தாமிர பரணியை அள்ளி சௌந்தர மகாதேவன்

Posted



மாவுத்தன் அருகிருக்க நெல்லையப்பர் கோவில் பிரகாரத்தில் காந்திமதி  நிற்பதைப் பார்ப்பதே அழகுதான் .
வார்ப்பில் சமைத்துத் தரும் பெருங்கவளத்தை மாவுத்தன் உருட்டிப் போடப்   பெருவாய் திறந்து
 அவள் உண்ணும் அழகு சொல்லி மாளாது 

தென்னங்கீற்று மாட்டு வண்டி சகிதம் கோவில் விட்டு வெளியே வந்தாள் அவள் வெளியூர் கிளம்பி விட்டாள் என்று பொருள் . எல்லோரையும் மகிழ்ச்சிக்குள்ளாக அவளைத் தவிர யாரால் முடியும் ?
சீர் தட்டிய குழந்தைகளுக்கு துதிக்கையால் தண்ணீர் உறிஞ்சி
 முகத்தில் சல்லென்று தெளிக்கும்போது அவள் இன்னும் அழகு

ஆனித்திருவிழா  வந்துவிட்டால் பெரும் பட்டாடை போர்த்தி வேணுவனநாதர் சப்பரத்திற்கு முன்னால் எந்தப் பதட்டமும் இன்றி லட்சம் மக்களுக்குள் புகுந்து வாகையடி முக்குத் திரும்பும் போது
 ரத வீதி வேறு சாயல் பூண்டுவிடும்.

தன் பிரம்மாண்ட உருவம் குறித்தோ எல்லோரும் தனை வணங்குதல் குறித்தோ எவ்வித கர்வமும் இன்றி வெகு இயல்பாய்  குறுக்குதுறை தாமிர பரணியை அள்ளி நீராடும் அவளிடமிருந்து கற்றுக் கொள்வதற்குத் தினமும் ஒரு பாடம் உண்டு .
                                                                                              சௌந்தர மகாதேவன் 

This entry was posted at 00:43 . You can follow any responses to this entry through the .

0 comments