தி.க.சி.என்கிற இனிய மனிதர் முனைவர் ச.மகாதேவன்

Posted







முன் தயாரிப்பற்ற வாழ்வின் நகர்வுகளில் நாம் அடையாளம் காண்கிறோம் அன்பான இதயங்கள் பலவற்றை.குடித்து முடித்த பின்னும் நாத்தேடுகிற இளநீர்த் துளிகளைப் போல் மனம் தேடிஅலைகிறது மாசுமருவற்ற நல்லமனிதர்களை.இளக்கமாய் இருக்கிறவரைதானே எப்படி வேண்டுமானாலும் இந்த வாழ்வு நமை வசதியாய் வளைக்கும்? காற்று அசுரபலத்தோடு இருக்கும்போதும் சிலகணங்களில் நம்மால் மகிழ்வாகத் தூற்றிக்கொள்ளமுடியவில்லை.எல்லோருக்கும் பிடித்துக் கொள்ள ஒரு சுட்டுவிரல் மிச்சமிருக்கிறது.அனால் அந்தக் கரத்தைத்தேடித்தான் காலஓட்டம்.


அய்யா பாலம் கல்யாணசுந்தரம் அவர்களோடு திருநெல்வேலி நகரம் சுவாமி நெல்லையப்பர் ரதவீதியில் நடக்கிறேன்.சாலையோரத்தில் சுடலைமாடன் கோவில் குறுகலான சந்து.இருபக்கமும் வளவுவீடுகள்.அந்தத்தெருவின் கடைசிவீடு,அரண்மனைபோல் பெரிதாய்இருக்கிறது.உள்ளே செல்ல சிறுமுடுக்கு.உள்ளே நுழைகிறோம்.அழகான கல்திண்ணை கம்பீரமாய் காத்திருந்தது.எளிமையின் சான்றாய் பெரியவர் தி.க.சிவசங்கரன்அய்யா.தி.க.சி அய்யா குறித்து நான் கல்லுரியில் எம்.ஏ.தமிழ் பயின்ற போதே சிவசு அய்யா நிறையச்சொல்லி இருக்கிறார்.

தாமரை இதழின் ஆசிரியராக அவர்இருந்தபோது அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் தற்போது தமிழின் புகழ்வாய்ந்த கதைப்படைப்பாளர்களாகத் திகழ்கிறார்கள் என்று சொல்லியிருக்கிறார்.வெள்ளை வேட்டி வெள்ளைசட்டையில் அய்யா தி.க.சி.உடன் வள்ளி இருந்தார்.இருவரும் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருந்தார்கள்.ஏதும்பேசாமல் மௌனமாய் கல்திண்ணையில் அமர்ந்திருந்தேன்.அன்று பௌர்ணமி நாள்.அந்த நிலாமுற்றம் தமிழ்முற்றமாகப்பட்டது.


பாலம் கல்யாணசுந்தரம் அவர்களோடு வந்திருக்கும் தம்பியாருன்னு தெரியலியே என்று தி.க.சி .கேட்க அய்யா அறிமுகப்படுத்தினார்.சேவியர் கல்லூரியில் எம்.பில் படிக்கிறார் மகாதேவன் இவரோட பெயர் ,புதுமைப்பித்தன் கவிதைகள் குறித்து ஆய்வு செய்கிறார் .எழுதவேண்டும் என்பது இவரது அவா என்று சொன்னஉடன் தி.க.சி. நிமிர்ந்து உட்கார்ந்தார்.தம்பி என்னோடஅறையில புதுமைப்பித்தன் படவடிவுல இருக்காரு என்றபடி அவரது நினைவில் கொஞ்சம் கொஞ்சமாய் முழ்கத் தொடங்கினார்.சாபவிமோசனமும்,காஞ்சனையும்,காலனும்கிழவியும் பலமுறைப் படிக்கவேண்டும் என்று சொன்னார்.உணர்ச்சிவயப்பட்ட நிலையில் பேசிய அவரை வள்ளிதான் ஆசுவாசப்படுத்தினார்.

அவரைச் சந்தித்துவந்த அன்றே இரவுத்தூக்கம் மறந்து புதுமைப்பித்தன் கவிதைகளுக்குள், கதைகளுக்குள் மூழ்கிக்கிடந்தேன்.


கொட்டாவிவிட்டதெல்லாம்

கூறுதமிழ்ப் பட்டாச்சே

முட்டாளே இன்னுமா பாட்டு? 


என்று எவ்வளவு துணிச்சலோடு புதுமைப்பித்தன் பாடியிருக்கிறார் .

அதன்பின் பலமுறை தி.க.சி.அவர்களைச் சந்தித்திருக்கிறேன்.மணிகணக்கில் பேசுவார்.அந்த வளவுவீட்டின் வலப்புறமுள்ள அவரது அறையில் சந்திப்பது எனக்குப் பிடிக்கும்.மகாதேவன் அந்த மடக்குச் சேர எடுத்துப் போட்டுக்குங்க என்று தொடங்கும் தி.க.சி கொஞ்சம் கொஞ்சமாய் தமிழ்இலக்கியத்திற்குள் நுழையத் தொடங்கினார்.கீரனூர் ஜாகிர்ராஜா மீன்காரத்தெருபடிச்சாச்சா என்று இஸ்லாமிய இலக்கியத்தில்பேசத்தொடங்கினார்.

சிலநூல்களைப்படிக்காமல் அவருக்கு எதிரேஇருந்தது வெட்கமாக இருந்தது.

நிழற்படக்கலைஞர் ரஞ்சித்தோடு அந்தமுறை சென்றேன்.முனைவர் பட்ட ஆய்வுக்காக அய்யா அவர்களைச் சந்திக்கச் சென்றேன். கணபதி அய்யா,வண்ணதாசன் அய்யா குறித்து குடும்பம் குறித்துப் பேசினார். சமிபத்தில் தவறிய தன்வாழ்கைத் துணைநலம் குறித்துப் பேசினார்.

எங்கள் இருவரையும் வீடுமுழுக்க அழைத்துச்சென்று காட்டினார்.பட்டாசல்,தார்சா எனக் கட்டிக்கொண்டு வந்தவர் ஒருவிநாடிஉணர்ச்சி வசப்பட்டார்.என்மனைவியோடு ஒரு படம் எடுத்துக் கொள்ளட்டா என்றார்.ரஞ்சித் ஒரு கணம் திகைத்துப் போனார்.எத்தனையோ நிழற்ப்படங்கள் எடுத்த அவர் அந்தப் படத்தை எடுத்தார்.தன் மனைவியின் வண்ணப்படம் சுவற்றில் தொங்க அந்த பாசமானகணவர் தி.க.சி.அருகில் நின்று படம் எடுத்துக்கொண்டார்.புதுமைப்பித்தனின் அத்தனைக் கதைகளும் ஒன்றுசேர்ந்து உருவான மிக நெகிழ்வான படமாக அந்தப்படம் அமைந்தது.நினைத்துப் பார்க்கிற யாவுமே உணர்வின் வேரை நனைத்துப் பார்க்கத்தானே செய்யும்.இப்போதும் சந்திப்பிள்ளையார் கோவில் கடந்து பயணிக்கும் போதில் அந்தப்படம் முன்வந்து நிற்கிறது
.

சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி






This entry was posted at 05:48 . You can follow any responses to this entry through the .

0 comments