பெயர்த்து எறிந்துவிடலாம்.. பழைய வீட்டின்
காரைத்தளத்தை ..எப்படி எறிவது?
நேற்றைய
நிமிடங்களின் இன்றைய நினைவுகளை?நிலைகொள்ளாமல் தவிக்கிற நிர்பந்தங்கள்
ஒருபுறம்,நெருக்கடிகளைத் தாண்டி வாழ்வை நேசிக்கும் வசந்தநினைவுகள்
மறுபுறம்.வெற்றுத்தாளில் வேகமாய் உழுகிற பேனாவைப் போல் நினைவுத் தாட்களில் நிறையவே
எழுதுகிறது காலமெனும் கலைக்கோல்.
ரப்பர் வளையல்கள்,கலர்கலராய்
ரிப்பன்கள்,கறுஉருண்டைக் குஞ்சலங்கள் இவற்றைப் பார்த்து வெகுநாளாயிற்று.
போய்க்கொண்டே இருக்கிறேன் வித்தியாசமான
மனிதர்களோடு.
விளம்பரம் தேடாமல் மனிதம்போற்றிக்
கொண்டிருக்கும் மகாராஜநகர் ஆறுமுகம் தாத்தா.
முருகன்குறிச்சி வக்கில் ஆபிஸ் முன்னால்
காத்துகிடக்கும் குழந்தைகளாய் நினைத்து அவ்வளவு நேரநெருக்கடியிலும் நாய்களுக்குத்
தவறாது பிஸ்கட் போடும் அந்தப் வழக்கறிஞர்,
காலங்களில் அவள் வசந்தம் என்று மேடைகளில் தன்னை
மறந்து அச்சுஅசலாய் பி.பி.ஸ்ரீநிவாஸ் குரலில் அவராகவே மாறிப்பாடும் அந்த நெல்லை
மருத்துவர்,
ஹைதர்அலி காலத்துக் கார் முதல் பென்ஸ் கார்வரை 12
பழையகார்களை நாடுமுழுக்க ஓடிவாங்கி கார்க்குழந்தைகளாகவே பாவித்து
என்.ஜி.ஒ.காலனியில் வாழ்ந்து சமீபத்தில் மறைந்த சகபேராசிரியர் இஸ்ரவேல் தேவதாசன்,
பொன்வண்டு சோப்பு பெயர் போட்ட
அழுக்குபனியனுக்குள் ரேடியோபெட்டியைப் போட்டபடி மார்க்கெட்க்குள் மகிழ்ச்சியாகச்
சுற்றிக்கொண்டு இருக்கும் சுப்பையா அண்ணாச்சி...
இப்படி எத்தனையோ சுவாரசியமான
மனிதர்களால் இன்னும் சுவாரசியமாகின்றன என் நாட்கள்.
அன்று மாலையும் அப்படித்தான் நீலனால் நீண்டு
நீலமயமான வானமாய் மாறியது.
1986-1992 வரை பாளையம்கோட்டை தூய சவேரியாரமேல்நிலைப்பள்ளியில் படித்த மாணவர்களை அந்த மாலை வேளையில் லயோலா அரங்கில் நீலன்
ஒன்றுசேர்த்திருந்தார்.
வாழ்க்கைச் சுழலில் சிக்கி அதை ஆளுமையோடு
எதிர்கொண்ட கலைஞன் நீலன், விசுவின் அரட்டைஅரங்கத்தில் பாளையில் பதினைந்து
ஆண்டுகளுக்கு முன் பேசியபோது அறிமுகமானவர்.
அப்பாவின் அன்பு மாணவராகத்தான் நீலன் எனக்குப்
பழக்கம்.அ,ஆ,இ.ஈ...எனும் கவிதைநூலை எழுதிஇருந்தார்.பாளை. தியாகப்பிரும்மம்
இன்னிசைமண்டபத்தில் அந்நூலின் வெளியீட்டு விழாவை நடத்தினார்.அப்பாவோடு பங்கேற்றுப்
பேசினேன்.
அதன்பின் சென்னை சென்று உதவிஇயக்குநராய்
சேர்ந்து போராடி படங்களை இயக்கித் தனக்கான இடத்தைப் பிடித்தவர் என்பதால் அவர்
தன்னம்பிக்கை பிடிக்கும்.
அப்பாவோடு பள்ளிக்குள் நுழைகிறேன்.மனதிற்குள் இனம்புரியாத ஓர் பூரிப்பூ.
பள்ளி ரொம்பவே மாறிஇருந்தது.கட்டிடங்கள்
பள்ளியின் உருவை மற்றிஇருந்தன.
அந்திசாயும் அம்மாலை வேளையிலும் பள்ளி ஏதோ
என்னிடம் சொல்வதுபோல் இருந்தது.
அசம்பிளியில் பெலிக்ஸ் பாதர் பேசுவதுபோலவும்
நாங்கள் கைக்கூப்பி நின்று இறைவேண்டல் நடத்துவது போலவும் இருந்தது.
காலையில் மாணவர்களின் நெரிசலில் நசுங்கிப்
போயிருந்த மிகநீண்ட வகுப்பறைகள் அந்த அந்தி வேளையில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்ததுபோல்
இருந்தது.
வழக்கம்போல் வெள்ளை வேட்டியோடு செல்வம் ஓடிவந்து
அப்பாவின் கைகளைப்பிடித்துக் கொள்கிறார்.
படிக்கட்டுக்கள் லயோலா அரங்கிற்கு அழைத்துச்
சென்றன.
மீள்கூடுதல் விழா பங்கேற்றவர்களின் நெருக்கத்தாலும்
உணர்வின் உருக்கத்தாலும் நெகிழ்வாய் இருந்தது.
சாயங்களையும்,அரூப தன்பிம்பங்களையும்
விட்டுவிட்டு வெகுஇயல்பாய் பேசினார்கள் யாவரும்.
பள்ளி அவர்களை எண்பதுகளுக்குள் நிறுத்திவைத்து
நின்று ரசித்தது.
கலைவார விழா நடத்தி விஜய்ஆண்டனியையும்,ரமணகிரிவாசனையும்,இன்ன
பிற இயக்குநர்களும் உருவாக்கித் தன்னை ஏணியாக்கி மாணவர்களை உயர்த்திய ஆசிரியர்கள்,
சந்திரசேகரன்,அலங்காரராஜ், சௌந்தரராஜன்,அமல்ராஜ்,பாபு ஆகியோர் முன் மாணவர்கள்
நெகிழ்ந்து போயினர்.
நீலன் தன் தமிழாசிரியர் சௌந்தரராஜன்
அய்யாவைக்கண்டு நெகிழ்ந்து போனார்.
இருட்டு கப்பிய அந்தப்பள்ளியில் வெளிச்சங்களாய் இரவுஎட்டரை
மணியிலும் அவர்கள் தாங்கள் படித்த வகுப்புநோக்கி நகர்ந்தபோது பள்ளி
தன்கற்களையும்,சிமண்ட் பூச்சயும் தாண்டித் தாயாக மாறி நீலனையும்,புகைப்படங்கள்
எடுத்த முருகனையும் இன்ன பிறமக்களையும் கட்டி அணைக்கத் தொடங்கி இருந்தது.
இடிக்கப்பட்ட எங்கள் ஒன்பதாம் வகுப்பு அ
பிரிவின் கட்டிடத்திடமிருந்து எங்கள் கிரகோரி சாரின்,நாராயணன் சாரின்,இருதயராஜ்
பாதரின்,பீட்டர் பிடலிஸ் சாரின்,லாசர் சாரின் பாடம் நடத்தும் குரல் கேட்டுக்
கொண்டே இருந்தது.
சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி
This entry was posted
at 11:58
. You can follow any responses to this entry through the
.