யாரோ
வீசிய விதைகளிலிருந்து
சொற்செடிகள்
அடர்த்தியாய்
முளைத்துக்
கிடக்கின்றன
சில
இனிப்பாய் சில கசப்பாய்
சுவையுணராச்
சுதந்திரத்தோடு இன்னும் சில…
சொற்களால்
வளர்ந்தவர்கள்கூட
இப்போது
அந்தச் சொற்களைக் கண்டுகொள்வதில்லை
சொல்வனத்தில்
சொக்கவைக்கும் இலைகளுண்டு
பேச்சுமயக்கத்தில்
அவ்வப்போது மூர்ச்சையாவோரைத் தெளியவைக்கும் சர்வரோக நிவாரண சஞ்சீவிகளும் உண்டு
அவ்வனத்தின்
சில சொற்கள்… விற்கள்
குத்தினால்
குருதி கொட்டும்
சில
சொற்கள் விஷ முட்கள், குத்தினால் புரையோடும்
பாராட்டு
விழாக்கள் நடத்த அவ்வனத்தில்
பரந்த
வெளியுண்டு – பிடிக்காமல் போய்விட்டால்
அவரோடு
சமராட அமர்களமும் அங்குண்டு
அவ்வனத்தை
யாரும் பட்டாப் போட முடியாது
சொற்கள்
யாவும் சொந்தம் யாவருக்கும்
எனவே
என் சொல்லென்று எவரும்
சொல்ல
இயலா அளவுக்குச் சுதந்திரமாய்
பரந்து
கிடக்கிறது சொல் அதிகாரம் செய்யும்
அச்சுந்தர
வனம்
ஆதலால்
எவரும்
நீரூற்ற அவசியமற்று
நீண்டு
வளர்கின்றன
அந்தச்சொல்வனச்செடிகள்…
This entry was posted
at 08:40
. You can follow any responses to this entry through the
.