செம்மொழித் தமிழ்

Posted

செம்மொழித் தமிழ் வளர நாம் செய்ய வேண்டியன...
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி)
திருநெல்வேலி.
கைப்பேசி  : 09952140275
Email : nellaimaha74@gmail.com

    முன்னுரை

    மூவாயிரம் ஆண்டு வரலாற்றுத் தொன்மை உடைய மொழி நம் தமிழ்மொழி.  “தமிழ் என் கிளவியும் அதனோரற்றே”1 என்று வல்லெழுத்து மிக்கு முடிதலோடு அக்குச் சாரியையும் “தமிழ்” எனும் சொல் பெற்றுவரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.  “தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற திராவிட மொழிகள் தமிழிலிருந்து தோன்றியன.2 என்பது ஆய்வறிஞர் பிஷப் கால்டுவெல் அவர்களின் கருத்தாக அமைகிறது.  “இலக்கியச் செழுமையும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுத் தொன்மையான மொழிகளாக இலத்தீன், கிரீக், வடமொழி, தமிழ் ஆகியவற்றைப் பிரிட்டானியா கலைக் களஞ்சியம் வரையறுப்பதாக” முனைவர் ச. வே. சு. குறிப்பிடுகிறார்.  அம்மொழிகளுள் இன்றளவும் படிக்கவும், படைக்கவும், பேசவும் உகந்த ஒரே மொழியாகத் தமிழ்மொழியே திகழ்கிறது.  வீரமாமுனிவராலும் தத்துவபோதகராலும் போப்பையராலும் கால்டுவெல்லாலும் பரோவாலும் எமனோவாலும் உலகின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்ட தமிழ்மொழி, இன்று உலகின் உயர்தனிச் செம்மொழியாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசால் உலகத்தமிழ்செம்மொழி மாநாடு நடத்தப்பட்டு அயல்நாட்டினரால் போற்றப்படுகிறது.  “இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்” என்று தமிழின் இனிமையைப் பிங்கல நிகண்டு அழகுறப் பதிவு செய்துள்ளது.  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திணை, துறைப் பாகுபாட்டோடு எழுத்துக்கும்  சொல்லுக்கும் இலக்கணம் படைத்த ஒல்காப் புகழ்பெற்ற தொல்காப்பியம், “அகம் – புறம்“ எனப் பிரித்து வாழ்வுக்கும் பொருள் சொல்லிப் பொருளதிகாரம் கண்டது.  வடமொழியின் தாக்குதல், களப்பிரர் காலத்தில் இருட்டடிப்பு போன்ற தாக்குதல்களுக்கு இலக்காகி ஆங்கிலேயரின் வருகையால் ஏற்றமும் ஏமாற்றமும் ஒரு சேரப்பெற்று, இன்றும் இளமையாகத் திகழ்கிறது.  இணையத்திற்குள்ளும் நுழைந்து நவீனத்தை ஏற்றுக் கொள்கிறது.    
    “உலகின் உயர்தனிச் செம்மொழியைக் காக்க நாளை நாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து இக்கட்டுரை விளக்க முயல்கிறது.
தமிழின் தொன்மையை வரலாற்று முறையில் நிறுவுதல்
    “தொல்காப்பியம் கி.மு. வில் தோன்றிய நூல் என்பதில் ஐயமில்லை”4 எனும் மூதறிஞர் ச.வே.சு.வின் கருத்துக்கு ஆதாரமாகக் கல்வெட்டுகள்.  செப்பேடுகள் போன்றவற்றை நாம் தேடி ஆவணப்படுத்த வேண்டியுள்ளது.  சங்க இலக்கியத்தின் ஒப்பற்ற அகநூல் குறுந்தொகை 1915ஆம் ஆண்டு திருக்கண்ணபுரத்தலத்தான்  சௌரிப்பெருமாள் அரங்கனாரால் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.  1937இல் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரால் தெளிவான விளக்கவுரையுடன் கூடிய பதிப்பு வெளியிடப்பட்டது.
உ.வே.சா. மாட்டுவண்டி கட்டிக் கொண்டு மாநிலம் முழுக்க அலைந்து திரிந்திரா விட்டால் பல அரிய இலக்கியங்கள், அழிந்துபோயிருக்கும். புறநானூறு சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிப் பதிவு செய்துள்ளது.  பதிற்றுப் பத்து சேர மன்னர்களைப் பதிவு செய்துள்ளது.  ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வரலாற்றுப் பார்வையோடு வாழ்வியலை இலக்கியத்தில் பதிவு செய்த தமிழர்களின் ஆற்றலை நாம் ஆவணப்படுத்த வேண்டும்.
    “தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்த திருவக்கரை கிராமத்தில் 30 மீட்டர் நீளமும் 1.5 மீட்டர் குறுக்கும் உடைய கல்மரங்கள் (180 இருந்தன) உள்ளன.”5 என்று “பண்டைத் தடயம்” எனும் நூலில் ஆய்வாளர் சு.வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.  உலகின் கண்டங்கள் ஒரு காலத்தில் ஒன்றாக இருந்து பின்னர் இயற்கைப் பேரழிவுகளால் பல துண்டுகளாக உடைந்தவற்றை அமெரிக்க ஆய்வறிஞர் எபி.பி டெய்லர் போன்றோர் ஆய்வு செய்துள்ளனர்.  திருநெல்வேலி மாவட்டம்  திருவைகுண்டத்திற்கு அருகேயுள்ள ஆதிச்சநல்லூரில் கிடைத்த முதுமக்கள் தாழிகள், காவிரிப் பூம்பட்டினத்தில் கிடைத்த சிலம்புகள், திருவக்கரை கிராமத்தில் கிடைத்த கல்மரங்கள் போன்றவற்றை அறிவியல் முறைப்படி ஆராய்ந்து காலவரையறை செய்ய வேண்டும்.
1.    கல்குவாரிகளாக மாற்றப்பட்டு வெடி வைத்து உடைக்கப்படும் அரிய கல்வெட்டுகளை நகல் எடுத்து இணையத்தில் இட்டுப் பாதுகாக்க வேண்டும்.
2.    கி.பி. ஆறாம் நூற்றாண்டு முதல் உள்ள காலகட்டம் சார்ந்த செப்பேடுகள் இன்னும் பதிக்கப்பெறாமல் உள்ளன.
“தென்னிந்தியக் கல்வெட்டுக்கள் முதல் மூன்று தொகுதிகளில் அந்தந்த ஆண்டு படிஎடுக்கப்பெற்ற செப்பேடுகளில் சில பதுப்பிக்கப் பெற்றுள்ளன. பின்னர் வெளிவந்த 4 முதல் 26ஆம் தொகுதிகள் வரை அந்தந்த ஆண்டுக்குரிய செப்பேடுகள் எதுவும் பதிப்பிக்கப்பெறவில்லை”6 என்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக  முன்னாள் – கல்வெட்டு, தொல்லியல் துறைத் தலைவர் புலவர் செ. இராசு. கருத்துரைக்கிறார்.
    கல்வெட்டுகள், செப்பேடுகள் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா போன்றவற்றில் இதுவரை முழுமையாகச் சேகரிக்கப்பட்டு பதிவு செய்யப்படவில்லை.  செம்மொழித்தகுதி கிடைத்துள்ள நிலையில் இப்பணி முதன்மையானது.
2.    அகழ்வராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும்
    “இலெமூரியாக் கண்டத்தில் குமரி மலை இருந்தது.  பஃறுளி ஆறு இருந்தது.  அம் மலையையும் ஆற்றையும் கடல் கொண்டதால் குமரிமலை குமரிக்கடலாயிற்று“ என்று ச. வே.சு. குறிப்பிடுகிறார்.  லெமூரியாக் கண்டம் பற்றிய ஆய்வுகள் நிகழ்த்தப்பெற்றால் தமிழின் தொன்மையை நம்மால் தெளிவாக நிறுவ முடியும்.”
3.    அரிய நூல்கள் பதிப்பிக்கப் பெற வேண்டும்
    எட்டுத் தொகை, பததுப்பாட்டு போன்ற இலக்கியங்கள் பிழையோடு அச்சாகின்றன.  உ.வே.சா. வின் ஆய்வுப் பதிப்புகளை அடியொற்றித் தமிழின் அரிய நூல்கள் செம்பதிப்புகளாக மலிவு விலையில் பதிப்பிக்கப் பெற்று உலகின் அத்தனை பல்கலைக் கழகங்களுக்கும் அனுப்பப்பட வேண்டும்.
4.    வட்டார வழக்குச் சொல்லகராதிகள் தொகுக்கப்பட வேண்டும்.
    இலக்கிய வழக்குச் சொற்களையே நாம் ஆவணப்படுத்தி உள்ளோம்.  திருநெல்வேலி, மதுரை, திருச்சி, காரைக்குடி, கோயம்புத்தூர், வாணியம்பாடி, சென்னை, கன்னியாகுமரி போன்ற வட்டாரங்களில் மக்கள் வழங்கிவரும் வழக்குச் சொற்கள் யாவற்றையும் தொகுத்து “தமிழக வட்டார வழக்குச் சொல்லகராதிகளை உருவாக்க வேண்டும்.
5.     மொழி பெயர்ப்பு செய்யப்பட வேண்டும்.
    “ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்ட ஆய்வாளர்களும் ஏதேனும் ஓர் தமிழிலக்கியத்தை வேறு மொழியில் மொழி பெயர்த்தல் அவசியம்“ எனப் பணித்தால் தமிழ் நூல்கள் உலகின் பார்வைக்குச் செல்லும்.  திருநெல்வேலி மகாராச நகரில் வாழும் 93 வயதுப் பெரியவர் திரு. வை. ஆறுமுகம், திருஞானசம்பந்தரின் தேவாரப் பாடல்கள் முழுமையையும் ஆங்கிலத்தில் ஒலிபெயர்ப்பு, விளக்கம், ஆகியவற்றோடு மொழிபெயர்த்துள்ளார்.  திருவாசகத்தையும் அழகாக மொழிபெயர்த்துள்ளார்.  திருக்குறளும், கீதாஞ்சலியும் உலகத்தாரின் பார்வைக்குச் சென்றதன் காரணம் மொழிபெயர்ப்புதான். எனவே பல்கலைக்கழகங்கள் அப்பணியைத் தீவிரமாகச் செய்ய வேண்டும்.
6.    கலைச் சொற்கள் உருவாக்கப்பட வேண்டும்
    துறைதோறும் இடம்பெறும் சொற்களுக்கு நிகரான கலைச்சோற்கள் உருவாக்கப்பட வேண்டும்.  அறிவியல் தமிழறிஞர் திரு. மணவை முஸ்தபா, கணினிக் கலைச் சொல்லகராதி, மருத்துவக் கலைச் சொல்லகராதி ஆகிய அகராதிகளை உருவாக்கியுள்ளார்.
7.    தமிழ்வழிக் கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்
    மழலையர் பள்ளி முதல் முனைவர் பட்டம் வரை தமிழே படிக்காமல் தமிழ்நாட்டில் பட்டம் பெற்று விட முடியும் என்ற நிலை மாற வேண்டும்.  பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக் கல்லூரிகளிலும், சட்டக் கல்லூரிகளிலும் தமிழை ஒரு பாடமாக அத்துறையோடு இணைத்துக் கற்றுத்தர வேண்டும்.  பாவேந்தரின் வரிகளுக்கேற்ப
    “இன்பத் தமிழ்க் கல்வி யாவரும் கற்றவர்
    என்றுரைக்கும் நிலை எய்திவிட்டால்
    துன்பங்கள் நீங்கும், சுகம் வரும் நெஞ்சினில்
    தூய்மையுண்டாகிடும், வீரம் வரும்.”8
எனும் கனவு நிறைவேற வேண்டும்.  தமிழ்வழியில் அனைத்துத் துறைப் பாடங்களையும் கற்றுத்தர வேண்டும்.
8.    “இணையத் தமிழ்” மலர வேண்டும்
    தமிழ் இலக்கியங்கள் யாவும் இணையத்திற்குக் கொண்டு செல்லப்பட வேண்டும்.  
    “தமிழின் மேன்மை அதன் தொன்மையில் இல்லை தொடர்ச்சியில் உள்ளது” என்ற பொன் மொழியோடு விரியும் Tamilnation. org.  பழமொழிகள், விடுகதைகள், தொல்காப்பியம், நீதி இலக்கியங்கள், காப்பியங்கள், பன்னிரு திருமுறைகள், நவீன இலக்கியங்கள், யாவற்றையும் உள்ளீடு செய்து வைத்துள்ளது.
    www.tamilnet / project madurai.com, www. varalaaru.com. எனும் இணையதளங்கள் தமிழ் இலக்கியங்களை உள்ளீடு செய்து வைத்துள்ளன.
    ஜெர்மனியிலுள்ள என். கண்ணன் என்பவரால் ‘உயிர்ப்பு’ எனும் ஓபுத்தகம்' உருவாக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்துக் கல்வெட்டினையும் சிந்து சமவெளி நாகரிகக் காலத்தைச் சார்ந்த களிமண் சிற்பத்தையும் இத்தளத்தில் பார்க்க முடிகிறது.  யாழ்ப்பாணத்து ஆறுமுக நாவலர் கண்டெடுத்த பழைய ஓலைச் சுவடிகளின் படத்தை இத்தளம் காட்டுகிறது.
    “இணையத் தமிழ்” உருவாகி வளர்ந்து வரும் சூழலில் உலகப் பொதுமை மிக்க எழுத்துருவை இன்னும் நம்மால் வரையறுக்க முடியவில்லை.  தமிழுக்கென 512 குறியீடுகளைப் பெற்றால் இணையத்தமிழுக்கு அது பேருதவியாக அமையும். www.letustamil.com எனும் இணையதளம் அமெரிக்கா, ஜப்பான், சவுதி அரேபியா நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் குழந்தைகளுக்குத் தமிழை எளிய முறையில் கற்றுத்தருகிறது.
    அமெரிக்க நாட்டு இல்லிநாய்ஸ் பல்கலைக்கழகம் அனைத்து ஆங்கில இலக்கியங்களையும் இணையத்தில் உள்ளீடு செய்து வைத்துள்ளது.  சிங்கப்பூரில் உள்ள தேசியப் பல்கலைக்கழகம் தமிழ் இலக்கியங்களை உள்ளீடு செய்து வைத்துள்ளது.  இப்பணியைத் தமிழகத்தின் அத்தனைப் பல்கலைக்கழகங்களும் செய்ய வேண்டும்.  தமிழின் செவ்வியல் இலக்கியமான சங்க இலக்கியத்தை கலிபோர்னியா பல்கலைக்கழகம் இணையத் தளத்தில் இட்டு வைத்துள்ளது.  உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் தமிழ்நாட்டுக்கு வராமலேயே தமிழ் இலக்கியம் கற்க, தமிழக அரசு தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியுள்ளது. 
9.    அயலகத் தமிழ்த்துறையை உருவாக்குதல்
    அயல்நாட்டுகளிலுள்ள குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கும் பள்ளிகளைத் தமிழக அரசு உலகமெங்கும் முழுக்க உருவாக்க வேண்டும்.  அவர்களுக்குக் கணினி, தமிழ் மென்பொருள்கள் ஆகியவற்றை வழங்க வேண்டும்.  அவ்வாறு செய்யும்போது எம்.ஏ (தமிழ்) கற்ற ஆயிரக்கணக்கான தமிழ் இளையோர் பணிவாய்ப்பு பெறுவர்.  அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு இருக்கைகளுடன் கூடிய தமிழ்த்துறைகளை உருவாக்க வேண்டும்.
10.    ஊடகத் தமிழ் சீர் செய்யப்பட வேண்டும்
    எழுத்துப் பிழைகளோடும், சொற்பிழைகளோடும், வாக்கியப் பிழைகளோடும் நாளேடுகள், வார ஏடுகள் வெளிவருவதை உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும்.
    தொலைக்காட்சி ஊடகங்களிலும் பண்பலை வானொலிகளிலும் ஆங்கிலம் கலந்து பேசப்படும் தமிழ் அழகுத் தமிழாகப் பேசப்பட உறுதி“ செய்யப்பட வேண்டும்.
11.    தெருவெல்லாம் தமிழ் முழக்கம் வேண்டும்
    தமிழகத் தெருக்களிலும், அங்காடிகளிலும், இல்லங்களிலும் தூய தமிழ்ப் பெயர்கள் இடம் பெற வேண்டும்.
12.    செல்பேசிகளில் தமிழ் மலர வேண்டும்
    செல்பேசிக்குறுஞ்செய்திகள், செல்பேசி இயக்கு ஆணைகள் யாவும் தமிழில் மட்டுமே இடம் பெறச் செய்ய வேண்டும்.
13.    விமான நிலையங்களில் தமிழ்
    தொடர் வண்டி நிலையங்களில் தூய தமிழ் இடம் பெற வேண்டும்.
ஆய்வு முடிவுரை
    கடல் கோள்களையும், களப்பிரர்களின் இருட்டிடப்புகளையும், சந்தித்து இன்னமும் இளமையாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் செம்மொழித் தமிழ் நாளையும் இளமையாக இருக்கும்.  காலத்திற்கேற்ப வளர்ந்து, மாற்றங்களுக்கு உள்ளாகி உலகம் முழுக்கப் பரவிவரும் செம்மொழித் தமிழைப் பிறமொழிக் கலப்பின்றிப் பேசுவதும் எழுதுவதும் அவசியமாகிறது. தமிழ்ப் பண்பாடு செழுமைமிக்கது.  உலகளாவிய பெருமை மிக்கது.  நம் பெருமையை நமக்குள்ளாக நாமே பேசிக் கொண்டிருப்பதைவிட “தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை” செய்திடல் வேண்டும்.  பாரதிசொல்வதைப் போலப் பிறநாட்டார் நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழிக்கு நாம் கொண்டுவர வேண்டும்.  தமிழை நகைச் சுவைக்காகக் கொச்சைப்படுத்துவது கூட நம் தாயைக் கொச்சைப்படுத்துவதைப் போன்றது.  தமிழை உலகத்தார் உணரச் செம்மொழித் தகுதி உதவியாக அமைகிறது.
    “எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழென்று சங்கே முழங்கு
    எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”
    ஒன்றாக உழைத்து ஒன்றாகத் தமிழை வளர்த்தால் செம்மொழித் தமிழ், செழுந்தமிழ்க் கனியாக நிச்சயம் மலரும்.
அடிக்குறிப்பு
1.    தொல்காப்பியம், நூ.385.
2.    A comparative Grammar of the Dravidian of South Indian Family of languages, Robert A Caldwell, p.22.
3.    ச.வே.சு. தமிழ் இலக்கிய வரலாறு,ப.12.
4.    மேலது, ப.19.
5.    நடனகாசிநாதன், மா. சந்திரமூர்த்தி, பண்டைத்தடயம், ப.56.
6.    ச. கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாட்டுச் செப்பேடுகள், தொகுதி.2, ப.7.
7.    ச.வே.சு. தமிழ் இலக்கிய வரலாறு, ப. 45.
8.    பாரதிதாசன் பாடல்கள், ப. 81.
துணைநூல்பட்டியல்

1.
ச. கிருஷ்ணமூர்த்தி
தமிழ்நாட்டுச் செப்பேடுகள்,
மெய்யப்பன் தமிழாய்வகம்,
53, புதுத்தெரு,
சிதம்பரம் – 608 001.
2.
நடன. காசிநாதன்
மா. சந்திரமூர்த்தி (தொ.ஆ)
மணிவாசகர் பதிப்பகம்,
31, சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை – 108.
3.
முனைவர் ச.வே.சு.மணிவாசகர் பதிப்பகம்,
31, சிங்கர் தெரு,
பாரிமுனை,
சென்னை – 108.
4.
டாக்டர் தொ. பரமசிவன் (தொ.ஆ)பாரதிதாசன் பாடல்கள்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
அம்பத்தூர்,
சென்னை.

Posted

                                                                தள்ளாடும் தண்டுவடங்கள்
குழந்தைகள்...
இறைவனின் இதய ரோசாக்கள்
இந்தியாவின் இளைய ராசாக்கள்!
மடியில் தூங்கும் மகாத்மாக்கள்...

குழந்தைகள் உலகம்
மலரைவிட மென்மையானது
மகாத்மாவைப்போல உண்மையானது!
மொத்தத்தில் அவர்களின்
உலகம் உன்னதமானது
அவர்களின் அற்புத உலகம்
பேராசை அற்ற பேரின்ப உலகம்

குழந்தைகள்...
பள்ளிக்குப் போகும் பரமஹம்சர்கள்
விவேகம் மிக்க விவேகானந்தர்கள்

சமுதாயத்தின்
வன்முறை அடிகளால்
வலிக்கிறது அவர்கள் நெஞ்சம்

குழந்தைகளைப் புரிந்து கொள்வது
காலத்தின் கட்டாயம்.
அவர்கள் திறன்களால் நிரப்பப்பட்டவர்கள்

படித்தவுடன் கிழித்துப் போட
அவர்கள் காகித உறைகள் அல்லர்
காலத்தின் வெற்றியாளர்கள்.
அவர்கள்
புத்தர்கள் அவர்களுக்குள் புதைந்து கிடக்கலாம்.
அப்துல் கலாம்கள் அவர்களுக்குள்
அடையாளம் காணப்படாமலிருக்கலாம்
அந்தத் தளிர்களை விருட்சங்களாக்க வேண்டியது
நம் கடமை!

அவர்களை ஊக்குவிப்பதும்
அவர்களுள் உற்சாகத்தைத்
தேக்கிவைப்பதும் நம் தேசியக்கடமை.

குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விடக்
குழந்தைகளைக் கொண்டாடுவதே
நேருஜிக்கு நாம் செய்யும் ஆத்ம அஞ்சலி
வோ்களின் மீது வெந்நீரை ஊற்றிவிட்டு
அவர்கள் கனிகளுக்காகக் காத்திருக்கிறார்கள்!

எங்கெங்கு காணினும் குழந்தைத் தொழிலாளர்கள்
உணவகத்தில்
எச்சில் இலை எடுக்க, எடுபிடியாய் நின்றிருக்க
அச்சில் வார்த்த சிலையால் அருமைக் குழந்தையினம்
தீப்பெட்டி ஒட்டுகிறது, தீபாவளி வெடி கட்டுகிறது.
செங்கல் சூளையிலும் கல்லுடைக்கும் குவாரியிலும்
வாகனப் பழுது நீக்கு நிலையங்களிலும்
என்னருமைக் குழந்தை இனம்

இன்னொரு பிள்ளைதனை
இடுப்பில் சுமந்து பிச்சை எடுக்கிறது ஒரு குழந்தை.

பள்ளியிலே உணவளித்தால்
பாட்டாளிக் குழந்தையினம் வருமென்று
டெல்லியிலே நிதிவாங்கிக் காமராசர் தந்த பின்னும்
சுள்ளி பொறுக்குகிறது
சும்மாடு கட்டிச் சுமை தூக்குகிறது.

அள்ளி அணைத்திடவோ யாருமில்லை..
பள்ளி கொண்டு சேர்த்தாலும் வருவதில்லை.

இனியொரு விதி செய்வோம்!
அதை எந்நாளும் காப்போம்!
குழந்தைகளின் சகாராக்களை
நந்தவனமாக்குவோம்.

அவர்களின் சிறைகளை மாற்றிச்
சிறகுகள் பூட்டுவோம்!
திறன்களைத் தேடி
உற்சாகத்தை ஊட்டுவோம்
அவர்களைப் புரிந்துகொண்டு    
              பேராசிரியர் முனைவர். . மகாதேவன்,