முந்தித் தந்தி தந்த முன்னவர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார்
தமிழரின் சமூக மாற்றத்திற்காக “நாம் தமிழர் இயக்கம்“ கண்ட, தமிழர் தந்தை
சி.பா. ஆதித்தனார் மக்களிடம் தமிழைக் கொண்டு சென்று கோடிக்கணக்கான மக்களை
வாசிக்க, எழுதவைத்தார். உள்ளுர்
பிரச்சினைகளுக்கு அதிக முக்கியத்துவம் தந்து தந்தியில் வெளியிட்டார்.
உலகப்போரில் தினத்தந்திக்குக் காகிதப் பஞ்சம் ஏற்பட்டபோது வைக்கோலை
அரைத்துத் தாள் தந்து கைத்தாள் தந்தி தந்தார். தொழில் துறையில் பின்தங்கிய
தென் மாவட்டத்தின் சேரன்மகாதேவியில் 1962ல் சன் காகித ஆலையை
உருவாக்கினார். “இந்தியாவிலேயே
தமிழ்ப் பத்திரிக்கைகள்தான் அதிகம் விற்பனையாகின்றன. இதற்குக் காரணம்
பேச்சு வழக்கிலுள்ள மொழியை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்”
என்று மேனாள் பாரதப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தந்தியைப் புகழ்ந்து
பேசியுள்ளார். ஆண்டியார் பாடுகிறார். சாணக்கியன் சொல் ஆகிய பகுதிகள் பாமர
மக்களைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
தொகுப்புரை
சமூக மாற்றம் என்பது இரவில் சிந்தித்துக் காலையில் அரங்கேறுவது அன்று. அது நீண்ட தொடர் முயற்சி; அதில் தொடர்ந்து தமிழ் இதழ்கள் சிறப்பாகச் செயல்படுகின்றன.
நேதாஜியின் பீராங்கிகளுக்கு அஞ்சியதை விடப் பாரதியின் இந்தியா
காகிதங்களுக்கு ஆங்கிலேயர் அஞ்சினர். ஆயுதங்களால் முடியாததைத் தமிழ்க்
காகிதங்கள் சாதித்துள்ளன.
தமிழரை வாசிக்க வைத்துப் புதிய மரபுகளை நோக்கிக் கொண்டு சென்ற
புதுமைப்பித்தன், கு.பா.ரா. ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, வண்ணதாசன்
போன்றோரின் எழுத்துக்களைத் தொடர்ந்து வெளியிட்டுச் சமூகம் மாற்றம் காணத்
தமிழ் இதழ்கள் உறுதியாய் உதவுகின்றன.
மொழிப்போர் நடந்தபோது திருவனந்தபுரத்திலும் “தினமலர்“ கொண்டு வந்து
டி.வி.ராம சுப்பையரும் குறிப்பிடத்தக்கவர்தாம் குமுதம் இதழைப் பல
லட்சக்கணக்கில் வாசகரிடம் கொண்டு சென்ற எஸ்.ஏ.பி.யும் பாராட்டுக்குரியவர்.
புதிய நோக்கோடு செயல்பட்டு புதுப்புனல், ரசனை, அம்ருதா, புன்னகை
காலச்சுவடு, உயிர்மை, பறை தீராநதி, கணையாழி, இந்தியாடுடே, கசடதபற போன்ற
சிற்றிதழ்களின் பங்களிப்பையும் மறுக்க இயலாது.
6.
குரோட்டன்ஸ் செடிகளைத் தொட்டியில் நட்டு அழகு பார்ப்பதை விட, அதே மண்ணில்
பூசணி விதை போட்டு நாம் உருவாக்கித் பூசணிக்காய் இச்சமுதாயத்தில் ஒருவனது
பசி அகற்றும். அறியாமைப் பசியகற்றும் அரும் பணியைத்தான் இச்சமூகம் இன்று
பத்திரிகையாளர்களிடம் எதிர்பார்க்கிறது.
தந்தை பெரியாரின் குடிஅரசு இதழின் 80 ஆண்டுகள் நிறைவின் நினைவாக தமிழ்த்தினை நடத்திய இதழ்கள் எனும் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை. (மார்ச். 2007, திருச்சிராப்பள்ளி) இதழியல் ஆய்வுக்கோவை (பக்.223 – 227)
வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்
பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி – 627 011.
முன்னுரை
தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற
சிறுகதை. கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற
கல்யாண்ஜி. 1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய
வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச்
சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.
தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண்
ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும்
முதற்பொருளாக்குகிறார். ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம்,
பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
“தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழினி பகுதியொடு
அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
தலைவன்
தலைவி ஆகியோரின் மனவுணர்வினைக் கருப்பொருட்கள் மீது ஏற்றி, அவற்றின்
பின்னணியில் பாத்திரங்களின் ஆழ்மனப்பதிவைச் சங்க இலக்கியங்கள் அழகாக
விளக்கின. இறையனாரின் குறுந்தொகைக் கவிதை
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது, கண்டது மொழிமோ.
பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ, நீ அறியும் பூவே“2
“மயில்
போன்ற அழகான பற்களுடைய அப்பெண்ணின் கூந்தலை விட அதிக வாசனையுள்ள பூ
உள்ளதா? என்ற தலைவனின் கேள்வி, அழகிய இறக்கை உடைய வண்டினை நோக்கியே
அமைகிறது. வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு
உருவாக்கப்பட்டு மானுட வளர்ச்சிச் சிந்தனையோடு அமைகின்றன. “நான் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டதெல்லாம் அதன் பிரமாண்டமும் மௌனமும் மட்டுமே“3
என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்து வண்ணதாசனுக்குப்
பொருந்துகிறது. கவிஞர் அறிவுமதியின் “கடைசி மழைத்துளி“ கவிதைத் தொகுதிக்கு
வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சுற்றுச்சூழல் சார்ந்த அவரது கருத்தியலை
முன்வைக்கிறது. படைப்பாளியுடன் ஆய்வாளர். நிகழ்த்திய நேர் காணலில்
“ரொம்பச் சமீபகாலக் கடிதங்களில்“ நான் என்னை ஒரு தாவரமாக உணர்கிறேன் என்றே
பதிவு செய்துள்ளேன்“4 என்று வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், பெயர்
தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப்பறத்தல், கிருஷ்ணன்
வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும் ஒளியிலே தெரிவது ஆகிய பத்து சிறுகதைத்
தொகுதிகளிலும் வண்ணதாசனின் இயற்கை சார்ந்த பதிவுகளாகவே அமைகின்றன. வற்றாத
ஜீவ நதி தாமிரபரணி, வெட்டப்படும் மரங்கள் அதிகாலைகளை அழகாக்கும் பூக்கள்,
வானில் சுதந்திரமாய் பறக்கும் பறவைகள், அடிக்கடிக் கனவில் வரும் யானைகள்
இவைகளே வண்ணதாசன் சிறுகதைகளை அழகு செய்வன.
“வெளியேற்றம்“ சிறுகதையில் வீட்டுவேலை செய்ய வந்த சிறுமி யாரோ அங்கிருந்த
மரத்தை வெட்டுவதைக் கண்டு வருந்துகிறாள். அவளது துடிப்பை வண்ணதாசன்,
“இது வெட்டப்பட்டு முறிய முறிய அவளுக்குள் இருந்து பறவைகளின் சப்தம்
“சலார்“ என்று ஒரே சமயத்தில் வேட்டுக்கு அதிர்ந்து இறக்கையடித்துப்
புறப்பட்டு, ஆனால் முடியாமல் முட்டுவது போலத் தோன்றியது”5 என்கிறார்.
வண்ணார்பேட்டையில் தாமிரபரணியின் வட்டப் பாறையை, முங்கிப் படுத்திருக்கும் யானையின் முதுகோடு ஆசிரியர் ஒப்புமைப்படுத்துகிறார்.
“யானை முங்கிப்படுத்திருப்பது மாதிரி வட்டப்பாறை இருந்தது“6 தாத்தாவின் முகத்தை விளக்க
“பசலிக்கொடி மாதிரி குளிர்ச்சியாக இருந்தது தாத்தா முகம்“7 என்றும் “டம்ளருக்குள் ஒரு புழுவைப்போலச் சேமியா கிடந்தது“8 சத்தமில்லாமல் ஓடுகிற நதியின் கரையில் நிற்கிற மாதிரி இரைச்சல் ஏதுமற்ற அலுவலகத்தில் நின்றான்”9 என்று பல உவமைகளைக் கையாண்டுள்ளார்.
வண்ணதாசன் சிறுகதைகளைச் செறிவாக்கப் பயன்படுத்தும் உவமைகளில் இயற்கை
சார்ந்த உவமைகள் (34 சதவீதம்) முதலிடம் பிடிப்பதாக இவ்வாய்வாளர் தம்
முனைவர்; தம் முனைவர் பட்ட ஆய்வேட்டில் நிறுவியுள்ளார்.
“சூரியன் அருகில் பறக்கிறவர்கள்“ கதையில் சூரியனுக்கு அருகே பறக்க ஆசைப்பட்டு எரிந்து போகிற “இக்காரஸ்“ எனும் கிரேக்கத் தொன்மத்தைப் படைத்துள்ளார்.
தாமிரபரணி, வண்ணதாசன் சிறுகதைகளின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது.
“பெய்தலும் ஓய்தலும்“ கதைத் தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள
முன்னுரையில் “நதியும்
மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது. இதுவரை அது தன் நீர்மையை மணலால்
உச்சரித்துக் கொண்டு வந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக் கழிவுகளில்
மீன்கள் மூச்சுத் திணறுகின்றன. நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து
ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்தத் தினத்துக் கவிதை இருக்க
முடியும்.“10 மண்ணள்ளும் அசுர எந்திரங்களால் மொட்டையடிக்கப்படும் தாமிரபரணியின் தற்கால நிலையைப் படைப்பாளி வேதனையோடு பதிவு செய்துள்ளார்.
புறவுலகின் அதிர்வுகள் அவரது அக உலகை உலுக்கும்போது அதைப் படைப்பாக
மாற்றுகிறார். 1984 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா
காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், நாட்டில் நடைபெற்ற இனக்கலவரத்தில்
இறந்துபோனோரின் சடலங்களை ஒப்புமைப்படுத்துகிறார். “பெயர் தெரியாமல் ஒரு
பறவை“ கதையில், பெயர் தெரியாமல் இறந்து கிடக்கும் பறவையை வண்ணதாசன் இவ்வாறு
வர்ணிக்கிறார்.
நாட்டில் நடைபெற்ற துயரமான சம்பவத்தைப் பறவையோடு இணைத்து வண்ணதாசன் சிறுகதையாகப் படைத்தார். “குழந்தைகளை
மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில்
நிர்த்தாட்சண்யமின்றி எறிந்து போகிற சமீபத்திய இனக்கலவரங்கள் ஞாபகம்
வந்தது. வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசையாக வயிறூதிக்
கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்தி ஒருத்தன் கைகளில்
ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்புழ்,
இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடலைக்கண்டு, அதனருகே உட்கார்ந்து அழுகிற
தகப்பனின் கிழிந்த முகம், அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன
சிரிப்புப் போலப் புகைப்படத்தில் பதிவாயிருப்பது எல்லாம் கலந்து அந்த
ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது”11
கல்யாண்ஜி கவிதைகளில் “இயற்கை“ சித்திரிப்பு
திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோது
சீட்டுக்கவிகள் எழுதிய டி.எஸ். கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசன், கவிதைகளை
கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் எழுதியுள்ளார். மொழியின்
சுருக்கெழுத்தாகக் கல்யாண்ஜி கவிதைகள் படைக்கிறார்.
“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க
நவகவிதை“12
என்று கவிதைக்குப் பாரதி வகுத்த இலக்கணம் கல்யாண்ஜி கவிதைகளுக்குப் பொருந்துகிறது.
கல்யாண்ஜியின் கவிதைகள் ஆழமான சிந்தனைத்தளத்தில் சொற்சித்திரங்களாகக்
கட்டமைப்பட்டுள்ளன. அழகியல் தன்மை மிகுந்தனவாக, இயற்கையைக் கொண்டாடும்
தன்மையுடையனவாக அமைகின்றன. தாமிரபரணி மண்ணை விட்டுப் பிரிந்த பிரிவின்
வருத்தமும், இயற்கை மீதான தாக்குதல் குறித்த வருத்தமும் அவரது கவிதைகளில்
பதிவாகியுள்ளன.
“செப்பறைத் தேரிலும்
படியும்
சிமெண்ட் ஆலைப்புழுதி“13
என்று
எழுதும் கல்யாண்ஜி, சிமெண்ட் ஆலையால் திருநெல்வேலி படும் பாட்டினைப்
பதிவு செய்துள்ளார். இயற்கையின் மீது கல்யாண்ஜி தொடக்ககாலம் முதலே பாசம்
கொண்டிருந்தார். அது காலப்போக்கில் வளர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு
தொடர்பான அக்கறையாக மாறியது. வண்ணதாசன் 1966ஆம் ஆண்டு வ.உ.சி. கல்லூரியின்
வணிகவியல் மாணவராகப் பயின்றபோது எழுதிய “அந்தி மனம்“ எனும் இயற்கை
சார்ந்த கவிதையை ஆய்வாளர் தன் ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளார்.
“அழகுக் கவிதை செய அட்சரங்கள் கோர்த்தது போல்
அந்திக் கரைவானில் அஞ்சனத்தைக் குழம்பாக்கி
அள்ளிப் பரப்பி அங்கிங்கே விட்டெறிந்து
புள்ளி சேர்த்துப் புனைகின்ற கோலமென
வெள்ளிப் பிழம்பாய் வீசுகதிர் பாய்ந்துவரக்
கொள்ளி நுனியாகக் குருதிச் சிவப்பாக
பள்ளிச் சிறுபையன் பட்ட பிரம்படியால்
உள்ளங்கைச் செம்மை உருவேற்கும் ஒன்றாக
வானம் இருந்ததுகான்! வார்ப்பழகு கொண்டதுகான்!
மோனத்துள் நான், அழகில் மூழ்கியது பித்து மனம்!“14
அறுபதுகள்
முதலே கல்யாண்ஜி அழகியல் கவிஞராக இயற்கைக் கவிஞராகத் திகழ்ந்ததை அறிய
முடிகிறது. புலரி, கல்யாண்ஜி கவிதைகள், முன்பின், அந்நியமற்ற நதி, நிலா
பார்த்தல், உறக்கமற்ற மழைத்துளி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள்,
இன்னொரு கேலிச் சித்திரம் ஆகிய கல்யாண்ஜியின் எட்டுத் தொகுதிகளிலும் இயற்கை
சார்ந்த அவரது மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைக் காணமுடிகிறது.
“நேரடி வானத்தில்
தெரிவதை விடவும்
நிலா அழகாக இருப்பது
கிளைகளின் இடையில்“15
என்று நிலாவைக் கவிஞர் வர்ணிக்கிறார்
“மார்கழி மாத அதிகாலையில் போனால்
பீர்க்கம் பூக்களையும் நட்சத்திரங்களையும்
நாமே எட்டிப் பறித்துக் கொள்ளலாம்.“16
கல்ணாஜி
கவிதைகளில் இடம்பெறும் பூக்கள் நிறத்தாலும் மணத்தாலும் தோற்றத்தாலும்
உள்ளார்ந்த ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன. தமிழர்
பண்பாட்டில் அகவாழ்விலும் புறவாழ்விலும் பூக்களே நிறைந்திருக்கின்றன.
போர்ச் செய்திகளை அறிவிக்கும் ஊடகமாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி,
ஊழிஞை, நொச்சி போன்ற மலர்களைச் சங்க இலக்கியம் சொல்கிறது.
அகப்பாடல்களிலும் பூக்கள் உள்ளுறையும் செய்திகளோடு அழகியல் நோக்கில் பதிவு
செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. கல்யாண்ஜி கவிதைகள் குறித்து
வல்லிக்கண்ணன் கருத்து தெரிவிக்கும்போது, “தொடர்பே இல்லாத பல விஷயங்களைத் தொகுத்து வாழ்க்கையின் யதார்த்தத்தை சித்திரிக்கிற முயற்சிகளாக அவை உள்ளன. மனசின் அலை பாய்தல்களாக அழகுடன் சிதறிக் சிரிக்கும் சொற்சித்திரங்களாகப் பல கவிதைகள் விளங்குகின்றன. சொற்சித்திரங்களாக
சிறுகவிதைகள் மிளிர்கின்றன. அவை எல்லாமே அழகை நேசிக்கிற, அன்பை
ஆராதிக்கிற, மனிதத்தை மதிக்கிற மென்மையான உள்ளத்தின் இனிய உணர்வு
வெளிப்பாடுகளாகும்.“17
முடிவுரை
இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடியாக அமைகிறது. ஓர் உயர்ந்த இலக்கை நோக்கி
மனிதனை அழைத்துச் செல்கிறது. மானுட வளர்ச்சிக்கான மதிப்பீடுகளைக்
காலந்தோறும் வழங்கிக் கொண்டே இருக்கிறது. “நான் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறேன். அவரவரின் பலங்களோடும் பலவீனங்களோடும்“
என்று கூறும் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்களாக
அமைகின்றன இயற்கையைப் போற்றுதலே மானுட வளர்ச்சியின் முதல்படி என்ற
கருத்தியலை வலியுறுத்துகின்றன. யாவற்றையும் இரசிக்கக் கற்றுத் தருகின்றன.
கல்யாண்ஜியின் கவிதைகளில் வண்ணதாசனின் கதைகூறும் தன்மையும், வண்ணதாசன்
சிறுகதைகளில் கல்யாண்ஜியின் கவிதைத் தன்மையையும் நம்மால் உணர முடிகிறது.
மரங்களை அவர் நேசித்தார்,
“பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய“18
“கூடுமானவரை
இயற்கை மனிதர்களைப் பத்திரமான இடத்தில்தான் வைக்கிறது. நாம் எவ்வளவுதான்
அவற்றைப் பத்திரக் குறைவான இடத்துக்குக் கொண்டு போனாலும்“19 என்கிறார் வண்ணதாசன் இயற்கையைப் பாதுகாக்கத் துடிக்கும் உயர்ந்த சிந்தனையே வண்ணதாசனின் மானுட வளர்ச்சிச் சிந்தனை.
குறிப்புகள்
1. தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். 20.
2. குறுந்தொகை, பா.2.
3. எஸ். ராமகிருஷ்ணன், கதாவிலாசம், ப.105.
4. ச. மகாதேவன், வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பி.இ.ப.19.
5. வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.344.
6. மேலது. ப.953.
7. மேலது. ப.918.
8. மேலது. ப.250.
9. மேலது. ப.181.
10. வண்ணதாசன், பெய்தலும் ஓய்தலும், ப.7.
11. வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.358.
12. பாரதியார், பாரதியார் கவிதைகள், ப.28.
13. அறிவுமதி, கடைசி மழைத்துளி, ப.12.
14. ச. மகாதேவன் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு. ப.179.
15. கல்யாண்ஜி, இன்னொரு கேலிச் சித்திரம், ப.59.
16. மேலது, ப.71.
17. கல்யாண்ஜி, உறக்க மற்ற மழைத்துளி, பக.5-6.
18. கல்யாண்ஜி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், ப.64.
19. வண்ணதாசன், அகம் புறம், ப.86.
திருநெல்வேலி
சாரள்தக்கர் மகளிர் கல்லூரித்தமிழ்த் துறை நடத்திய “மானுட வளர்ச்சியில்
நவீன இலக்கியங்கள்“ எனும் கருத்தரங்கில் வாசித்த ஆய்வுக்கட்டுரை
OLDER POST
ABOUT US
- Unknown
Popular Posts
Pages
About
Copyright@Dr.s.Mahadevan Design By AJ Webdesigner