காலம் கவனித்துக் கொண்டே இருக்கிறது
யாவற்றையும்.கரி நாட்களுக்கு மேலும் கையில் வேலோடு “யாமிருக்க பயமேன்” என்று
சிரிக்க முடிகிறது காலண்டர் முருகர்களால்.பாளை.அருங்காட்சியகத்திற்கு அருகே பத்து
ரூபாய்க்குக் கலர்க்கோழிக் குஞ்சுகளை அட்டைஅரணிட்டு விற்க முடிகிறது.ஜான்ஸ்
கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் பூச்செடிகளை விற்கும் உயர மனிதர் இரவுப் பொழுதுகளில்
அப்பூச்செடிகளுக்கு மத்தியில் எந்தக் கவலையும் இன்றி உறங்க முடிகிறது.பத்தடி உயரப்
பிள்ளையார் பொம்மை செய்து வைத்து விற்காததால் அடுத்த பிள்ளையார் சதுர்த்தி வரை
சாக்கு சுற்றி வைத்து திருச்செந்தூர் சாலையோரத்தில் ஒரு வருடம் காத்திருக்க
முடிகிறது.
விற்காமல் போனாலும் கவலை இன்றி ஹெல்மெட் வியாபாரியால் வண்ணார்பேட்டை
சூரியன் பண்பலை முன்பு சாலைஓரத்தில் தூங்க முடிகிறது.ப்ளெக்ஸ்களினால் நசிந்துபோய்
விட்டாலும் வேதவசனங்கள் எழுதியோ நாளைய நம்பிக்கை என்று அழகாக எழுதியோ பிழைக்கும்
அந்த தாடிவைத்த ஆர்டிஸ்ட்டால் தன் கைகளை நம்பி வாழமுடிகிறது.பறக்க முடிவு
செய்தவனுக்குச் சிந்தனையில்கூட சிறகு முளைக்கும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாய் வாழ
முடிகிறது வெறுப்பில்லா வெற்றி மனிதர்களாய்.தடம் போட்டவர்களைவிடத் தடம்
பதித்தவர்களை வரலாறு என்றும் வரவுவைத்துக்கொண்டுள்ளது.
குரு.சண்முகநாதன் அவர்களின் “கடவுளரும்
நல்லெண்ணெயும்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது அவரைக்
கண்டேன்.இதயம் நிறுவன அதிபர் வ.இரா.முத்து அவர்கள் நம்பிக்கையின் அடையாளமாகப்
பேசினார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரது எளிமையான பேச்சு கவர்ந்தது.மரபு
சார்ந்த குடும்பத்தொழிலான நல்லெண்ணெய் வாணிபத்தை இன்று கடல் கடந்த நாடுகளில் பரப்ப
அவர் மேற்கொண்ட உத்திகள் வியப்பிற்குரியன.நம் மரபு சார்ந்த பாட்டிவைத்திய முறைகளை
உலகத்தமிழ்ச் சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லும் அவர் நோக்கும் போக்கும் வியக்க
வைப்பதாய் அமைகிறது.தன் இருமகள்களுக்கும் தூய தமிழ்ப் பெயர்களை
வைத்துள்ளார்.வான்புகழ் வள்ளுவர் தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறார்.தமிழ்மண் சார்ந்த
பழமொழிகள்,இலக்கியங்களில் நூல்கள் உருப்பெற உதவி செய்துள்ளார்.எங்கள் பேராசிரியர்
முனைவர் கட்டளை கைலாசம் அவர்களின் இரு மாணவர்களும் அவர்முன் விழாவில் பங்கேற்றுப்
பேசியதும் அவருடைய ஆசிகளுடன் தொடர்ந்து பயணிப்பதும் சுகமானதாய் அமைந்தது.
ஊக்குவிக்க ஆளிருந்தால்
ஊக்குவிற்பவனும் தேக்கு விற்பான்
என்பது உண்மைதான்.
சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி
This entry was posted
at 10:49
. You can follow any responses to this entry through the
.