1986-1992 வரை பாளையம்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களின் மீள்கூடுகை விழா 13.9.13

Posted








பெயர்த்து எறிந்துவிடலாம்.. பழைய வீட்டின் காரைத்தளத்தை ..எப்படி எறிவது?  
 நேற்றைய நிமிடங்களின் இன்றைய நினைவுகளை?நிலைகொள்ளாமல் தவிக்கிற நிர்பந்தங்கள் ஒருபுறம்,நெருக்கடிகளைத் தாண்டி வாழ்வை நேசிக்கும் வசந்தநினைவுகள் மறுபுறம்.வெற்றுத்தாளில் வேகமாய் உழுகிற பேனாவைப் போல் நினைவுத் தாட்களில் நிறையவே எழுதுகிறது காலமெனும் கலைக்கோல்.

ரப்பர் வளையல்கள்,கலர்கலராய் ரிப்பன்கள்,கறுஉருண்டைக் குஞ்சலங்கள் இவற்றைப் பார்த்து வெகுநாளாயிற்று.

போய்க்கொண்டே இருக்கிறேன் வித்தியாசமான மனிதர்களோடு.
விளம்பரம் தேடாமல் மனிதம்போற்றிக் கொண்டிருக்கும் மகாராஜநகர் ஆறுமுகம் தாத்தா.

முருகன்குறிச்சி வக்கில் ஆபிஸ் முன்னால் காத்துகிடக்கும் குழந்தைகளாய் நினைத்து அவ்வளவு நேரநெருக்கடியிலும் நாய்களுக்குத் தவறாது பிஸ்கட் போடும் அந்தப்  வழக்கறிஞர்,

காலங்களில் அவள் வசந்தம் என்று மேடைகளில் தன்னை மறந்து அச்சுஅசலாய் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் அவராகவே மாறிப்பாடும் அந்த நெல்லை மருத்துவர்,

ஹைதர்அலி காலத்துக் கார் முதல் பென்ஸ் கார்வரை 12 பழையகார்களை நாடுமுழுக்க ஓடிவாங்கி கார்க்குழந்தைகளாகவே பாவித்து என்.ஜி.ஒ.காலனியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த சகபேராசிரியர் இஸ்ரவேல் தேவதாசன்,

பொன்வண்டு சோப்பு பெயர் போட்ட அழுக்குபனியனுக்குள் ரேடியோபெட்டியைப் போட்டபடி மார்க்கெட்க்குள் மகிழ்ச்சியாகச் சுற்றிக்கொண்டு இருக்கும் சுப்பையா அண்ணாச்சி...

இப்படி எத்தனையோ சுவாரசியமான மனிதர்களால் இன்னும் சுவாரசியமாகின்றன என் நாட்கள்.

அன்று மாலையும் அப்படித்தான் நீலனால் நீண்டு நீலமயமான வானமாய் மாறியது.
1986-1992 வரை பாளையம்கோட்டை தூய சவேரியாரமேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களை அந்த மாலை வேளையில் லயோலா அரங்கில் நீலன் ஒன்றுசேர்த்திருந்தார்.

வாழ்க்கைச் சுழலில் சிக்கி அதை ஆளுமையோடு எதிர்கொண்ட கலைஞன் நீலன், விசுவின் அரட்டைஅரங்கத்தில் பாளையில் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பேசியபோது அறிமுகமானவர்.

அப்பாவின் அன்பு மாணவராகத்தான் நீலன் எனக்குப் பழக்கம்.அ,ஆ,இ.ஈ...எனும் கவிதைநூலை எழுதிஇருந்தார்.பாளை. தியாகப்பிரும்மம் இன்னிசைமண்டபத்தில் அந்நூலின் வெளியீட்டு விழாவை நடத்தினார்.அப்பாவோடு பங்கேற்றுப் பேசினேன்.

அதன்பின் சென்னை சென்று உதவிஇயக்குநராய் சேர்ந்து போராடி படங்களை இயக்கித் தனக்கான இடத்தைப் பிடித்தவர் என்பதால் அவர் தன்னம்பிக்கை பிடிக்கும்.

அப்பாவோடு பள்ளிக்குள் நுழைகிறேன்.மனதிற்குள்  இனம்புரியாத ஓர் பூரிப்பூ.

பள்ளி ரொம்பவே மாறிஇருந்தது.கட்டிடங்கள் பள்ளியின் உருவை மற்றிஇருந்தன.

அந்திசாயும் அம்மாலை வேளையிலும் பள்ளி ஏதோ என்னிடம் சொல்வதுபோல் இருந்தது.

அசம்பிளியில் பெலிக்ஸ் பாதர் பேசுவதுபோலவும் நாங்கள் கைக்கூப்பி நின்று இறைவேண்டல் நடத்துவது போலவும் இருந்தது.

காலையில் மாணவர்களின் நெரிசலில் நசுங்கிப் போயிருந்த மிகநீண்ட வகுப்பறைகள் அந்த அந்தி வேளையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்ததுபோல் இருந்தது. 

வழக்கம்போல் வெள்ளை வேட்டியோடு செல்வம் ஓடிவந்து அப்பாவின் கைகளைப்பிடித்துக் கொள்கிறார்.

படிக்கட்டுக்கள் லயோலா அரங்கிற்கு அழைத்துச் சென்றன.

மீள்கூடுதல் விழா பங்கேற்றவர்களின் நெருக்கத்தாலும் உணர்வின் உருக்கத்தாலும் நெகிழ்வாய் இருந்தது.

சாயங்களையும்,அரூப தன்பிம்பங்களையும் விட்டுவிட்டு வெகுஇயல்பாய் பேசினார்கள் யாவரும்.

பள்ளி அவர்களை எண்பதுகளுக்குள் நிறுத்திவைத்து நின்று ரசித்தது.
கலைவார விழா நடத்தி விஜய்ஆண்டனியையும்,ரமணகிரிவாசனையும்,இன்ன பிற இயக்குநர்களும் உருவாக்கித் தன்னை ஏணியாக்கி மாணவர்களை உயர்த்திய ஆசிரியர்கள், சந்திரசேகரன்,அலங்காரராஜ், சௌந்தரராஜன்,அமல்ராஜ்,பாபு ஆகியோர் முன் மாணவர்கள் நெகிழ்ந்து போயினர்.

நீலன் தன் தமிழாசிரியர் சௌந்தரராஜன் அய்யாவைக்கண்டு நெகிழ்ந்து போனார்.

இருட்டு கப்பிய அந்தப்பள்ளியில் வெளிச்சங்களாய் இரவுஎட்டரை மணியிலும் அவர்கள் தாங்கள் படித்த வகுப்புநோக்கி நகர்ந்தபோது பள்ளி தன்கற்களையும்,சிமண்ட் பூச்சயும் தாண்டித் தாயாக மாறி நீலனையும்,புகைப்படங்கள் எடுத்த முருகனையும் இன்ன பிறமக்களையும் கட்டி அணைக்கத் தொடங்கி இருந்தது.

இடிக்கப்பட்ட எங்கள் ஒன்பதாம் வகுப்பு அ பிரிவின் கட்டிடத்திடமிருந்து எங்கள் கிரகோரி சாரின்,நாராயணன் சாரின்,இருதயராஜ் பாதரின்,பீட்டர் பிடலிஸ் சாரின்,லாசர் சாரின் பாடம் நடத்தும் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது.

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

சிறுகதை எழுத்தாளர் வண்ணதாசன்

Posted



அவர் கதைகளுக்குள் திருநெல்வேலி,அல்வாவைப் போல் தித்திக்கும் இனிப்பு என்றும் உண்டு.அவரருடைய பரமனும் சுந்தரத்துச்சின்னம்மையும் லோகு மதினியும் சின்னுவும் விபினும் தனுவும் நடுத்தரவர்க்கத்தின் வாழ்வியல் அடையாளங்கள்.ஆறு ஆண்டுகள் அவரது கதைகளைத் திரும்பத்திரும்பப் பலமுறை வாசித்திருக்கிறேன்.வரிக்குவரி அழகியல் பதிவுகளோடு அடுத்த வரிக்குப் போகவிடாமல் செய்யும் ஆற்றல் உடையன அவர்எழுதிய முந்தைய வரிகள்.நீண்ட நேர்காணல் நிகழ்த்துவதற்காக அவரது பெருமாள்புரம் வீட்டில் சிந்தாவோடு அவரை ஓர் மாலைப்பொழுதில் சந்தித்தேன்.தொலைக்காட்சிக்கு மேல் புத்தர் சிரித்தபடி எங்களைப் பார்த்திருந்தார்.உயரமான மனிதராக உள்ளிருந்து புன்னகையுடன் வெளியே வந்தார் வண்ணதாசன் அய்யா கலைநுணுக்கத்தோடு. அமைந்த அந்தப்பச்சைநிற சோபாவில் தலையணை உருளையோடு  வண்ணதாசன் அய்யா அமர்கிறார்.இரண்டு மணிநேரம் மடைதிறந்து பதில் தருகிறார்.வரிக்குவரி வாசித்த சிறுகதைப் படைப்பாளர் தன்னைப்பற்றி எதுவும் உயர்வாகச் சொல்லிக்கொள்ளாமல் வெகுஇயல்பாய் அன்புடன் பேசியது அவர்மேல் மரியாதையை உண்டாக்கியது.அவர் கதைகளை கவிதைகளை வாசித்தபோது அவற்றை அன்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிடலமா என்று தோன்றுகிறது.வண்ணதாசன் படைப்பிலக்கியங்களில் முனைவர் பட்ட ஆய்வில் மேற்கொண்டதும்,திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வாய்மொழித்தேர்வில் வண்ணதாசன் அய்யா துணைவியாரோடு கலந்து கொண்டதும் என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அரைநூற்றாண்டு காலம் தமிழ்ப் படைப்புலகின் அழகியல் பிதாமகனாகத் திகழும் வண்ணதாசன் அவர்களின் படைப்புலகம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தியதும் அதில் காலை முதல் மாலை வரை தி.க.சி அய்யா கலந்துகொண்டதும் நெகிழ்வோடு அதில் வண்ணதாசன் அய்யா ஆற்றிய உரையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வண்ணதாசன் பொங்கிப்பிரவகிக்கும்அழகியல் தமிழ்அருவி.இளையதலைமுறை எழுத்தாளர்களின் முன்மாதிரி.ஒப்பனை இல்லாத ஒப்புமை இல்லாத ஒப்பற்ற எழுத்தாளர்.தளராமல் பயணிக்கும் தாமிரபரணி.வளமுடன் அவர் வாழ அன்புவாழ்த்துக்கள்.
சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி




சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா 13.8.13 நாறும்பூநாதன் உரை

Posted






சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா 13.8.13 

நாறும்பூநாதன் வந்தார்.எவ்வித செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பாகப் பேசினார்.மண் சார்ந்த அவர் கதைகள் மீது எப்போதும் ஈர்ப்பு உண்டு.ஜவகர் திடலில் அமர்ந்துகொண்டு வேர்க்கடலை பொட்டணம் தின்றுகொண்டுகூட அவர் கதைகளை வாசித்துவிட முடியும்.அவர் பத்திரங்கள் நமக்கு வெகுநெருக்கமானவை.ஒரு மணி நேரம் பேசினார். புதுமைப்பித்தன்,வண்ணதாசன்,உதயசங்கர்,கு.அழகிரிசாமி,கீரனூர் ஜாகிர் ராஜா,தோப்பில் முஹமது மீரான் என்று அவர் பயணத்தைத் தொடங்கியபோது மாணவ மாணவியர் அவரோடு கதைவெளியில் பயணமாயினர்.சீதக்காதி தமிழ்ப் பேரவை கதைவெளியில் தொடக்கம் கண்டது.நம் கல்லூரியில் பயின்ற சுகா குறித்தும் அவருடைய மூங்கில் மூச்சும் குறித்துப் பேசினார்.தாமிரா கதைகள் குறித்து பேசினேன்.படைப்பாளியோடு கதைவெளியில் பயணிப்பது சுகமானது.

இதயம் நனைந்த இனிய நூல் வெளியீட்டு விழா-திருநெல்வேலி சௌந்தரமகாதேவன்

Posted












காலம் கவனித்துக் கொண்டே இருக்கிறது யாவற்றையும்.கரி நாட்களுக்கு மேலும் கையில் வேலோடு “யாமிருக்க பயமேன்” என்று சிரிக்க முடிகிறது காலண்டர் முருகர்களால்.பாளை.அருங்காட்சியகத்திற்கு அருகே பத்து ரூபாய்க்குக் கலர்க்கோழிக் குஞ்சுகளை அட்டைஅரணிட்டு விற்க முடிகிறது.ஜான்ஸ் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் பூச்செடிகளை விற்கும் உயர மனிதர் இரவுப் பொழுதுகளில் அப்பூச்செடிகளுக்கு மத்தியில் எந்தக் கவலையும் இன்றி உறங்க முடிகிறது.பத்தடி உயரப் பிள்ளையார் பொம்மை செய்து வைத்து விற்காததால் அடுத்த பிள்ளையார் சதுர்த்தி வரை சாக்கு சுற்றி வைத்து திருச்செந்தூர் சாலையோரத்தில் ஒரு வருடம் காத்திருக்க முடிகிறது.

விற்காமல் போனாலும் கவலை இன்றி ஹெல்மெட் வியாபாரியால் வண்ணார்பேட்டை சூரியன் பண்பலை முன்பு சாலைஓரத்தில் தூங்க முடிகிறது.ப்ளெக்ஸ்களினால் நசிந்துபோய் விட்டாலும் வேதவசனங்கள் எழுதியோ நாளைய நம்பிக்கை என்று அழகாக எழுதியோ பிழைக்கும் அந்த தாடிவைத்த ஆர்டிஸ்ட்டால் தன் கைகளை நம்பி வாழமுடிகிறது.பறக்க முடிவு செய்தவனுக்குச் சிந்தனையில்கூட சிறகு முளைக்கும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாய் வாழ முடிகிறது வெறுப்பில்லா வெற்றி மனிதர்களாய்.தடம் போட்டவர்களைவிடத் தடம் பதித்தவர்களை வரலாறு என்றும் வரவுவைத்துக்கொண்டுள்ளது.


குரு.சண்முகநாதன் அவர்களின் “கடவுளரும் நல்லெண்ணெயும்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது அவரைக் கண்டேன்.இதயம் நிறுவன அதிபர் வ.இரா.முத்து அவர்கள் நம்பிக்கையின் அடையாளமாகப் பேசினார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரது எளிமையான பேச்சு கவர்ந்தது.மரபு சார்ந்த குடும்பத்தொழிலான நல்லெண்ணெய் வாணிபத்தை இன்று கடல் கடந்த நாடுகளில் பரப்ப அவர் மேற்கொண்ட உத்திகள் வியப்பிற்குரியன.நம் மரபு சார்ந்த பாட்டிவைத்திய முறைகளை உலகத்தமிழ்ச் சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லும் அவர் நோக்கும் போக்கும் வியக்க வைப்பதாய் அமைகிறது.தன் இருமகள்களுக்கும் தூய தமிழ்ப் பெயர்களை வைத்துள்ளார்.வான்புகழ் வள்ளுவர் தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறார்.தமிழ்மண் சார்ந்த பழமொழிகள்,இலக்கியங்களில் நூல்கள் உருப்பெற உதவி செய்துள்ளார்.எங்கள் பேராசிரியர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களின் இரு மாணவர்களும் அவர்முன் விழாவில் பங்கேற்றுப் பேசியதும் அவருடைய ஆசிகளுடன் தொடர்ந்து பயணிப்பதும் சுகமானதாய் அமைந்தது.

ஊக்குவிக்க ஆளிருந்தால்

ஊக்குவிற்பவனும் தேக்கு விற்பான்

என்பது உண்மைதான்.


சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி