எங்கள் கவிதையை வெளியிட்ட
ஆனந்த விகடனுக்கு மகா தமிழ்
நன்றியை தெரிவித்துக்கொள்கிறது
எலிகளானோம் நாம்(பக்கம் எண் 20)
உன் உயிர் பிரியும் இறுதிநாளுக்கு
முந்தைய நாள் வரை நீ சகஜமாகத்தானிருந்தாய்
மரணத்தின் விடியல் என்றறியாமல் துயிலெழுந்து
பல் துலக்கிப் பலகாரம் உண்டு
பாளை பஸ்நிலையம் ஓடி
பேருந்து பிடித்துப் பதறிப் பணி செய்து
வண்ணாரப்பேட்டை பேராச்சி அம்மனைத் தரிசித்து
மகனைப் பற்றிக் கவலைப்பட்டு
மகளறியாமல் அவள் செல்பேசிய எண் பார்த்து
ஆயாசத்தோடு படுக்கப் போகும் வரை
நீ அறியாத உன் மரணம்
உன் காலுக்குக்கீழே தான் பரவிக்கொண்டிருந்தது
வாளியிலிருந்து சிந்திய தண்ணீர்
தரையில் பரவுவதைப் போல்
அடுக்களை இருட்டிலிருக்கும்
பூனையைக் கவனிக்காமல்
அதன் எதிரில் உலவும் எலிகளானோம் நாம்
This entry was posted
at 09:47
. You can follow any responses to this entry through the
.