இரும்படிக்கும் அரும்புகள்
பார்த்தீர்களா இந்தப் பரிதாபத்தை?
செடியில் தூங்கும் மலர்களைப்போலத் தாயின்
மடியில் தூங்கும் மகவுகளின் இதயம் பிளந்து
குருதி வடிவதைப் பார்த்தீர்களா?
இந்தப் புனிதப் பூக்களின் முதுகில்
சோகப் பாக்களை வேகமாய் எழுதியது
யார் நேருஜி?
விடியல்கள் ஏன் இவர்களுக்கு விரைவாகக் கிடைக்கவில்லை?
எச்சில் துடைக்கிற கரங்கள் இவர்களுடையன.
பேருந்து நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகளில்
இஞ்சிமரப்பா முறுக்கு விற்பவர்களாய்
வாகனப் பழுது நீக்கும் நிலையங்களில்
கரிச்சட்டைகளோடு வண்டி கழுவுபவர்களாய்
சல்லடையோடு சாக்கடை சலிப்பவர்களாய்
செங்கல் சூளைகளில் மண்வண்டி தள்ளுபவர்களாய்
முதுகில் மூட்டைகளோடு
குப்பைத் தொட்டிகளில் பிளாஸ்டிக்பைப்
பொறுக்குபவர்களாய்
ஆம்! குழந்தைகள் தினமும் குறிவைத்துக்
கொடுமைப்படுத்தப்படுகிறார்கள்.
தளிர்களின் தலைகளில் தண்டனையைத்
தந்துவிட்டு
எந்தச் சமூகமும் சந்தோஷமாய் இருந்துவிடமுடியாது
தீப்பெட்டி மருந்துகளில்
தீய்ந்து போன அவர்களின்
வாழ்க்கையை மீட்டெடுக்கப்போவது யார்?
அங்காடித் தெருக்களில்
அனாதரவாகத் திரியும் இந்தப்
பிள்ளைப் பிஞ்சுகளுக்கு
விடுதலை தேடித்தரப்போவது யார்?
சுள்ளிகளிலிருந்து மீட்டுப்
பள்ளிகளில் சேர்க்கப்போவது யார்?
இந்தியாவில் வாழும் இருபதுகோடிக்
குழந்தைகளில்
ஒரு கோடிக் குழந்தைகள்
உழைக்கும் தொழிலாளர்கள்!
ஐ.நா. புள்ளிவிபரம் அதிர்ச்சி தருகிறது.
அவர்களில்
சீர்காழிக் குளக்கரையில் சின்னவயதில்
தேவாரம் பாடிய தெய்வக் குழந்தை தமிழ்ஞான சம்பந்தன் இருக்கலாம்.
இராமேஸ்வரத் தீவுக் கடற்கரையில்
இந்தியா வளரச் சிந்தித்த ‘கலாம்கள்‘ இருக்கலாம்
அரிச்சந்திர நாடகம் கண்டு
மகாத்மாவாக மாறிப்போன கரம்சந்த்காந்திகள் இருக்கலாம்.
அரசுப் பள்ளியில் அரிச்சுவடி பதித்துச்சாதித்து
தமிழக நாளிதழ்களில் தலைப்புச் செய்தியான
மல்லிகை மலர்கள் இருக்கலாம்.
நஞ்சுக்கரங்களால் இறுக்கப்படும்
பிஞ்சுக் கரங்களைப் பாசத்துடன் பற்றுவோம்.
குழந்தைத் தொழிலாளர் கொடுமையை ஒழிப்போம்..
குழந்தைகள்
தொழிலாளர்கள் அல்லர்
சாதனை வானில் பறக்கும்
சரித்திரப் பறவைகள்
பேராசிரியர் முனைவர். ச. மகாதேவன்,
This entry was posted
at 01:42
. You can follow any responses to this entry through the
.