பாட்டியிடம் படித்தவை
பாட்டி தாத்தாவைவிடப்
பண்பாட்டைக் கற்றுத்தர
யாரால் முடியும்?
பரிட்சைக்குப்
பத்துநாள் முன்பு ஹால் டிக்கெட்
தொலைந்து விட்டதெனக் கதறியபோது
பட்ட மரத்தானுக்குச் சாம்பிராணி போடு
பத்து நிமிடத்தில் கிடைக்குமென்று நம்பிக்கை
சொன்னாள் பாட்டி
சொன்னபடிக் கிடைத்தது.
நள்ளிரவு விலுக்கென்று எழுந்து பதறியழும்
தம்பிப் பாப்பாவின் பயம் போக்கப்
பிடாரி கோவில் தேரடியில்
தேங்காய் வாங்கிச் சிதறுகாய் விடச் சொல்வாள்
வாசலில் பிச்சைக்காரன் வந்தால்
என் கையில் கொடுத்துப் போடச் சொல்லி
அறத்தை அடிமனதில் பதிப்பாள்
சனிக்கிழமை சந்தைக்கு அழைத்துச்சென்று
நுங்கு வாங்கித் தந்து
பங்கு போட்டுச்சாப்பிடு என்று
பகிர்தலைப் பதித்தாள்
ஆதிகாலத்து அலங்கார மாளிகைக்கு
அழைத்துச் சென்று டிராயர் சட்டை வாங்கித் தந்து
முத்தம் கொஞ்சி
அன்பைப் பதி்த்தாள்
அமரகண்டான் ஊருணிக் கரையிலுள்ள
வாசக சாலைக்கு அழைத்துச் சென்று
அம்புலிமாமாவிலிருந்து எழுத்து வாசிப்பை ஆரம்பித்து
வைத்தாள்.
படிப்பைப் பதித்தாள்.
குடிசை வீடு, மண்தரை,
அரிக்கேன் விளக்கு மட்டுமே உண்டு அவள்
சிதம்பரம் செட்டியார் தெரு வீட்டில்
ஆனாலும்
பல்கலைக்கழகங்களில் படித்ததை விடப்
பாட்டியிடம் படித்தது அதிகம்.
இவன் இழந்தது

பசலிப் பழங்களை நகங்களுக்கிடையே
நசுக்கி நகச்சாயம் போட்டதுண்டு.
பூவரசம் பூவின் அழகைக் கண்டு
பூவரச இலையைச் சுற்றி
இளையராசாவாய் இசையெழுப்பியதுண்டு
எலியின் வாலில் கயிறுகட்டி
போனதுண்டு
பாவம் செய்ததாய் ஓணானைப் பிடித்து
மூக்குப் பொடி காரப்பொடி போட்டு
சித்திரவதை செய்து கொன்றதுண்டு.
கவுட்டா புள்ளோடு காகக்குஞ்சைஅடித்துக்
கவர்ந்து வந்ததுண்டு
சிகரெட் அட்டைகளைப் பொறுக்கக்
கடைகடையாய் அலைந்ததுண்டு.
வாடகை சைக்கிள் எடுத்து
விடுமுறை நாளில் ஓட்டி
இருகரம் தூக்கிச் சாகசம்
செய்ததுண்டு.
கோலிக்காய் ஜெயித்துப்
பானை நிறையச் சேர்த்ததுண்டு
தோற்றவன் பம்பரத்தை ஆக்கர்
வைக்கக் கூரான ஆணி தேடி அலைந்ததுண்டு
இதில் ஒன்று கூடச்செய்யாமல்
இன்று என் மகன் மவுனமாய்
கணினியில் கார்ப் பந்தயம்
பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்ன செய்ய?
முனைவர். ச. மகாதேவன்
முனைவர். ச. மகாதேவன்
பழஞ்சோலைத் தூளி உறக்கம்
சொக்கட்டான் தோப்புக்கருகே இருக்கும்
வயற்காட்டு மண்முகட்டில்
வேப்பமரத்தடியில்
கட்டிய பழஞ்சேலைத் தூளியில்
தாயின் தாலாட்டுப் பாட்டொலியில்
தன்னை மறந்து தூங்குகிறது தளிர் ஒன்று!
களை பறித்துப் காததூரம் நகர்ந்தாலும்
அவள் கவனமெல்லாம் தூளியில் தூங்கும்தன்
தூங்கும் தன்
கைக்குழந்தையைக் குறித்துத் தான்
தொட்டில் கயிறு இல்லை
தொங்கவிடச் சுருள் கம்பி வசதியில்லை
இடைக்கட்டையில்
சுற்றி நிற்கும் பொம்மை ஏதுமில்லை
மேற்சுழல மின்விசிறி எப்போதுமில்லை
ஆனாலும்...
வியர்வைத் துளிகளின்
உறவு வாசத்தோடு
ஏழைத்தாயின் தாலாட்டுப் பாடலுக்கு
மயங்கிக்
கண்ணுறங்குகிறது
அக் கற்கண்டுக் கனியமுது.
முனைவர். ச. மகாதேவன்
சொற் சோப்புகள்
எந்நேரமும் எவருடனாவது பேசிக் கொண்டேயிருக்கும்
பண்பலை அறிவாப்பாளர்களைப் போல்
எங்காவது யாரேனும் எதையாவது
பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
குரலை உயர்த்தி உணர்ச்சியால்
தழுதழுப்பதும், அடுக்கு மொழிகளை அடுக்கி
மேற்கோள்களைச் சொல்லி வேகமாய் பேசுவதும்
பக்கத்து நாடுகளின் பெயர்களை எல்லாம் சொல்லிச்
சுட்டு விரல் நீட்டிப் பேசுவதும்
சவகர் திடலில் பார்த்துச் சலித்துப்போய் விட்டது.
பாராட்டு விழாக்களென்றால்
சொல்லவே வேண்டாம்
சொற்களை சோரம் போகச் செய்து
மொழியை முடமாக்குகிறார்கள்.
அவர் பிறந்த நூற்றாண்டில் நாம் பிறந்தது
’பாக்கியம் எனச் சொல்லி’ கைதட்டு வாங்குகிறார்கள்
அவர்கள் பேசிவிட்டுச் சென்ற பின்
அந்த மேடையில்
அதன் குழந்தைகள் விளையாடுகின்றன
எந்த ஒப்பனையும் இன்றி
நைக்கப்பட்டு நசுக்கப்பட்ட மொழி
கதவில் சிக்கி வாலை இழந்த
பல்லியைப் போல
இரணத்தோடு
மெல்ல
மெல்ல
மேடையை விட்டு
அப்பால் போகிறது…
அவர்கள் போட்ட
சோப்பு வெள்ளத்தில்
வழுக்கி விழாமல் நாமும்
கவனமாய் வெளியேற வேண்டியிருக்கிறது.
முனைவர். ச. மகாதேவன்
சின்ன பொம்மைகள்
திருச்செந்தூர்ச் சாலையோரத்தில்
போலீஸ் துரத்திவிட்டதால்
பிளாஸ்டர் ஆப் பாரீசில்
ஆளுயரப் பிள்ளையாரை அப்படியே போட்டுவிட்டு
ஓடிய ராஜஸ்தான் மாநிலபொம்மைக்
கலைஞன்...
அடி விழுந்தால் அப்புறப்படுத்த முடியா
ஆளுயரப் பொம்மைகளை அன்றிலிருந்து
செய்வதே இல்லை.
அடித்து விரட்டினாலும்
ஆளுக்கொன்றாய் தூக்கிக் கொண்டு
ஓடத் தோதாயிருக்குமெனக்
குட்டிப் பொம்மைகளையே செய்துவிட்டு
விற்குமென வெகுநாட்களாய் காத்திருக்கிறான்.
நாம் பேசாமல் வேடிக்கை பார்த்தபடியே
வழக்கம் போல்
வண்டியில் பலநூறுமுறைக் கடந்து செல்கிறோம்.
முனைவர். ச. மகாதேவன் |
This entry was posted
at 08:16
. You can follow any responses to this entry through the
.