உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தின ஜீன் 5 விழிப்புணர்வுக் கவிதை
அதுவரை ஓய்வில்லை…
யாரப்பா அது!
உலகப்பந்தை உயிரோடு புதைப்பது?
தவலைப் பானையில் வெந்நீர் போட்டது மாதிரி
கவலைப் பானையில் கண்ணீரை நிரப்பியது யார்?
துருவப் பகுதிகளில் பனிப்பாறைகள் உருகினால்
தூத்துக்குடிக் கடல், பாளை வரை பரவுமப்பா!
பதை பதைக்கவில்லையா நெஞ்சம்?
அன்று ஓசிக்காற்றை ஒய்யாரமாகச் சுவாசித்தவன்
இன்று ஏசிக்காற்றுக்கு ஏங்குவது ஏனப்பா?

துக்கத்தில் துடிக்கிறதப்பா தூய பூமி!
வெட்கத்தை விட்டுச்சொல்...
உனக்கும் இதில் பங்கில்லையா?
எருமைக்குரல் ஒலியெழுப்பிகளை மாட்டியபடி - சாலைகளில்இருசக்கர ஊர்திகளில் நீ பறக்கும் போது
மருத்துவமனைகளின் மண்டையோட்டை நீ உடைக்கவில்லையா?
கொசு மருந்து வண்டிகளைப் போல
கரும்புகைக் கக்கிப்போகும் உன் வாகனங்களால்
பயணச்சாலைகள் சுடுகாடுகளாய் மாறிவிடவில்லையா?
ஓசோன் குடைகளில் ஓடிப்போய் ஓட்டை போட்டவனே!
உன் தோலெல்லாம் தொழுநோய் வரச்சம்மதமா?
வயல்களை உழுது உரத்தால் நிரப்பினாய்!
காய்கனிகளை எல்லாம் வேதியியல் கிடங்காய் மாற்றினாய்!
கழிவுத் தொட்டியாய் தாமிரபரணியை மாற்றினாய்!
பிளாஸ்டிக் அழிவுகளால் உலகத்தைத்தாக்கினாய்!
குருதி முதல் சாம்பார் வரை பாலிதீன் பைகளில் தேக்கினாய்!
இயற்கையே சுகமென்றிருந்தவனின் இதயத்தைத் தாக்கினாய்!
நுரையீரலோடு தப்பாமல் தண்ணீர்ப் பாட்டிலையும் தூக்கித் திரிபவனே! –
இனி
உயிர்க்காற்றுக்கு உரிய உத்திரவாதம் இல்லாததால்
வாயு உருளைகளை வயிற்றில் கட்டிக்கொண்டு திரியப் போகிறாயா?
மரங்களின் மரணத்திற்கு மனுப்போட்டு விட்டுத்தானே
நான்கு வழிச் சாலைகள் அமைக்க நாள் செய்தாய்!
அதுவரை ஓய்வில்லை…
திருச்செந்தூர்ச் சாலையில் வானுயர்ந்து இருந்த
மருதமரங்களின் இடத்தில் இப்போது சிக்னல்
மரங்கள் சிக்கலாய் சிரிக்கின்றனவே!
உன் மின்சார ரம்பங்கள் படாமல்
மிச்சசமிருப்பது கோயில் கொடி மரங்கள் மட்டும்தானா?
குளங்களைக் குறிவைத்தாய் – பாவம்
அவற்றில் பேருந்துகள் நிற்கின்றன.
நதிகளைக் குறி வைத்தாய்
அவற்றைப் பொக்லைன்கள் தின்கின்றன.
இயந்திரங்களோடு நீ எங்கே சென்றாலும்
இடரென்னவோ இயற்கைக்குத்தான் எப்போதும்!

இது கொண்டாடப்பட வேண்டிய தினமன்று
கழிவுகளின் அழிவுகளைக் கண்டு நாம்
மாற வேண்டிய தினம்
v இனி ஒரு விதி செய்வோம்...
தனி ஒரு வழி செய்வோம்...
இற்றுப் போகும் சுற்றுச்சூழலைப்
பற்றிப் பாதுகாப்போம்
அதுவரை ஓய்வில்லை.
- முனைவர். ச. மகாதேவன்
This entry was posted
at 08:52
. You can follow any responses to this entry through the
.