சிறுகதை எழுத்தாளர் வண்ணதாசன்

Posted



அவர் கதைகளுக்குள் திருநெல்வேலி,அல்வாவைப் போல் தித்திக்கும் இனிப்பு என்றும் உண்டு.அவரருடைய பரமனும் சுந்தரத்துச்சின்னம்மையும் லோகு மதினியும் சின்னுவும் விபினும் தனுவும் நடுத்தரவர்க்கத்தின் வாழ்வியல் அடையாளங்கள்.ஆறு ஆண்டுகள் அவரது கதைகளைத் திரும்பத்திரும்பப் பலமுறை வாசித்திருக்கிறேன்.வரிக்குவரி அழகியல் பதிவுகளோடு அடுத்த வரிக்குப் போகவிடாமல் செய்யும் ஆற்றல் உடையன அவர்எழுதிய முந்தைய வரிகள்.நீண்ட நேர்காணல் நிகழ்த்துவதற்காக அவரது பெருமாள்புரம் வீட்டில் சிந்தாவோடு அவரை ஓர் மாலைப்பொழுதில் சந்தித்தேன்.தொலைக்காட்சிக்கு மேல் புத்தர் சிரித்தபடி எங்களைப் பார்த்திருந்தார்.உயரமான மனிதராக உள்ளிருந்து புன்னகையுடன் வெளியே வந்தார் வண்ணதாசன் அய்யா கலைநுணுக்கத்தோடு. அமைந்த அந்தப்பச்சைநிற சோபாவில் தலையணை உருளையோடு  வண்ணதாசன் அய்யா அமர்கிறார்.இரண்டு மணிநேரம் மடைதிறந்து பதில் தருகிறார்.வரிக்குவரி வாசித்த சிறுகதைப் படைப்பாளர் தன்னைப்பற்றி எதுவும் உயர்வாகச் சொல்லிக்கொள்ளாமல் வெகுஇயல்பாய் அன்புடன் பேசியது அவர்மேல் மரியாதையை உண்டாக்கியது.அவர் கதைகளை கவிதைகளை வாசித்தபோது அவற்றை அன்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிடலமா என்று தோன்றுகிறது.வண்ணதாசன் படைப்பிலக்கியங்களில் முனைவர் பட்ட ஆய்வில் மேற்கொண்டதும்,திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வாய்மொழித்தேர்வில் வண்ணதாசன் அய்யா துணைவியாரோடு கலந்து கொண்டதும் என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அரைநூற்றாண்டு காலம் தமிழ்ப் படைப்புலகின் அழகியல் பிதாமகனாகத் திகழும் வண்ணதாசன் அவர்களின் படைப்புலகம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தியதும் அதில் காலை முதல் மாலை வரை தி.க.சி அய்யா கலந்துகொண்டதும் நெகிழ்வோடு அதில் வண்ணதாசன் அய்யா ஆற்றிய உரையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வண்ணதாசன் பொங்கிப்பிரவகிக்கும்அழகியல் தமிழ்அருவி.இளையதலைமுறை எழுத்தாளர்களின் முன்மாதிரி.ஒப்பனை இல்லாத ஒப்புமை இல்லாத ஒப்பற்ற எழுத்தாளர்.தளராமல் பயணிக்கும் தாமிரபரணி.வளமுடன் அவர் வாழ அன்புவாழ்த்துக்கள்.
சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி




This entry was posted at 11:14 . You can follow any responses to this entry through the .

0 comments