Sunday, March 3, 2013
கவலை மறக்க நட்சத்திரக் கலை இரவுகள்
காமெடி பார்க்க நகைச்சுவை அலைவரிசைகள்
பூரித்துப் போகப் புல்டாக் டைம்கள்
பயணக் களைப்பு நீங்கப்
பண்பலை வானொலிகள்
தேசப்பற்று காட்ட அவ்வப்போது
உலகக் கோப்பை வெற்றிகள்
விழாக்கள் வந்தால்
பட்டி மண்டப் படையல்கள்
நுகர்வுப் பொருள் நிறைக்கக்
கை நிறையக் கடன் அட்டைகள்
‘எவன் செத்தால் எனக்கென்ன?’
‘குயிலாடக் கும்பாளம் போட...’
பார்ப்போம் வா…!
முனைவர். ச. மகாதேவன்
செந்தமிழ்நாடு
பள்ளிகளிலெல்லாம்
வங்கிகளின் விரிவாக்கக் கிளைகள்
கோடிகளை வசூலிக்க வசதியாய்
வாடகை அதிகமென்பதால்
ஆம்புலென்சுகள் அதிகம் பயணிப்பது
மயானங்களை நோக்கித்தான்
பிரசவ ஆஸ்பத்திரியின்
லேபர் வார்டிலே வரவேற்பு வளைவு போட்டால்தான்
குழ்ந்தையே வெளியில் வருவேனென்கிறது
அரசியல் வாதியின் அடுத்த
வாரிசுகள்
அடம் பிடிக்கின்றன.
தமிழ் படிக்கத் தமிழ்க் குழந்தைகள்
புலம்பெயர்ந்த தமிழர் நாடுகளுக்குப்
பயணமாகிக் கொண்டிருக்கின்றன.
ஓடி விளையாடிய
பாரதியின் பாப்பாக்கள்
சிலந்தி வலைத் தொடர்களுக்குள்
சிறைப் பட்டுக் கிடக்கிறார்கள்.
செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன் வந்து
பாயுது காதினிலே
முனைவர். ச. மகாதேவன்
தமிழ்த்தேன் அருந்துக
பூத்திருக்கும் மரங்களெலாம்
புவியின் புகழ்பாடக்
காத்திருக்கும்
பார்த்திருக்கும் உள்ளமெலாம்
பரவசத்தால்
வேர்த்திருக்கும்
வியர்த்திருக்கும் வான்பரப்பு
மழையாக மண்ணில்
ஈர்த்திருக்கும் வாசத்தை
கேட்டிருக்கும் குயிலோசை
மரச்சோலைதனில்
பாட்டிருக்கும் இசைக்கலைஞன்
மனம் போட்டிருக்கும்
நெஞ்சினிக்கும்
பாட்டாக…
உள்ளிருக்கும் மதுத்துளியைக் கண்டு
கள்ளிருக்கும் எனக் கருதித்
தும்பிக்கூட்டம்
படையெடுக்கும் – அதன் புகழ்பாடச்
சொல்லிருக்கும் பூவுலகு உள்ளவரை
நாவில் தமிழிருக்கும்
முனைவர். ச. மகாதேவன்
பங்குனி உத்திரம்
பங்குனி உத்திர நாளன்று
குடும்பத்தோடு சாஸ்தாக்களை வழிபட்டு
ஆட்டுக்கிடா பலிகொடுத்து
வில்வண்டியின் பின்னால் கட்டிக்கொண்டு
வரிசையாய் திரும்புகிற அழகை
பாளை சவகர் திடலிலிருந்து
பார்த்து ரசித்திருக்கிறேன்
இன்று வீடுகளில் பொங்கித் தின்று
விட்டு
ஷேர் ஆட்டோவில் கோவிலுக்கு உடனே போய்
சட்டெனத் திரும்பி வந்து
வேலைக்குப் போகும்
அவசரம் ஒவ்வொருவரிடமும்..
ஆற அமர வழிபடக் கூடமுடியாமல்
ஆறியதைத் தின்று
அடுத்த ஷிப்டுக்குத் தயாராக வேண்டியிருக்கிறது.
சாமி காப்பாற்றாத குடும்பங்களைச்
சம்பாத்தியம் தானே காப்பாற்ற வேண்டும்.
This entry was posted
at 08:13
. You can follow any responses to this entry through the
.