ஏழிசை மன்னர் எம்.கே.டி www.mktbagavathar.blogspot.com சௌந்தர மகாதேவன் திருநெல்வேலி

Posted



அலைபாயும் மனதைக் கட்டுப்படுத்தும் வல்லமை, கலை பாயும் இசைக்கு உண்டு

       சப்தஸ்வரங்களின் இசைப் பிரவாகத்திற்கு “நகையே, அழுகை, இளிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம் எனும் எண் வகை மெய்ப்பாடுகளையும் உருவாக்கும் ஆற்றல் உண்டு.

       இசைக்கு மயங்காதோர் யார்? காற்றில் கலந்து கீதம், செவிக்குள் நுழையும் போது சொக்கிப் போகிறதே எந்தச் சோக மனமும் !

       தன் வெண்கலக் குரலால் யாவரையும் சொக்க வைத்து, ஒப்பற்ற நடிப்பாற்றலால் அனைவரையும் நிற்க வைத்து, நடித்த படங்களை எல்லாம் தொணணூறு வருடங்களுக்கு முன்பே இலட்சக் கணக்கில் விற்க வைத்த பெருமை M.K.T என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்பெற்ற

       மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதரைத்தான் சாரும்.

       1934ஆம் ஆண்டு வெளிவந்த பவளக்கொடியிலே தொடங்கி 1959 ஆம் ஆண்டு வெளியான “சிவகாமி“ வரை 25 ஆண்டுகள் அமர காவியங்கள் படைத்த அற்புதக் கலைஞர் M.K.தியாகராஜ பாகவதர்.

       மாயவரத்திலிருந்து மகன் தியாகராஜனைத் திருச்சிக்குத் தந்தையார் அழைத்துச் செல்கிறார்.

       திருச்சி, பாலக்கரையிலுள்ள பழைய ஜெபமாலைக் கோவில் பள்ளியில் சிறுவன் தியாகராஜன் பள்ளிப் படிப்பைத் தொடங்கினான்.

       பாடம் படிப்பதை விடப் பாடல் படிப்பதில், தேனிசைக் கீதங்கள் பாடுவதில் தியாகராஜன் கவனம் செலுத்தினான்.

       பாடல் மலரை நோக்கிச் சங்கீதத் தேனி பயணித்தது.  பாடகர் S.G. கிட்டப்பாவின் தேவார, திருவாசகப் பாடல்களில் சிறுவன் தியாகாராஜனின் மனம் லயித்தது.

       அந்தக் காலத்தில் மேடைக் கலைஞர்களுக்கு மரியாதையும் புகழும் இல்லாத நேரம்.. தந்தை கிருஷ்ணமூர்த்திக்குத் தன் மகன் தியாகராஜனின் இசை ஆர்வமும் பிடிக்கவில்லை.

       விருட்சமாக விரியக் காத்திருப்பவன் விதையாக மண்ணுக்குள்ளே முடங்கிக் கிடப்பானா?

       யாவற்றையும் புறந்தள்ளி முன்னேறி முன்னேறி... இன்னும் தீவிரமாக இசையை ரசிக்கக், ராகங்களில் வசிக்க, ரசனையோடு பாடல்களைப் புசிக்க கற்றுக்கொண்டார்.

       மரபறியாச் சிறுவன் தியாகராஜன், கேள்வி ஞானத்தால் பாடல்களைத் தன்வயமாக்கிக் கொண்டான்.  கோயில் பஜனைகளில் மெல்ல மெல்லப் பாடிப் பெயர் பெற்றார்.

       சிறுவன் தியாகராஜனின் வாழ்க்கைப் படகின் திசை சட்டென ஒரு நாள் திரும்பிற்று.  அப்போது அச்சிறுவனுக்குப் பத்து வயதுதான்.

       திருச்சி ரயில்வே பணியாளராகப் பணியாற்றிய F.G.நடேச ஐயர் தான் அத்திருப்பு முனையின் காரணகர்த்தா.

       திருச்சி ரசிக ரஞ்சனி சபாவை நடத்தி வந்த F.G.நடேச ஐயர், துறுதுறு என்று பஜனை பாடிய, கண்களை அழகாக உருட்டிப் பேசிய சிறுவன் தியாகராஜனுக்கு நடிக்க ஓர் அருமையான வாய்ப்பளித்தார்.

       புகழ்பெற்ற “ஹரிசந்திரா“ நாடகத்தில் அரிச்சந்திர மகாராஜாவின் மகனான “லோகிதாசன்“ பாத்திரத்தில் நடிக்கச் சிறுவன் தியாகாராஜனுக்கு வாய்ப்பளித்தார்.

       முப்பதுகளிலேயே தமிழ்த் திரையுலகின் முடிசூடா மன்னனாகத் திகழ்ந்து பலலட்ச ரூபாய் ஊதியம் பெற்ற M.K.T. எனும்  மாகலைஞனின் நடிப்பின் பிள்ளையார் சுழி “லோகிதாசன்“ பாத்திரமே.

       தாய் சந்திரமதியின் மீது பாசம் பொழிவதும், அழகுத் தமிழில் மடமடவெனக் கவிதை நடையில் பேசியதும, பாம்பு தீண்டி அசையாமல் மாண்டவன் போல் நடித்ததும் கண்டோரைக் கண்ணீர்விட வைத்தது.

       மிருதங்க வித்வான் தட்சணாமூர்த்தி ஒரு புறம் மிருதங்கம் வாசிக்க, பொன்னு ஐயங்கார் மறுபுறம் அமர்ந்து வயலின் வாசிக்க, “அபினவ நந்திகேஷ்வரர்“ என்ற பட்டம் பெற்ற தட்சணாமூர்த்தி பிள்ளை கஞ்சிரா வாசிக்க நடுநாயகமாகத் தியாகராஜன் அம்பாள் சன்னதியில் மூன்று மணி நேரம் தொடர்ந்து கானாம்ரும் பொழிகிறார்.

       கீரவாணி, சாருகேசி, சரசாங்கி, சண்முகப்ரியா, பவப்ரியா, ரத்னாங்கி என்று ராகங்களை வரிசையாய் பாடிப் பரவுகிறார்.

       கச்சேரி முடிகிறது.  சபை கரகோஷம் புரிகிறது.  புகழ்மிக்க இசைக் கலைஞர் அபினவ நந்திகேஷ்வரர் தட்சணாமூர்த்திப் பிள்ளை “என் வாழ்நாளில் இத்தனை அழகான குரலில் யாரும் பாடிக் கேட்டதில்லை“ என்று புகழ்ந்து “எல்லாம் வல்ல திருமுருகன் பேரருளே இந்த கானாம்ருத அரங்கேற்றத்திற்குக் காரணம்“ என்று கூறி,

      

       “பாகவதர்“ என்ற பட்டத்தை வழங்கினார்.

       அன்று முதல் மாயவரம் கிருஷ்ணமூர்த்தி

தியாகராஜ பாகவதர் என்று அவர் அழைக்கப்பட்டார்.  தியாகராஜ பாகவதரை உலகிற்குக் காட்டிய பெருமை மிருதங்க இசைக் கலைஞர் மதுரை பொன்னு ஐயங்காரையே சாரும்.

       பெரிய காளியம்மன் கோவிலில் நடைபெற்ற அந்த அரங்கேற்றம்.. கர்நாடக சங்கீத உலகில் K. தியாகராஜ பாகவதருக்கு நிலையான இடத்தைப் பெற்றுத் தந்தது.

       20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடகத்தமிழ் கொடிகட்டிப் பறக்கவும் M. K. தியாகராஜ பாகவதர் பெருமுயற்சி எடுத்தார். 

       இந்தியாவின் இதிகாசக் கண்களாகத் திகழும் மகா பாரதத்தையும், ராமாயணத்தையும் கற்றுத் தேர்ந்து அவற்றிலிருந்து நாடகக் கதைகளை உருவாக்கினார்.

       இந்தியப் புராணக் கதைகளைப் பாடலும் நடிப்பும் சேர்த்து அருமையான நாடகங்களாக மாற்றினார்.

       ஹரிசந்திரா, பவளக்கொடி,

       சாரங்கதாரா, லலிதாங்கி,

       நந்தனார், பாமா விஜயம்,

போன்ற இறவாப் புகழ்மிக்க நாடகங்களை எழுதினார் இயக்கினார், பாடினார், நடித்தார்.

       தமிழ் சினிமாவின் தொடக்ககாலத்தில் புராணப் படங்கள் வந்தததற்கும், நாடகமாகப் புகழ்பெற்ற கதைகள் படமாக்கப்பட்டதற்கும் M. K. T. பெரும் காரணமாக அமைந்தார்.


This entry was posted at 10:57 . You can follow any responses to this entry through the .

0 comments