கட்டுரைகள்

Posted

         சி. பா. ஆதித்தனாரின் இதழியல் சாதனைகள்
பேராசிரியர் முனைவர் . மகாதேவன், எம்.., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

மொழி உணர்வு அற்றுப் போய்விட்ட காலச் சூழ்நிலையில் அவ்வுணர்வினை ஊட்டும் எழுச்சிமனிதர்களின் தேவை கட்டாயமாகிவிட்டது.  சுதந்திர உணர்வு குன்றிய காலத்தில் பாரதியின் எழுதுகோல் எரிமலையாக எழுச்சியை ஏற்படுத்தியது.  நாளிதழ்கள் யாவும் ஆங்கிலத்தில் அல்லது வடமொழி கலந்து எழுதி வந்த காலகட்டத்தில் தந்தியின் தந்தையாக, தமிழர் தந்தையாகத் தோன்றி இதழியல் துறையில் சாதனை படைத்த மாமனிதர் பெருமதிப்பிற்குரிய ஐயா திரு.சிவந்தி பாலசுப்பிரமணியன் ஆதித்தனார் அவர்கள். சி.பா. ஆதித்தனார் 1905 ஆம் ஆண்டு அப்போதைய நெல்லை மாவட்டத்தின் காயாமொழி எனும் ஊரில் பிறந்தார்.  தமிழரின் சிறப்பை உலகறியச் செய்ய நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கினார்.  தமிழுக்காகப் பலமுறை சிறை சென்ற தூய தமிழ்த் தொண்டராகவும் அவர் திகழ்கிறார்.  உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு என வாழ்ந்தார்.  தமிழக அமைச்சராகவும், சட்டப்பேரவைத் தலைவராகவும் தலைமையேற்றுத் தொண்டு புரிந்தபோது திருக்குறளை இவர் அரியணையில் அமரவைத்தார்.
இதழாளர் சி.பா. ஆதித்தனார்
    தமிழைப் பாமர மக்களிடம் கொண்டு செல்லும் ஊடகமாகச் செய்தித்தாளைக் கருதினார் சி.பா. ஆதித்தனார்.  ஆதித்தனாரின் இதழியல் பணி செய்திக் கடிதங்களிலிருந்து தொடங்கியது.  இலண்டனில் இருந்தவாறே டைம்ஸ் ஆப் இந்தியா, ஆஜ் போன்ற இதழ்களுக்குச் செய்திக் கடிதங்கள் வரைந்தார்.  அம்மாநகரிலிருந்து வெளிவரும் ஸ்பெக்லேட்டர் இதழில் ஆதித்தனார் எழுதினார்.  உலக ஏடுகளை எல்லாம் உற்று நோக்கிய ஆதித்தனார் தமக்கென்று தமிழில் தனித்துவம் மிக்க நாளிதழ் தொடங்கப் பேராவல் கொண்டார்.  சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த தமிழ்முரசு நாளிதழ் போலத் தமிழ்நாட்டில் மதுரையை மையமாகக் கொண்டுமதுரை முரசு எனும் இதழைத் தொடங்கி நடத்த, அதை ஆங்கிலேய அரசு தடை செய்ததால் தமிழன் எனும் நாளிதழைத் தொடங்கினார்.  முனைவர் என். ரெங்கநாதன் குறிப்பிடுவதைப்போல1942 இல் ஆகஸ்ட் 23 ஆம் நாளன்று தமிழன் முதல் இதழ் வெளிவந்தது.  பக்கத்திற்குப் பக்கம் படங்கள் அன்றைய கல்கி (10.09.1942) இரு வண்ணங்களில் அச்சிடப்படும் இதழ் தமிழ்நாட்டில் தமிழன் இதழ்தான் என்று பாராட்டியது.  அச்சமயத்தில்தான் தினத்தந்தி நாளிதழும் வெளியிடப்பட்டது.  தந்தி 15.10.1942 இல் பதிவு செய்யப்பட்டு 01.11.1942 இல வெளியாகிறது.  தினத்தந்தி இவ்வாறு உருப்பெறுகிறது.

சி.பா ஆதித்தனாரின் இதழியல் உத்திகள்
    தமிழரால் தமிழருக்காக நடத்தப்படும் இதழே தமிழன் எனத் தமிழ்ப்பற்றுக் கொள்கையோடு இதழைத் தொடங்கிய சி.பா. ஆதித்தனார் தமிழ் வளர்ச்சிக்கு இதழ்களை வெளியிட்டார்.
    வாசகனுக்குத் தேவையான செய்திகளை, பாமர மொழியில் கொச்சைச் சொற்களை நீக்கிப் புரியும்படி எழுதினார்.  எழுத்துக்கூட்டித் தேநீர் கடையில் படிப்பவன் கூடத் தினத்தந்தி வாசனானான். (.கா.) மாவட்ட ஆட்சித்தலைவரைக் கலெக்டர் என்றே தினத்தந்தி வெளியிடுகிறது.
    செய்திகளை முந்தித் தருவது தந்தி எனும் நிலையைச் சி.பா. ஆதித்தனார் உருவாக்கி உயிர்த்துடிப்புள்ள நாளிதழ் தினத்தந்தி என விளம்பரப்படுத்தினார்.
    யாரையும் குறை கூறாத தன்மையோடு தந்தியைத் தந்ததால், அரசியல் மாற்றங்கள் தினத்தந்தியின் விற்பனையைப் பாதித்ததில்லை.
    இறக்குமதி செய்யப்பட்ட அதி நவீன அச்சு இயந்திரத்தை ஆதித்தனார் பயன்படுத்தியதால், அதிரடியாக வரும் அதிகாலைச் செய்திகளைக் கூட உடனடியாக அச்சிட்டு, காலை 6 மணிக்குத் தந்துவிட முடிந்தது.
    செய்தித்தாள் தட்டுப்பாடு வந்துவிடக்கூடாது என்பதற்காக, அவர் சேரன்மகாதேவியில் உடை மரங்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் சன் காகித ஆலையை உருவாக்கினார்.  இதனால் பல பக்கங்களை வாசகர்களுக்குக் குறைந்த விலையில் தர முடிந்தது.
    பரபரப்பான செய்திகளை எட்டுப் பத்தியில் பருத்த எழுத்துக்களில் தலைப்பிட்டு வாசகரைக் கவர்ந்தார்.
    கருத்துப்படம் கேலிப்படங்களைத் தினத்தந்தியில் வெளியிட்டுப் பரப்பரப்பை ஏற்படுத்தினார்.
    காது விளம்பரங்கள், வரி விளம்பரங்கள், வேலைவாய்ப்பு விளம்பரங்கள் என விளம்பர வருவாயைப் பெருக்கி இதழை வளர்த்தார்.
    திரைக் கலைஞர்களை முன்னிலைப்படுத்தி நேர்முகம், கட்டுரைகள், திரை விமர்சனங்கள் வெளியிட்டதால் திரை விளம்பரங்களும் தந்தியை எட்ட உதவி செய்தார்.
    தினத்தந்தியின் ஆசிரியர் குழுவுக்கு வழிகாட்டும் வகையில் இதழாளர் கையேட்டினை வெளியிட்டார்.  இந்திய இதழியல் வரலாற்றில் இப்படிப்பட்ட அனுபவ, யதார்த்தமாக அமைந்த நூல் இதுவரை வந்ததில்லை என அறிவுலகம் பாராட்டும்படி அமைந்தது.  இன்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பயிலும் மாணவர்களுக்கு அந்நூல் வழிகாட்டியாக அமைகிறது.
    எல்லாப் பதிப்புகளையும் (14) அச்சிட்டு அனுப்பும் இடம் இரயில், பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையுமாறு செய்தவர் ஆதித்தனார்.  இதனால் ஓரிரு மணிக்குள் தந்தி பட்டி தொட்டிகளில் எல்லாம் கிடைக்க வழி செய்தார்.
    ஆதித்தனார் பரபரப்பான பெரிய எழுத்துக்களால் சுவரொட்டிகளைத் தயாரிக்கச் செய்து எல்லாக் கடைகளிலும் பளிச்சென்று தெரியுமாறு தொங்கவிடச் செய்தார்.  இதனால் அவ்வப்போது வாங்கிப் படிக்கும் வாசகர்களை ஈர்த்து நிரந்தர வாசகர்களாக மாற்றிக் கட்டிப்போட்டார்.
    வாசகருக்குப் புரியாத வெளிநாட்டுச் செய்திகளைத் தருவதை விட, அடுத்த தெருவில், அடுத்த ஊரில் நடக்கும் உள்ளுர்ச் செய்திகளைப் படத்துடன் ஆதித்தனார் வெளியிட்டதால் தந்தி பல இலட்சங்களை எட்டியது.
    சினிமாப் பாடல்களுடன் கூடிய ஆண்டியார் பாடுகிறார்.  தத்துவம் மூலம் நாசூக்காக விளக்கும் சாணக்கியன் சொல் இவை எல்லாம் ஆதித்தனாரின் மனத்தில் உதித்த உத்திகள்.
    மக்களின் சோதிட நம்பிக்கையை மனத்தில் கொண்டு ஆதித்தனார் சோதிடம், நாள், வார, மாத, வருடப் பலன்களை வெளியிட்டார்.
    காகிதவிலை உயர்வால் ஏனைய நாளிதழ்கள் விலையை ஏற்ற, சொந்தக் காகித ஆலையை ஏற்படுத்திய சி.பா. ஆதித்தனார் குறைந்த விலையில் தந்தியைத் தந்தார்.
ஆதித்தனார் சகாப்தம்
    பாரிஸ்டர் பட்டம் பெற்ற இலண்டனில் உயர் படிப்பு முடித்து வந்த மாகத்மா காந்தி, இந்திய சுதந்திரத்திற்காகத் தன் உடல், பொருள், ஆவி ஆகியவற்றைத் தந்து வென்று காட்டியதற்காக அவரைத் தேசப்பிதா எனப் பாரதம் பெருமையோடு அழைக்கிறது.  அதேபோல பாரிஸ்டர் பட்டம் பெற்று இலண்டன் வரை சென்று சாதித்த மாமனிதர் ஆதித்தனார், வழக்கறிஞராக நிலை பெற்றிருந்தால் பல கோடிகள் சம்பாதித்திருக்க முடியும்.  அதை எல்லாம் விட்டு, தமிழுக்காக, தமிழருக்காக, தமிழ் இதழியலுக்காக, அரும்பாடுபட்டதால் தமிழர் தந்தை எனத் தமிழ் கூறும் நல்லுலகம் பாராட்டியது.
    நான் தமிழ்ப் படிக்கக் கற்றுக் கொண்டதே தினத்தந்தியைப் பார்த்துத்தான் என முன்னாள் கவர்னர் பீஷ்ம நாராயண்சிங் குறிப்பிட்டார் என்றால் அதற்கு வித்திட்ட ஆதித்தனாருக்கு என்ன வார்த்தைகளால் நன்றி சொல்ல?  ஆங்கிலம் மட்டுமே உயர்ந்த மொழி, தமிழ் பேசுவது கேவலமானது, குறைவானது என இருந்தநிலையில் இதழை ஓர் இயக்கமாக மாற்றி இலட்சக்கணக்கான வாசகரை எட்டியவர் சி.பா. ஆதித்தனார்.
    அறிவித்தல், அறிவுறுத்துதல், வணிகம் செய்தல், மகிழ்வித்தல், எண்ணத்தை உருவாக்குதல் எனும் இதழியல் நோக்கங்களோடு, செயல்படத் தூண்டுதல் எனும் புதிய போக்கும் சி.பா. ஆதித்தனாரால் உருவானது.  சதக் சதக்என்று குத்தினான் என உணரச்சியோடு சம்பவத்தை வாசகர் மனத்திரையில் படமாக ஓட்டிக் காட்டிய சி.பா. ஆதித்தனாரின் உத்தியை இன்று பல இதழ்கள் பின்பற்றத் தொடங்கிவிட்டதை அறியமுடிகிறது.
    தகவல் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து இன்றைய சூழலில், சுவையாகச் சூடாகச் செய்தித் தாட்கள் வெளிவராவிட்டால் அழிவை நோக்கிச் செல்ல நேரிடலாம்.  முந்தைய நிமிட சம்பவத்தை அடுத்த நிமிடத்தில் தொலைக்காட்சிச் செய்திகள் படத்தோடு வெளியிடும் நிலையில் செய்தித்தாள் வெறும் செய்திகளை மட்டும் வெளியிட்டு வென்றுவிட முடியாது.  நாளிதழைச் சுவாரசியமாக்க, வாசகனைக் கவர்ந்திழுக்க சி.பா. ஆதித்தனாரின் இதழியல் உத்திகளைப் பயன்படுத்தியே தீர வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.  நர்சரிப் பள்ளிகளில் குழந்தைகள் தமிழில் பேசினாலே 10 ரூபாய் தண்டத் தொகை கட்ட வேண்டிய வருந்தத்தக்க நிலையில் தமிழ்நாடு இருக்கும் நிலையில் ஆதிததனாரின் நாம் தமிழர் இயக்கத்தின் தேவையும் அவருடைய தமிழ்ப்பற்றுடைய பார்வையும் இந்த நூற்றாண்டுக்கென மறுபதிப்புச் செய்ய வேண்டியுள்ளது.  அவ்வகையில் காலத்தைக் கடந்து நிற்கும் ஐயா சி.பா.ஆதித்தனார் பாரதியைப் போலத் தீர்க்கத்தரிசியே என்பதில் ஐயமில்லை.  நூற்றாண்டு கடந்து இன்றும் சகாப்தமாகத் திகழும் சி.பா.ஆதித்தனாரின் இதழியல் சாதனைகளை இன்னொருவர் செய்வது சாத்தியமில்லை.
பயன்பட்ட நூல்கள்
1.    சி.பா.ஆதித்தனார் நூற்றாண்டு விழா மலர். ஸ்ரீ பராசக்தி மகளிர் கல்லூரி, குற்றாலம்.
2.    குப்புசாமி குரும்பூர், அமைச்சர் ஆதித்தனார், ராணி பதிப்பகம்,
சென்னை – 7, 1978.
3.    சாமி. .மா. (1990) இதழாளர் ஆதித்தனார், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
4.    கலைவாணி. சோ. (1982) இதழியல் உத்திகள், ஸ்ரீ பராசக்தி வெளியீடு குற்றாலம்.
(இக்கட்டுரை ஆசிரியர் பாரதப் பிரதமரின் சத்பவனா தேசியவிருநது (1994) பெற்றவர்)
 
  
வண்ணதாசனின் இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சி சிந்தனைகள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.


முன்னுரை
    தற்காலத் தமிழின் நவீன இலக்கியப் படைப்பாளிகளில் தனித்துவம் பெற்ற சிறுகதை.  கவிதை, இலக்கியப் படைப்பாளியாகத் திகழ்பவர் வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி.  1962ஆம் ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவனாக எழுதத் தொடங்கிய வண்ணதாசன் தொடர்ந்து 48 ஆண்டுகளாக இயற்கை சார்ந்த மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைத் தந்து வருகிறார்.
வண்ணதாசனும் இயற்கையும்
    சங்க இலக்கியங்கள் இயற்கையைக் கொண்டாடும் இலக்கியங்களாகத் திகழ்கின்றன.  தொல்காப்பியர் “குறிஞ்சி முதல் பாலை“ வரையிலான ஐந்திணைகளை “நடுவண் ஐந்திணை“ என்று அகத்திணையியலில், வரையறுத்து நிலத்தையும் பொழுதையும் முதற்பொருளாக்குகிறார்.  ஐவகை நிலங்களின் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை போன்றவற்றைக் கருப்பொருளாக்கியுள்ளார்.
    “தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்தி யாழினி பகுதியொடு
    அவ்வகை பிறவும் கருவென மொழிப்“1
தலைவன் தலைவி ஆகியோரின் மனவுணர்வினைக் கருப்பொருட்கள் மீது ஏற்றி, அவற்றின் பின்னணியில் பாத்திரங்களின் ஆழ்மனப்பதிவைச் சங்க இலக்கியங்கள் அழகாக விளக்கின.  இறையனாரின் குறுந்தொகைக் கவிதை
   
“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
    காமம் செப்பாது, கண்டது மொழிமோ.
    பயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்
    செறி எயிற்று, அரிவை கூந்தலின்
    நறியவும் உளவோ, நீ அறியும் பூவே“2
“மயில் போன்ற அழகான பற்களுடைய அப்பெண்ணின் கூந்தலை விட அதிக வாசனையுள்ள பூ உள்ளதா? என்ற தலைவனின் கேள்வி, அழகிய இறக்கை உடைய வண்டினை நோக்கியே அமைகிறது.  வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் இயற்கையைப் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்டு மானுட வளர்ச்சிச் சிந்தனையோடு அமைகின்றன.  நான் இயற்கையிடமிருந்து கற்றுக் கொண்டதெல்லாம் அதன் பிரமாண்டமும் மௌனமும் மட்டுமே3 என்ற எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனின் கருத்து வண்ணதாசனுக்குப் பொருந்துகிறது.  கவிஞர் அறிவுமதியின் “கடைசி மழைத்துளி“ கவிதைத் தொகுதிக்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரை சுற்றுச்சூழல் சார்ந்த அவரது கருத்தியலை முன்வைக்கிறது.  படைப்பாளியுடன் ஆய்வாளர்.  நிகழ்த்திய நேர் காணலில் “ரொம்பச் சமீபகாலக் கடிதங்களில்“ நான் என்னை ஒரு தாவரமாக உணர்கிறேன் என்றே பதிவு செய்துள்ளேன்“4 என்று வண்ணதாசன் குறிப்பிட்டுள்ளார்.
    கலைக்க முடியாத ஒப்பனைகள், தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள், பெயர் தெரியாமல் ஒரு பறவை, மனுஷா மனுஷா, கனிவு, நடுகை, உயரப்பறத்தல், கிருஷ்ணன் வைத்த வீடு, பெய்தலும் ஓய்தலும் ஒளியிலே தெரிவது ஆகிய பத்து சிறுகதைத் தொகுதிகளிலும் வண்ணதாசனின் இயற்கை சார்ந்த பதிவுகளாகவே அமைகின்றன.  வற்றாத ஜீவ நதி தாமிரபரணி, வெட்டப்படும் மரங்கள் அதிகாலைகளை அழகாக்கும் பூக்கள், வானில் சுதந்திரமாய் பறக்கும் பறவைகள், அடிக்கடிக் கனவில் வரும் யானைகள் இவைகளே வண்ணதாசன் சிறுகதைகளை அழகு செய்வன.
    “வெளியேற்றம்“ சிறுகதையில் வீட்டுவேலை செய்ய வந்த சிறுமி யாரோ அங்கிருந்த மரத்தை வெட்டுவதைக் கண்டு வருந்துகிறாள்.  அவளது துடிப்பை வண்ணதாசன், “இது வெட்டப்பட்டு முறிய முறிய அவளுக்குள் இருந்து பறவைகளின் சப்தம் “சலார்“ என்று ஒரே சமயத்தில் வேட்டுக்கு அதிர்ந்து இறக்கையடித்துப் புறப்பட்டு, ஆனால் முடியாமல் முட்டுவது போலத் தோன்றியது5 என்கிறார்.
    வண்ணார்பேட்டையில் தாமிரபரணியின் வட்டப் பாறையை, முங்கிப் படுத்திருக்கும் யானையின் முதுகோடு ஆசிரியர் ஒப்புமைப்படுத்துகிறார்.
    “யானை முங்கிப்படுத்திருப்பது மாதிரி வட்டப்பாறை இருந்தது6 தாத்தாவின் முகத்தை விளக்க
    “பசலிக்கொடி மாதிரி குளிர்ச்சியாக இருந்தது தாத்தா முகம்“7 என்றும் “டம்ளருக்குள் ஒரு புழுவைப்போலச் சேமியா கிடந்தது“8  சத்தமில்லாமல் ஓடுகிற நதியின் கரையில் நிற்கிற மாதிரி இரைச்சல் ஏதுமற்ற அலுவலகத்தில் நின்றான்9 என்று பல உவமைகளைக் கையாண்டுள்ளார்.   
    வண்ணதாசன் சிறுகதைகளைச் செறிவாக்கப் பயன்படுத்தும் உவமைகளில் இயற்கை சார்ந்த உவமைகள் (34 சதவீதம்) முதலிடம் பிடிப்பதாக இவ்வாய்வாளர் தம் முனைவர்; தம் முனைவர் பட்ட ஆய்வேட்டில் நிறுவியுள்ளார்.
    “சூரியன் அருகில் பறக்கிறவர்கள்“ கதையில் சூரியனுக்கு அருகே பறக்க ஆசைப்பட்டு எரிந்து போகிற “இக்காரஸ்“ எனும் கிரேக்கத் தொன்மத்தைப் படைத்துள்ளார்.
    தாமிரபரணி, வண்ணதாசன் சிறுகதைகளின் மையப் புள்ளியாகத் திகழ்கிறது.  “பெய்தலும் ஓய்தலும்“ கதைத் தொகுப்பிற்கு வண்ணதாசன் எழுதியுள்ள முன்னுரையில் “நதியும் மணலற்றுப் போய்க் கொண்டிருக்கிறது.  இதுவரை அது தன் நீர்மையை மணலால் உச்சரித்துக் கொண்டு வந்தது. அள்ளப்பட்ட மணல், கலக்கிற சாயக் கழிவுகளில் மீன்கள் மூச்சுத் திணறுகின்றன.  நீந்துகிற மீன்களையல்ல, அதிகாலையில் இறந்து ஒதுங்கியிருக்கிற மீன்களைப் பற்றியே இந்தத் தினத்துக் கவிதை இருக்க முடியும்.“10  மண்ணள்ளும் அசுர எந்திரங்களால் மொட்டையடிக்கப்படும் தாமிரபரணியின் தற்கால நிலையைப் படைப்பாளி வேதனையோடு பதிவு செய்துள்ளார்.
    புறவுலகின் அதிர்வுகள் அவரது அக உலகை உலுக்கும்போது அதைப் படைப்பாக மாற்றுகிறார்.  1984 ஆம் ஆண்டு, அன்றைய பாரதப் பிரதமர் திருமதி இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின், நாட்டில் நடைபெற்ற இனக்கலவரத்தில் இறந்துபோனோரின் சடலங்களை ஒப்புமைப்படுத்துகிறார்.  “பெயர் தெரியாமல் ஒரு பறவை“ கதையில், பெயர் தெரியாமல் இறந்து கிடக்கும் பறவையை வண்ணதாசன் இவ்வாறு வர்ணிக்கிறார்.
    நாட்டில் நடைபெற்ற துயரமான சம்பவத்தைப் பறவையோடு இணைத்து வண்ணதாசன் சிறுகதையாகப் படைத்தார். “குழந்தைகளை மனிதர்களையெல்லாம் அடித்து இரவோடிரவாக இப்படி வாசல்களில் நிர்த்தாட்சண்யமின்றி எறிந்து போகிற சமீபத்திய இனக்கலவரங்கள் ஞாபகம் வந்தது.  வயலில் அகோரமாய்ச் செத்துக் கிடக்கிற கிழவி, வரிசையாக வயிறூதிக் கிடத்தப்பட்டிருக்கிற சிசுக்களின் வரிசையை அதிகப்படுத்தி ஒருத்தன் கைகளில் ஏந்திவருகிற இன்னொரு மல்லாந்த குழந்தையின் ஊதின வயிற்றுத் தொப்புழ், இறந்து கிடக்கிற தன் குழந்தையின் உடலைக்கண்டு, அதனருகே உட்கார்ந்து அழுகிற தகப்பனின் கிழிந்த முகம், அப்படிக் கிழிந்த நிலையில் ஒரு கைத்துப்போன சிரிப்புப் போலப் புகைப்படத்தில் பதிவாயிருப்பது எல்லாம் கலந்து அந்த ஒற்றைப் பறவையாகக் குப்புறக் கிடந்தது11  
கல்யாண்ஜி கவிதைகளில் “இயற்கை“ சித்திரிப்பு
    திருநெல்வேலி சாப்டர் மேல்நிலைப்பள்ளி மாணவராகப் பயின்றபோது சீட்டுக்கவிகள் எழுதிய டி.எஸ். கல்யாண சுந்தரம் என்கிற வண்ணதாசன், கவிதைகளை கல்யாண்ஜி எனும் புனைப்பெயரில் எழுதியுள்ளார்.  மொழியின் சுருக்கெழுத்தாகக் கல்யாண்ஜி கவிதைகள் படைக்கிறார்.
    “சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
    வளம் புதிது, சொற் புதிது, சோதிமிக்க
    நவகவிதை“12
என்று கவிதைக்குப் பாரதி வகுத்த இலக்கணம் கல்யாண்ஜி கவிதைகளுக்குப் பொருந்துகிறது.
    கல்யாண்ஜியின் கவிதைகள் ஆழமான சிந்தனைத்தளத்தில் சொற்சித்திரங்களாகக் கட்டமைப்பட்டுள்ளன.  அழகியல் தன்மை மிகுந்தனவாக, இயற்கையைக் கொண்டாடும் தன்மையுடையனவாக அமைகின்றன.  தாமிரபரணி மண்ணை விட்டுப் பிரிந்த பிரிவின் வருத்தமும், இயற்கை மீதான தாக்குதல் குறித்த வருத்தமும் அவரது கவிதைகளில் பதிவாகியுள்ளன.
    செப்பறைத் தேரிலும்
    படியும்
    சிமெண்ட் ஆலைப்புழுதி“13
என்று எழுதும் கல்யாண்ஜி, சிமெண்ட் ஆலையால் திருநெல்வேலி படும் பாட்டினைப் பதிவு செய்துள்ளார்.  இயற்கையின் மீது கல்யாண்ஜி தொடக்ககாலம் முதலே பாசம் கொண்டிருந்தார்.  அது காலப்போக்கில் வளர்ந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அக்கறையாக மாறியது.  வண்ணதாசன் 1966ஆம் ஆண்டு வ.உ.சி. கல்லூரியின் வணிகவியல் மாணவராகப் பயின்றபோது எழுதிய “அந்தி மனம்“ எனும் இயற்கை சார்ந்த கவிதையை ஆய்வாளர் தன் ஆய்வேட்டில் பதிவு செய்துள்ளார்.
    “அழகுக் கவிதை செய அட்சரங்கள் கோர்த்தது போல்
    அந்திக் கரைவானில் அஞ்சனத்தைக் குழம்பாக்கி
    அள்ளிப் பரப்பி அங்கிங்கே விட்டெறிந்து
    புள்ளி சேர்த்துப் புனைகின்ற கோலமென
    வெள்ளிப் பிழம்பாய் வீசுகதிர் பாய்ந்துவரக்
    கொள்ளி நுனியாகக் குருதிச் சிவப்பாக
    பள்ளிச் சிறுபையன் பட்ட பிரம்படியால்
    உள்ளங்கைச் செம்மை உருவேற்கும் ஒன்றாக
    வானம் இருந்ததுகான்! வார்ப்பழகு கொண்டதுகான்!
    மோனத்துள் நான், அழகில் மூழ்கியது பித்து மனம்!“14
அறுபதுகள் முதலே கல்யாண்ஜி அழகியல் கவிஞராக இயற்கைக் கவிஞராகத் திகழ்ந்ததை அறிய முடிகிறது.  புலரி, கல்யாண்ஜி கவிதைகள், முன்பின், அந்நியமற்ற நதி, நிலா பார்த்தல், உறக்கமற்ற மழைத்துளி, கல்யாண்ஜி தேர்ந்தெடுத்த கவிதைகள், இன்னொரு கேலிச் சித்திரம் ஆகிய கல்யாண்ஜியின் எட்டுத் தொகுதிகளிலும் இயற்கை சார்ந்த அவரது மானுட வளர்ச்சிச் சிந்தனைகளைக் காணமுடிகிறது.

“நேரடி வானத்தில்
    தெரிவதை விடவும்   
    நிலா அழகாக இருப்பது
    கிளைகளின் இடையில்“15
என்று நிலாவைக் கவிஞர் வர்ணிக்கிறார்
    மார்கழி மாத அதிகாலையில் போனால்
    பீர்க்கம் பூக்களையும் நட்சத்திரங்களையும்
    நாமே எட்டிப் பறித்துக் கொள்ளலாம்.“16

கல்ணாஜி கவிதைகளில் இடம்பெறும் பூக்கள் நிறத்தாலும் மணத்தாலும் தோற்றத்தாலும் உள்ளார்ந்த ஒரு செய்தியைச் சொல்லிக் கொண்டே இருக்கின்றன.  தமிழர் பண்பாட்டில் அகவாழ்விலும் புறவாழ்விலும் பூக்களே நிறைந்திருக்கின்றன.  போர்ச் செய்திகளை அறிவிக்கும் ஊடகமாக வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, ஊழிஞை, நொச்சி போன்ற மலர்களைச் சங்க இலக்கியம் சொல்கிறது.  அகப்பாடல்களிலும் பூக்கள் உள்ளுறையும் செய்திகளோடு அழகியல் நோக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிகிறது.  கல்யாண்ஜி கவிதைகள் குறித்து வல்லிக்கண்ணன் கருத்து தெரிவிக்கும்போது,  தொடர்பே இல்லாத பல விஷயங்களைத் தொகுத்து வாழ்க்கையின் யதார்த்தத்தை சித்திரிக்கிற முயற்சிகளாக அவை உள்ளன.  மனசின் அலை பாய்தல்களாக அழகுடன் சிதறிக் சிரிக்கும் சொற்சித்திரங்களாகப் பல கவிதைகள் விளங்குகின்றன. சொற்சித்திரங்களாக சிறுகவிதைகள் மிளிர்கின்றன.  அவை எல்லாமே அழகை நேசிக்கிற, அன்பை ஆராதிக்கிற, மனிதத்தை மதிக்கிற மென்மையான உள்ளத்தின் இனிய உணர்வு வெளிப்பாடுகளாகும்.“17
முடிவுரை
    இலக்கியம் வாழ்க்கையின் கண்ணாடியாக அமைகிறது.  ஓர் உயர்ந்த இலக்கை நோக்கி மனிதனை அழைத்துச் செல்கிறது.  மானுட வளர்ச்சிக்கான மதிப்பீடுகளைக் காலந்தோறும் வழங்கிக் கொண்டே இருக்கிறது.  “நான் எல்லோரையும் ஏற்றுக்கொள்கிறேன்.  அவரவரின் பலங்களோடும் பலவீனங்களோடும்“ என்று கூறும் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள் அன்பிலக்கியங்களாக அமைகின்றன  இயற்கையைப் போற்றுதலே மானுட வளர்ச்சியின் முதல்படி என்ற கருத்தியலை வலியுறுத்துகின்றன.  யாவற்றையும் இரசிக்கக் கற்றுத் தருகின்றன.  கல்யாண்ஜியின் கவிதைகளில் வண்ணதாசனின் கதைகூறும் தன்மையும், வண்ணதாசன் சிறுகதைகளில் கல்யாண்ஜியின் கவிதைத் தன்மையையும் நம்மால் உணர முடிகிறது.

மரங்களை அவர் நேசித்தார்,

“பென்சில் சீவிக் கொண்டிருந்தேன்
மொரமொரவென
மரங்கள் எங்கோ சரிய“18
“கூடுமானவரை இயற்கை மனிதர்களைப் பத்திரமான இடத்தில்தான் வைக்கிறது.  நாம் எவ்வளவுதான் அவற்றைப் பத்திரக் குறைவான இடத்துக்குக் கொண்டு போனாலும்“19 என்கிறார் வண்ணதாசன் இயற்கையைப் பாதுகாக்கத் துடிக்கும் உயர்ந்த சிந்தனையே வண்ணதாசனின் மானுட வளர்ச்சிச் சிந்தனை.
குறிப்புகள்
1.    தொல்காப்பியர், தொல்காப்பியம், பொருள். 20.
2.    குறுந்தொகை, பா.2.
3.    எஸ். ராமகிருஷ்ணன், கதாவிலாசம், ப.105.
4.    ச. மகாதேவன், வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு, பி.இ.ப.19.
5.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.344.
6.    மேலது. ப.953.
7.    மேலது. ப.918.
8.    மேலது. ப.250.
9.    மேலது. ப.181.
10.    வண்ணதாசன், பெய்தலும் ஓய்தலும், ப.7.
11.    வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், ப.358.
12.    பாரதியார், பாரதியார் கவிதைகள், ப.28.
13.    அறிவுமதி, கடைசி மழைத்துளி, ப.12.
14.    ச. மகாதேவன் வண்ணதாசனின் படைப்பிலக்கியங்கள், முனைவர் பட்ட ஆய்வேடு. ப.179.
15.    கல்யாண்ஜி, இன்னொரு கேலிச் சித்திரம், ப.59.
16.    மேலது, ப.71.
17.    கல்யாண்ஜி, உறக்க மற்ற மழைத்துளி, பக.5-6.
18.    கல்யாண்ஜி, தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள், ப.64.
19.    வண்ணதாசன், அகம் புறம், ப.86. 
 
  அழகியல் தளத்தில் அமையும் கல்யாண்ஜி கவிதைகள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வின்முன்னுரை
    தனித்துவம் இழந்து எல்லாப் பொருட்களும், எல்லாக் கருத்தியல்களும் உலகமயமாகி வரும் இன்றைய சூழலில் கவிதைகளும் அப்புயலில் சிக்கித் தவிக்கின்றன.  பொருள் தேடி ஓடும் ஓட்டமே வாழ்க்கை என்றாகிவிட்டது.  இலக்கியத்திலும் அத்தன்மை வலுவாகத் தெரியத் தொடங்கி உள்ளது.  சிக்கல்களை ஆழ்ந்து நோக்காது மேலோட்டமாக அணுகி வெகுசன ஊடகங்களில் பரபரப்பாக இடம் பெறுவதே பல படைப்பாளிகளின் நோக்கமாகத் திகழ்கிறது.  விருதுகளை நோக்கிய விரைவு ஓட்டமும், குழுச்சண்டைகளும் அதிகமாகி விட்டன.  மதிப்பீடுகளே இழந்த, மண்வாசனை துறந்த, மேலோட்டமான கவிதைகளை இன்று பெரும்பாலும் பிரபலத்தன்மை பெறுகின்றன.  வெகுசன இதழ்களின் இடைவெளி நிரப்பியாகத் தமிழ்க்கவிதைகள் மாற்றப்பட்டு விட்டன.  குழு சார்ந்த பார்வையோடு வெவ்வேறு தளங்களில் இயங்கும் சிறு பத்திரிகைகளால் சுதந்திரமாய் சிந்திக்கும் புதிய கவிஞர்களைச் சமூகத்திற்குதர இயலவில்லை.  “சொல் புதிது, சுவை புதிது“ எனப் பாரதியால் தொடங்கப் பெற்று, ந. பிச்சமூர்த்தி,
கு.ப.ராஜகோபாலன், வல்லிக்கண்ணன் போன்றோரால் வளர்க்கப்பட்ட புதுக்கவிதை, தற்போது நம்பிக்கை வறட்சி, ஆங்கிலக் கலப்பு, தரமற்ற கருத்து போன்ற சுனாமிகளில் சிக்கித் தவிப்பதைக் காணமுடிகிறது.  இந்தச் சூழலில் சிக்காமல் தனித்துவமான கவிதைத் திறனால் கவிதை படைத்து வரும் கல்யாண்ஜியின் கவிதை மொழியைக் கண்டறிவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.  அழகியலை மையமி்ட்டு இக்கட்டுரை அமைகிறது.
கல்யாண்ஜி என்கிற கவிஞர்
    முதுபெரும் தமிழிலக்கியத் திறனாய்வாளரான தி.க. சிவசங்கரன் அவர்களின் மகனாகத் தோன்றியவர் வண்ணதாசன் எனும் கல்யாண்ஜி எனும் (சி. கல்யாணசுந்தரம்).  அறுபதுகளில் எழுதத் தொடங்கி நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக எழுதிவருபவர்.  170 சிறுகதைகள் 186 புதுக் கவிதைகள்.  “சின்னு முதல் சின்னுவரை“ என்ற குறுநாவல், என ஆயிரத்து இருநூறு பக்கங்கள் எழுதியுள்ள எழுத்தாளர் இவர்.  வண்ணங்களின் தாசனாக நிறைய ஓவியங்களையும் வரைந்துள்ள இவரது கடிதங்களும் தொகுக்கப்பெற்றுப் புத்தக வடிவில் வெளியாகி உள்ளன.
    திருநெல்வேலியில் வசிக்கும் இவரது படைப்பிலக்கியங்களில் திருநெல்வேலி மண்வாசனையை உணர முடிகிறது.  இவரது படைப்பிலக்கியங்களின் ஊடாகத் தாமிரபரணி ஓடிக்கொண்டே இருப்பதையும் காணமுடிகிறது.  “கல்யாண்ஜி கவிதைகள்“ நூலுக்கு முன்னுரை தரும் பதிப்பாசிரியர் சந்தியா நடராஜன் “தாமிரபரணி நதியோர மக்களின் எளிய வாழ்வாலும் அவர்களின் உள் உணர்வுகளாலும் ஆனது இவரின் கவிதை வரிகள்“ என்கிறார்.
கல்யாண்ஜியின் அழகியல் உலகம்
கல்யாண்ஜியின் கவிதை உலகம் அன்பு மயமானது.  மென்மையான சொற்களால் அனைத்து உயிரினங்கள் மீதும் அன்புமழை பொழியும் இயல்புடையது.  அவரால் பூக்களோடு பேச முடிகிறது.  வண்டினங்களின் ரீங்காரத்தைக் கூட இசையாய் ஏற்க முடிகிறது.  வண்ணத்துப் பூச்சியோடு வானில் வலம் வர முடிகிறது.  மொத்தத்தில் இயற்கையோடு இயைந்த அன்பு வாழ்வே கல்யாண்ஜியின் கவிதை வாழ்வு.
எதுகை, மோனை, சந்தம், சொல் விளையாட்டு ஏதுமற்ற பாசாங்கில்லாத தன் உணர்ச்சிக் கவிதைகள் அவருடையன.
வறட்சியான சிந்தனைகளோடு “வாழ்வே வீண்“ என்று வேதாந்தம் பேசாமல், “வாழ்க்கை தேன் என்று அள்ளிப்பருக முயலும் நம்பிக்கைக் சுடர்கள் அவருடைய கவிதைகள்.
கல்மண்டபம், பேராச்சி அம்மன் கோவில் படித்துறை, நெல்லையப்பர் கோவில், அம்பாசமுத்திரம் சிவசைலம் என அவரது கவிதை உலகம் திருநெல்வேலியைச் சுற்றியே அமைகிறது.
வழக்கமான கோணத்தில் பார்க்காமல் தனித்துவம் மிக்க கோணத்தில் யாவற்றையும் கண்டு கவிதை படைத்துள்ளதால், அவருக்குப் பாறை கூடச் சிலைகளைவிட அழகாகத் தெரிகிறது.
கவிதைக் கரு மக்கள் சார்ந்தே அமைவதால் அவரது கவிதை உலகம் உயிரோட்டம் மிக்கதாய் அமைகிறது.
தாம் உணர்ந்து வாழ்வியல் அனுபவங்களைத் தம்முடைய மொழியில் தனித்துவத்தோடு உணர்த்துகிறார்.
    தம் கவிதைகள் பற்றிக் கல்யாண்ஜி கூறுகிறார் இப்படி “என்னுடைய கதைகளையும் சரி, கவிதைகளையும் சரி, அந்தந்தத் துறைகளில் ஒரு அலை யெழுப்புகிறதாகவோ வலிமைமிக்க ஒரு உந்து சக்தியாகவோ, சுவடுகளைப் பதித்துப் செல்ல வேண்டிய அவசியமுடையவை என்றோ நான் கருதியதில்லை.  அப்படியெல்லாம் கருதாமலும் இல்லாமலுமே நான் இவைகளை எழுதிக் கொண்டு வருகிறேன்.  வாழ்வு குறித்தும் வாழ்வின் அந்தரங்கம் குறித்தும் எந்தத் தீவிரமான கேள்விகளும் எழுப்பாமல் அதே சமயத்தில் சிறுமைகளுடனும் சமரசம் செய்துகொள்ளத் தோன்றாமல், எப்படி நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ, அதுபோல என் கவிதைகளும் எழுதப்பட்டுக் கொண்டிருக்கின்றன.  நான் எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம், நான் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் இந்தக் கவிதைகள்“
கல்யாண்ஜியின் கவிதை மொழி
    கல்யாண்ஜியின் கவிதை மொழி அழகியல் சார்ந்து அமைகிறது.  எதையும் இனிய இரசனையால் உற்று நோக்கி மென்மையான சொற்களால் கவிதையாகப் பதிவு செய்கிறார் கல்யாண்ஜி; “உற்சவங்கள் வந்தும் ஒடாமல்/ வடமின்றி ரதவீதி வலமின்றி தகரக் / கொட்டகையும் தானிழந்த / தேர்சுமக்கும் சிற்பத்தை / போம் வழியில் / நின்று ரசிக்கும் / மஞ்சள் வெளியில்“ என்று எழுதுகிறார்.   
    கல்யாண்ஜியின் கவிதை மொழி திருநெல்வேலி சார்ந்து அமைகிறது.  இருப்புக்கும் இழப்புக்கும் இடைப்பட்ட ஏக்கம் அவருக்கும் கவிதைமொழியாய் உருவெடுக்கிறது.
   
“சிக்கிலிங் கிராமத்துத்
    தண்டவாளங்களையும்
    எருக்கலம் புதர்களையும்
    இழந்து, என்
    எல்.ஜி. பெருங்காய டப்பாவில்
    வளர்ந்தது ஒரு
    ஆரஞ்சு வண்ணத்துப்பூச்சி“ என்கிறார்.

    கல்யாண்ஜியின் தாத்தா அவருக்குக் காட்டியது பாபநாசத்து ஆற்று மீன்கள் முதல் நெல்லையப்பர் கோவில் யானை வரை.  பொருட்காட்சியும் தசராச் சப்பரமும், ஆனித்திருவிழாத் தேரும் அம்மா காட்டியவை என்று வரிசையாகப் பட்டியலிட்டவர் தாம் தம் மக்களுக்குக் காட்டியதைக் கூறுகிறார்.

    “மூத்த பெண்ணுக்கு
    மலைகளை காட்டினோம்
    இவன் பார்க்க
    இப்போது
    திராட்சைத் தோட்டம்“
என்று கவிதை படைத்தவர் இறுதியில் ஒரு தத்துவத்தோடு நிறைவு செய்கிறார் அக்கவிதையை,
    “கட்டுபடியாவதைக்
    காட்டும் வாழ்க்கை
    விட்டு விடுதலையாவது
    அவரவர் வேட்கை
    சிக்கனமான சொற்களால் மிகப்பெரிய செய்திகளை மிக எளிமையாகப் படைத்துக்காட்டும் தன்மை கல்யாண்ஜியினுடையது.
சிலைகளை விட
மலைகளை விடப்
பாறைகள் அழகானவை
கூழாங்கற்களும் கூடு“
    மனத்தில் தோன்றும் மென்மையான உணர்ச்சிகளைத் தெள்ளத் தெளிவாக நிழற்படம் எடுத்துத்தருவது போன்ற நடையில் தருகிறார் கல்யாண்ஜி
“முன்னிருக்கையில் யாரோ
முகம் தெரியவில்லை
தலையில் இருந்து
உதிர்ந்து கொண்டிருந்தது பூ
தாங்க முடியவில்லை
5.    மரபின் தோளில் நின்று கல்யாண்ஜி புதுமை பற்றிப் பேசுகிறார்.  தமக்குச் சுடலை மாடன் தெரு வேராக இருப்பது போல, தம் மகனுக்குச் சிந்திக்கிறார், முகவரி ஏதுமில்லை.  வாழ்வுப் போராட்டத்தில் ஒவ்வொரு ஊராக மாற்றல் பெற்று அலையும் போது வேர் எப்படி இருக்கும் என்பதை.
புல்வெளித்தேடி புறப்பட்டு வந்தபின்
வேர்களைப்பற்றி விசனப்பட நாக்கு இல்லை
என்று கூறுகிறார்.
6.    வெற்றுக் கவிதையோடு முடிவதன்று வாழ்வு.  கவிதையின் கருப்பொருட்களைச் செயல்படுத்திப் பார்ப்பதுதான் வாழ்வு எனக் கருதிய கல்யாண்ஜி அதிர்ச்சியூட்டும் உவமை ஒன்றை எடுத்துரைக்கிறார்...
“இந்தக் கவிதை எழுதுகிறவன்
பீங்கான் கழிப்பறைகளில்
பிளாஸ்டிக் குவளைகளில்
கொட்டிய தண்ணீரில்
கோடியில் ஒரு பங்காவது
ஊற்றியிருப்பானா
ஒரே ஒரு செடி
வேரடி மண்ணில்“
முரண் வாசகனை உலுப்புகிறது.
7.    வக்கிரமான மனத்தின் வெளிப்பாடு எதுவாக மாறும்? என்ற உணர்வோடு ஒரு கவிதை படைத்துள்ளார் உளவியல் நோக்கோடு

“கரும்பு வளையல்
கையுடன் ஒருத்தி
குனிந்து
வளைந்து
பெருக்கிப் போனாள்
வாசல் சுத்தமாச்சு
மனம் குப்பையாச்சு“
வெளியில் கிடந்து குப்பை மனத்திற்குள் போனதைக் காட்டுகிறது.  இக்கவிதை.
ஆய்வுமுடிவுரை
1.    அம்மை, ஐ. அணி, எழில், ஏர், திரு, மா, முருகு, கவின், காமர், பொற்பு, பொலிவு, வனப்பு என்று பல பெயர்களில் அழைக்கப்படும் அழகியல் குறித்த பதிவுகள் தொல்காப்பியர் காலம் முதலே (தொல். செய். சூ. 1) இருந்து வருகின்றன.
2.    ஜெர்மானிய அறிஞர் கான்ட்டின் கருத்துப்படி, “தனித்த அழகியல் தன்மை வாய்ந்ததே கவிதை, அதை உணர்ந்து திளைப்பதே கவிதையின் பயன்“ என்ற கோட்பாடு கல்யாண்ஜிக்குப் பொருந்துகிறது.
3.    “நான் கவிதையை அழகின் உறைவிடமாகக் கருதுகிறேன்.“ என்றார் எட்கர் ஆலன்போ, கல்யாண்ஜியின் கவிதைகள் சொற் சிக்கனத்தோடு அழகியலை மையமிட்டே அமைகின்றன.
4.    “கலை செம்மைப்படுத்திக் கொள்வதிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது.  அதற்குக் கற்பிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை.  அஃது எல்லா நிலைகளில் எல்லாக் காலங்களிலும் அழகைக் தேடிக் கண்டுபிடிப்பதையே தன் செயலாகக் கருதுகிறது“ என்ற வில்சரின் கூற்றுக்குச் சான்றாகக் கல்யாண்ஜியின் கவிதைகள் அமைகிறது என்றாலும் அவரது கவிதைகள் இயற்கையை நேசிக்கக் கற்றுத்தருகின்றன.
 
 
ஒப்பியல் நோக்கில் தாகூரின் கீதாஞ்சலி-பாரதியின் காட்சிகள்

பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வின்முன்னுரை
    நூறு ஆண்டுகளுக்கொரு முறைதான் மகாகவிகள் தோன்றுகிறார்கள்.  இந்திய இலக்கிய வரலாற்றில் ஒரே காலக்கட்டத்தில் இரு மகாகவிகள் கவியாட்சி புரிந்தார்கள் என்றால் அவரகள் மகாகவி பாரதியம் தாகூரும்தான்.  எளிய சந்தம்.  எளிய மொழிநடை, எளிய மக்கள் என்பதாக எழுதி நாட்டிலும், சமுதாயத்திலும், படைப்பிலக்கிய வடிவத்திலும் மாற்றத்தைக் கொண்டு வந்த பாரதி.  அறிவியல் கண்டுபிடிப்புகளுக்குச் சமமாக இந்திய இறையியலை உலகமொழியில் மொழிபெயர்த்துக் கீதாஞ்சலிசெய்து நோபல்பரிசினைத் தட்டி வந்த இரவீந்திரநாத் தாகூர் ஆகிய இருவரின் கவிதைகளை ஒப்பிடுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பாரதியும் தாகூரும்
    விடுதலைப்போரில் பாரதி, தாகூர் ஆகிய இருவரின் எழுத்துக்களும் போர்வாட்களாய் திகழ்ந்தன.  இருவருக்கும் சமயப்பார்வைதான் அடிப்படை; இருவரும் தாய்மொழிப்பற்றிலும், தாய்மொழிக் கல்வியிலும் நாட்டம் கொண்டவர்கள்.  இருவருக்கும் இசைஞானம் உண்டு.  இருவரும் உலக இலக்கியங்களில் ஆழமான பார்வை உடையவர்கள்.  இருவரும் ஒரே நூற்றாண்டில் படைப்பிலக்கியம் படைத்த சமகாலப் படைப்பாளிகள் எனப் பல்வேறு கூறுகளில் ஒன்றுபட்டாலும் சில கூறுகளில் வேறுபாடுகின்றனர்.
    தாகூர் வறுமையறியாத செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தவர்;  பாரதியோ வறுமையில் வாழ்ந்த சராசரி குடும்பத்தவன்.  பொருளீட்ட வேண்டிய நிர்ப்பந்தம் இல்லாததால் தாகூரின் மன் அமைதியான ஆன்மீகத் தேடலைப்படைப்புகளில் நிகழ்த்தியது.  ஆனால் பாரதியோ வயிற்றுப்பிழைப்பிற்காகத் தேச விடுதலைக்காக நிம்மதியற்ற குழப்பமான மனநிலையில் சாவல்களுக்கிடையில் இதழ்களை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.  தாகூர் வாழ்ந்ததோ 80 ஆண்டுகள்;  பாரதி வாழ்ந்ததோ 39 ஆண்டுகள்.  தாகூர் உலகம் சுற்றியவர்.  பாரதியோ இந்திய எல்லை தாண்டாதவர்.  தாகூரோ மனிதனைக் கீழ் நிலையாக்கி.  பரம்பொருளை உயர்நிலையாக்கிய மனத்தவர்.  பாரதியோ பாட்டுக்கலந்திடப் பத்தினிப் பெண்ணைப் பராசக்தியிடம் கேட்டதோடு மட்டுமல்லாமல் அந்தக் காட்டு வெளியினிலே அம்மா நின்றன காவலுற வேண்டும் என்று நெருக்கமாய் நின்று உரிமையோடு பேசியவர்.  தாகூரின் கவிதைமொழி செவ்வியல் சார்ந்த உயர்மொழி; பாரதியின் கவிதைமொழியோ மக்கள்மொழி.  பல ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் இருவருக்கும் இருந்தாலும் இருவருமே மகாகவிகள் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க இயலாது.  
மகாகவி பாரதியின் கவிதைகள்
    எமக்குத் தொழில் கவிதை என்று உறுதியாய்ச் சொன்னவர் பாரதி.  தேசமும் தெய்வமும் விலகி மக்களை மக்கள், கவிதையைத் தந்து தமிழில் புதுக்கவிதை வரலாற்றைத் தொடங்கி வைத்தவர்.  இந்திய தத்துவ மரபினைத் தமிழ்ப்படுத்தித் தந்த கவிஞர்.  பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர்.  தரையில் நின்றுகொண்டு விரிவாகத்தன்னை முதன்மைப்படுத்தாமல் நிலைகெட்ட மனிதரை நோக்கி நெஞ்சு பொறுக்காது கவிதை பாடியவர்: வங்க மொழியிலமைந்த பங்கிம்சந்திரரின் வந்தே மாதரம் பாடலை மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்தவர்.  மொத்தத்தில் பாரதியின் கவிதைகள் மக்கள் உயரக் கருதிய மனிதநேய உணர்ச்சிக் கவிதைகள்.
இரவீந்திரநாத் தாகூர் கவிதைகள்
    தாகூரின் கவிதைமொழி அறிவுப்பூர்வமானது. வைணவ மரபு சார்ந்த வேதப்பிரிவுகளைச் சார்ந்தது.  உபநிடதங்கள்.  வங்க நாட்டுப்புற இலக்கிய வகைகள்.  திரு. விவிலியத்தின் சாலமோன் மன்னரின் சங்கீதச் சாயலை ஒத்தனவாய் அமைகின்றன.  அவரின் கவிதைகள் மக்களின் துன்பத்தை விடத் தாகூர் முக்கியத்துவம் தந்துதேடியது.  பிரபஞ்ச இரகசியத்தையும் இயற்கையின் பிரம்மாண்டத்தையுமே மகாத்மாகாந்தியுடன் முரண்படுகிற அளவு அவரது ஆளுமை பரந்து விரிந்திருந்தது.  1907இல் அவரது 45 வயதில் இந்தியஅரசியல், பொருளாதாரம் போன்றவற்றில் கவனம் செலுத்தினார்.  சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள்.  நாடகங்களை எழுதித் தாகூர் பெரும்புகழ் பெற்றார்.  மனைவி, இரண்டாம் மகள், கடைசி மகன் இறப்பு அவரை நிலைகுலைய வைத்தது.  கவுதம புத்தரைப் போன்ற சுயதேடலோடு அவர் அமைதியைத் தேடி சாந்திநிகேதனை உருவாக்கி அதில் தம்மைத் தொலைத்தார். 1912இல் வங்கமொழியில் உருவான கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
    தாகூரின் கீதாஞ்சலியின் கையெழுத்துப்பிரதி மேலைநாட்டுப் புகழ்மிக்க கவிஞரான டபிள்யூ. யேட்ஸை மலைக்க வைத்தது.  நான் தாகூரின் கவிதைப் பிரதிகளை எல்லாப் பொழுதுகளிலும் படித்து மலைத்தேன்.  நான் உணர்ச்சி வசப்படுவதை யாரேனும் பார்த்துவிடும்வரை அதில் மூழ்கி இருப்பேன். என்றார்.  யேட். ஆங்கில மொழியில் கீதாஞ்சரி வெளியானபோது அதற்கு முன்னுரை தந்திருந்தார்.  ரமணருக்கு ஒரு பால் பிராண்டன் கிடைத்தது  மாதிரி தாகூருக்கு யேட் கிடைத்தார்.  1913ல் உலகப் புகழ் பெற்ற கீதாஞ்சலி ஆங்கில மொழிபெயர்ப்புக்கு உலகின் உன்னத பரிசான நோபல் பரிசு கிடைத்தது.  இந்திய இலக்கியத்தைத் தாகூர் உலக இலக்கியமாக்கினார்.
பாரதி-தாகூர் கவிதைகள் ஒப்பீடு
    பாரதி தாகூரைப் பற்றி ஒப்பிட்டு ஆய்வு நூல் வெளியிட்டுள்ள இலங்கைப் பேராசிரியர் கலாநிதி க. கைலாசபதி தமது “இரு மகாகவிகள்“ எனும் நூலில் சுத்தானந்த பாரதியார் எழுதியுள்ள பேட்டியைச் சுட்டிக்காட்டுகிறார்.  நோபல் பரிசு பெற்ற தாகூரோடு பாரதி கவிதைப் போட்டியிட விரும்பியதாகவும் அதைத் தம் சீடனோடு விவாதித்ததாகவும் காட்டுகிறார்.  பாரதி பேசியதாக இவ்வாறு குறிப்பிடுகிறார்.  பாரதி! ஓய் ஓய் நாம் தாகூருக்கு ஒன்று சொல்லுவோம் நீர் வங்கக்கவி?  நாம் தமிழ்க்கவி; விக்டோரியா ஹாலில் கூட்டம் கூட்டுவோம்.  உமது நோபல் பரிசைச் சபை முன் வைப்போம். நாமும் பாடுவோம். நீரும் பாடும். சபையோர் மெச்சுவார்கள்.  உடனே உமது கையால் எமக்கு நோபல் வெகுமதியைத் தந்து செல்லவேண்டியது என்போம்“ (இரு மகாகவிகள். பக்.17).
    பாரதியார் கவிதைகளில் உள்ள “காட்சி“ என்ற கவிதையைத் தமிழின் முதல் வசனகவிதை முயற்சி எனக்குறிப்பிடும் வல்லிக்கண்ணன் (புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும். பக்.12) வால்ட் விட்மனின்.  “புல்லின் இதழ்கள்“ எனும் பாடலை அடியொற்றித் தமிழில் பாரதி தந்தார் எனக் குறிப்பிடுகிறார்.
    மகாகவிபாரதியின் வாழ்க்கை வரலாற்றினை ஆங்கிலத்தில் எழுதியுள்ள பேராசிரியர் பி.மகாதேவன், பாரதி இரவீந்தரநாத் தாகூருடன் போட்டியிடுவதில் ஆர்வம் காட்டினார். தாகூரின் கீதாஞ்சலி மாதிரி அவரும் இதை எழுதினார் என்று கருத்து தெரிவித்துள்ளார். இக்கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும் வால்ட் விட்மனின் தாக்கத்தில் பாரதி வசன கவிதை படைத்தது கீதாஞ்சலியின் வரவுக்குப் பின்தான் என்பதை மறுக்க இயலவில்லை.  கீதாஞ்சலியையும் காட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது சில இடங்களில் ஒற்றுமை தென்படுகிறது.
    பாரதியின் காட்சிகளின் கருவோடு தாகூரின் கீதாஞ்சலியின் கவிதைக் கரு ஒத்துப் போகிறது.  இயற்கை அதாவது ஒளி.  நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், கடல், மலை, நதி, யாவும் ஏகாந்தமானது.  இனிமையானது என்பதையே தாகூரும், பாரதியும் வெவ்வேறு சொற்களால் வெளிப்படுத்தி உள்ளனர்.
கீதாஞ்சலியும் பாரதியின் காட்சிகளிலும் ஒளிதான் கவிதைக்கரு.
கீதாஞ்சலி
    ஒளி எங்கே அந்த ஒளி ஆசைத் தணலால் அதைத் தூண்டிச் சுடர்விடச் செய்.  மேகத்திரள்கள் வாளை மறைந்தன; அடாத மழைவிடாது கொட்டுகிறது என்னுள் தோன்றும் கிளர்வின் காரணம் புரியவில்லை; வானில் கணநேரத்தில் மின்னல் ஆழம் நோக்கி என் கவனம் விரைகின்றது.  இரவின் பாடல் அழைக்க இருப்பிடம் தெரியாமல் பாதை தடுமாறுகிறது ஒளி எங்கே அந்த ஒளி ஆசைத் தணலால் அதைத் துண்டிச் சுடர்விடச் செய்
காட்சி
    ஒளியே நீ யார்? ஞாயிற்றின் மகளா விளக்குத் திரி? காற்றாகிச் சுடர் தருகின்றது இடியும்.  மின்னலும் நினது வேடிக்கை புலவர்களே மின்னலைப் பாடுவோம் வாருங்கள்.  மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை நமது விழிகளிலே மின்னல் பிறந்திடுக; நமது நெஞ்சில் மின்னல் விசிறிப் பாய்க நமது வலக்கையிலே மின்னல் தோன்றுக.  என்ற பாடல் அடிகளால் உணரமுடிகிறது.
    தாகூர் கீதாஞ்சலியிலே ஒரு பாடலில் கூறிய செய்தியைப் பற்றி அணுகி ஆராய்ச்சி செய்து தத்துவ ரீதியாக வேத வரிகளோடு அழகியல் சேர்த்து 46 பாடல்களில் வேறுபட்ட வடிவத்தில் தந்து மலைக்க வைக்கிறார்.  இப்பாடல்கள் கீதாஞ்சலியை விட ஆழமானதாகச் செறிவு மிகுந்ததாக பொருள் பொதிந்ததாக உள்ளதைக் காண முடிகிறது.
இறை வேண்டல்
1.    உலகத்தின் எந்திரவாழ்க்கைக்குள் சின்னாபின்னப்பட்ட மனிதன் இறைஞ்சும் இறை வேண்டலே கீதாஞ்சலி.  பாரதியின் போக்கும் அப்படித்தான்.
    நல்லதோர் வீணை செய்தே அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி சிவசக்தி எனைச்
    சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய்
    வல்லமை தாராயோ இந்த மாநிலம்
    பயனுற வாழ்வதற்கே
எனும் பாரதியின் குரலை,
என் இறைவனே
    உன்னுடன் இயைந்து பாட என் இதயம் ஆசைப்படுகின்றது.
    ஆனால் ஒரு நல்ல குரலுக்காய்
    அது பயனற்றுப் போராடிக் கோண்டுள்ளது.
    என்னால் பேச இயலும்? ஆனாலும் பேச்சு கீதமாகாதே
    அதனால் திகைத்து நான் அழுகிறேன்.
என்று தாகூரின் சொற்கள் மெய்ப்பிக்கின்றன.

ஆய்வு முடிவுரை
    பாரதியின் காட்சிகளில் இன்னும் ஆழ்ந்த பொருள் பொதிந்துள்ளது.  தாகூரின் கீதாஞ்சலியோடு பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.  தாகூரின் கங்கையாறும், பாரதியின் தாமிரபரணியும் கலப்பது கவிதை எனும் கடலில்தான்.  பிரித்துப் பார்க்க முடியவில்லை.  தாகூர் தம் கவிதைகளைத் தாமே மொழிபெயர்த்து மேலைநாடுகளுக்கு அறிமுகப்படுத்தியதால் நோபல் பரிசு கிடைத்தது.  பாரதிக்கு அதைவிட முக்கியமான செயல்கள் இருந்திருக்கலாம்.  பரிசுகளை வைத்து நாம் பாரதியை மதிப்பிட்டு விட முடியாது.  “அன்ன சத்திரம் ஆயிரம் வைப்பதை விட ஆலயங்களை அடுக்கடுக்காய் கட்டுவதை விட அங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் உன்னதம் என்றார் பாரதி.  தாகூர் அதை தம் வாழ்வில் சாந்தி நிகேதனாய்ப் உருவாக்கிக் காட்டினார்.  தாகூரின் சிறுகதைகளைப் பாரதி மொழிபெயர்த்தார்;  தாகூரை மிக மதித்தார்.
    கீர்த்தியடைந்தால் மகான் இரவீந்தரைப் போலே அடையவேண்டும் என்று புகழ்ந்தார் பாரதி.  அவரை அடியொற்றிப் பாரதி கவிதை வடிவத்தையும் மாற்றினார்.  காட்சிகளில் பாரதி சொல்வதைப்போல் பழைய தலையணை அதிலுள்ள பஞ்சை எடுத்துப் புதிய மெத்தையிலே போடு. மேலுறையைக் கந்தையென்று வெளியே எறி.  அந்த வடிவம் அழிந்துவிட்டது.  என்றான்.  பழைய வடிவம் அழிந்து பாரதியால் புதுக்கவிதை எனும் புதிய வடிவம் தமிழுக்கு வந்தது.  எல்லாம் அறிந்தும் பணிவோடு
    நல்லது தீயது நாமறிவோம் அன்னை
    நல்லது நாட்டுக தீமையை ஓட்டுக
எனக் கூறும் பாரதி தாகூரை விட உன்னதக் கவிஞன்தான்.