தள்ளாடும் தண்டுவடங்கள்
குழந்தைகள்...
இறைவனின் இதய ரோசாக்கள்
இந்தியாவின் இளைய ராசாக்கள்!
மடியில் தூங்கும் மகாத்மாக்கள்...
குழந்தைகள் உலகம்
மலரைவிட மென்மையானது
மகாத்மாவைப்போல உண்மையானது!
மொத்தத்தில் – அவர்களின்
உலகம் உன்னதமானது
அவர்களின் அற்புத உலகம்
பேராசை அற்ற பேரின்ப உலகம்
குழந்தைகள்...
பள்ளிக்குப் போகும் பரமஹம்சர்கள்
விவேகம் மிக்க விவேகானந்தர்கள்
சமுதாயத்தின்
வன்முறை அடிகளால்
வலிக்கிறது – அவர்கள் நெஞ்சம்
குழந்தைகளைப் புரிந்து கொள்வது
காலத்தின் கட்டாயம்.
அவர்கள் திறன்களால் நிரப்பப்பட்டவர்கள்
படித்தவுடன் கிழித்துப் போட
அவர்கள் – காகித உறைகள் அல்லர்
காலத்தின் வெற்றியாளர்கள்.
அவர்கள்
புத்தர்கள் அவர்களுக்குள் புதைந்து கிடக்கலாம்.
அப்துல் கலாம்கள் அவர்களுக்குள்
அடையாளம் காணப்படாமலிருக்கலாம்
அந்தத் தளிர்களை விருட்சங்களாக்க வேண்டியது
நம் கடமை!
அவர்களை ஊக்குவிப்பதும்
அவர்களுள் உற்சாகத்தைத்
தேக்கிவைப்பதும் நம் தேசியக்கடமை.
குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுவதை விடக்
குழந்தைகளைக் கொண்டாடுவதே
நேருஜிக்கு நாம் செய்யும் ஆத்ம அஞ்சலி
வோ்களின் மீது வெந்நீரை ஊற்றிவிட்டு
அவர்கள் கனிகளுக்காகக் காத்திருக்கிறார்கள்!
எங்கெங்கு காணினும் குழந்தைத் தொழிலாளர்கள்
உணவகத்தில்
எச்சில் இலை எடுக்க, எடுபிடியாய் நின்றிருக்க
அச்சில் வார்த்த சிலையால் அருமைக் குழந்தையினம்
தீப்பெட்டி ஒட்டுகிறது, தீபாவளி வெடி கட்டுகிறது.
செங்கல் சூளையிலும் கல்லுடைக்கும் குவாரியிலும்
வாகனப் பழுது நீக்கு நிலையங்களிலும்
என்னருமைக் குழந்தை இனம்
இன்னொரு பிள்ளைதனை
இடுப்பில் சுமந்து பிச்சை எடுக்கிறது ஒரு குழந்தை.
பள்ளியிலே உணவளித்தால்
பாட்டாளிக் குழந்தையினம் வருமென்று
டெல்லியிலே நிதிவாங்கிக் காமராசர் தந்த பின்னும்
சுள்ளி பொறுக்குகிறது
சும்மாடு கட்டிச் சுமை தூக்குகிறது.
அள்ளி அணைத்திடவோ யாருமில்லை..
பள்ளி கொண்டு சேர்த்தாலும் வருவதில்லை.
இனியொரு விதி செய்வோம்!
அதை எந்நாளும் காப்போம்!
குழந்தைகளின் சகாராக்களை
நந்தவனமாக்குவோம்.
அவர்களின் சிறைகளை மாற்றிச்
சிறகுகள் பூட்டுவோம்!
திறன்களைத் தேடி
உற்சாகத்தை ஊட்டுவோம்
அவர்களைப் புரிந்துகொண்டு
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
This entry was posted
at 01:48
. You can follow any responses to this entry through the
.