சிறுகதை எழுத்தாளர் வண்ணதாசன்

Posted



அவர் கதைகளுக்குள் திருநெல்வேலி,அல்வாவைப் போல் தித்திக்கும் இனிப்பு என்றும் உண்டு.அவரருடைய பரமனும் சுந்தரத்துச்சின்னம்மையும் லோகு மதினியும் சின்னுவும் விபினும் தனுவும் நடுத்தரவர்க்கத்தின் வாழ்வியல் அடையாளங்கள்.ஆறு ஆண்டுகள் அவரது கதைகளைத் திரும்பத்திரும்பப் பலமுறை வாசித்திருக்கிறேன்.வரிக்குவரி அழகியல் பதிவுகளோடு அடுத்த வரிக்குப் போகவிடாமல் செய்யும் ஆற்றல் உடையன அவர்எழுதிய முந்தைய வரிகள்.நீண்ட நேர்காணல் நிகழ்த்துவதற்காக அவரது பெருமாள்புரம் வீட்டில் சிந்தாவோடு அவரை ஓர் மாலைப்பொழுதில் சந்தித்தேன்.தொலைக்காட்சிக்கு மேல் புத்தர் சிரித்தபடி எங்களைப் பார்த்திருந்தார்.உயரமான மனிதராக உள்ளிருந்து புன்னகையுடன் வெளியே வந்தார் வண்ணதாசன் அய்யா கலைநுணுக்கத்தோடு. அமைந்த அந்தப்பச்சைநிற சோபாவில் தலையணை உருளையோடு  வண்ணதாசன் அய்யா அமர்கிறார்.இரண்டு மணிநேரம் மடைதிறந்து பதில் தருகிறார்.வரிக்குவரி வாசித்த சிறுகதைப் படைப்பாளர் தன்னைப்பற்றி எதுவும் உயர்வாகச் சொல்லிக்கொள்ளாமல் வெகுஇயல்பாய் அன்புடன் பேசியது அவர்மேல் மரியாதையை உண்டாக்கியது.அவர் கதைகளை கவிதைகளை வாசித்தபோது அவற்றை அன்பு என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கிவிடலமா என்று தோன்றுகிறது.வண்ணதாசன் படைப்பிலக்கியங்களில் முனைவர் பட்ட ஆய்வில் மேற்கொண்டதும்,திருநெல்வேலி ம.தி.தா. இந்துக் கல்லூரியில் நடைபெற்ற வாய்மொழித்தேர்வில் வண்ணதாசன் அய்யா துணைவியாரோடு கலந்து கொண்டதும் என் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அரைநூற்றாண்டு காலம் தமிழ்ப் படைப்புலகின் அழகியல் பிதாமகனாகத் திகழும் வண்ணதாசன் அவர்களின் படைப்புலகம் தொடர்பான ஒருநாள் கருத்தரங்கம் திருநெல்வேலி சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை நடத்தியதும் அதில் காலை முதல் மாலை வரை தி.க.சி அய்யா கலந்துகொண்டதும் நெகிழ்வோடு அதில் வண்ணதாசன் அய்யா ஆற்றிய உரையும் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.வண்ணதாசன் பொங்கிப்பிரவகிக்கும்அழகியல் தமிழ்அருவி.இளையதலைமுறை எழுத்தாளர்களின் முன்மாதிரி.ஒப்பனை இல்லாத ஒப்புமை இல்லாத ஒப்பற்ற எழுத்தாளர்.தளராமல் பயணிக்கும் தாமிரபரணி.வளமுடன் அவர் வாழ அன்புவாழ்த்துக்கள்.
சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி




சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த்துறை சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா 13.8.13 நாறும்பூநாதன் உரை

Posted






சீதக்காதி தமிழ்ப் பேரவைத் தொடக்க விழா 13.8.13 

நாறும்பூநாதன் வந்தார்.எவ்வித செயற்கைத்தனமும் இல்லாமல் இயல்பாகப் பேசினார்.மண் சார்ந்த அவர் கதைகள் மீது எப்போதும் ஈர்ப்பு உண்டு.ஜவகர் திடலில் அமர்ந்துகொண்டு வேர்க்கடலை பொட்டணம் தின்றுகொண்டுகூட அவர் கதைகளை வாசித்துவிட முடியும்.அவர் பத்திரங்கள் நமக்கு வெகுநெருக்கமானவை.ஒரு மணி நேரம் பேசினார். புதுமைப்பித்தன்,வண்ணதாசன்,உதயசங்கர்,கு.அழகிரிசாமி,கீரனூர் ஜாகிர் ராஜா,தோப்பில் முஹமது மீரான் என்று அவர் பயணத்தைத் தொடங்கியபோது மாணவ மாணவியர் அவரோடு கதைவெளியில் பயணமாயினர்.சீதக்காதி தமிழ்ப் பேரவை கதைவெளியில் தொடக்கம் கண்டது.நம் கல்லூரியில் பயின்ற சுகா குறித்தும் அவருடைய மூங்கில் மூச்சும் குறித்துப் பேசினார்.தாமிரா கதைகள் குறித்து பேசினேன்.படைப்பாளியோடு கதைவெளியில் பயணிப்பது சுகமானது.

இதயம் நனைந்த இனிய நூல் வெளியீட்டு விழா-திருநெல்வேலி சௌந்தரமகாதேவன்

Posted












காலம் கவனித்துக் கொண்டே இருக்கிறது யாவற்றையும்.கரி நாட்களுக்கு மேலும் கையில் வேலோடு “யாமிருக்க பயமேன்” என்று சிரிக்க முடிகிறது காலண்டர் முருகர்களால்.பாளை.அருங்காட்சியகத்திற்கு அருகே பத்து ரூபாய்க்குக் கலர்க்கோழிக் குஞ்சுகளை அட்டைஅரணிட்டு விற்க முடிகிறது.ஜான்ஸ் கல்லூரிக்கு அருகில் சாலையோரத்தில் பூச்செடிகளை விற்கும் உயர மனிதர் இரவுப் பொழுதுகளில் அப்பூச்செடிகளுக்கு மத்தியில் எந்தக் கவலையும் இன்றி உறங்க முடிகிறது.பத்தடி உயரப் பிள்ளையார் பொம்மை செய்து வைத்து விற்காததால் அடுத்த பிள்ளையார் சதுர்த்தி வரை சாக்கு சுற்றி வைத்து திருச்செந்தூர் சாலையோரத்தில் ஒரு வருடம் காத்திருக்க முடிகிறது.

விற்காமல் போனாலும் கவலை இன்றி ஹெல்மெட் வியாபாரியால் வண்ணார்பேட்டை சூரியன் பண்பலை முன்பு சாலைஓரத்தில் தூங்க முடிகிறது.ப்ளெக்ஸ்களினால் நசிந்துபோய் விட்டாலும் வேதவசனங்கள் எழுதியோ நாளைய நம்பிக்கை என்று அழகாக எழுதியோ பிழைக்கும் அந்த தாடிவைத்த ஆர்டிஸ்ட்டால் தன் கைகளை நம்பி வாழமுடிகிறது.பறக்க முடிவு செய்தவனுக்குச் சிந்தனையில்கூட சிறகு முளைக்கும்.இருப்பதைக் கொண்டு சிறப்பாய் வாழ முடிகிறது வெறுப்பில்லா வெற்றி மனிதர்களாய்.தடம் போட்டவர்களைவிடத் தடம் பதித்தவர்களை வரலாறு என்றும் வரவுவைத்துக்கொண்டுள்ளது.


குரு.சண்முகநாதன் அவர்களின் “கடவுளரும் நல்லெண்ணெயும்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது அவரைக் கண்டேன்.இதயம் நிறுவன அதிபர் வ.இரா.முத்து அவர்கள் நம்பிக்கையின் அடையாளமாகப் பேசினார்.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவரது எளிமையான பேச்சு கவர்ந்தது.மரபு சார்ந்த குடும்பத்தொழிலான நல்லெண்ணெய் வாணிபத்தை இன்று கடல் கடந்த நாடுகளில் பரப்ப அவர் மேற்கொண்ட உத்திகள் வியப்பிற்குரியன.நம் மரபு சார்ந்த பாட்டிவைத்திய முறைகளை உலகத்தமிழ்ச் சமுதாயத்தினரிடம் கொண்டு செல்லும் அவர் நோக்கும் போக்கும் வியக்க வைப்பதாய் அமைகிறது.தன் இருமகள்களுக்கும் தூய தமிழ்ப் பெயர்களை வைத்துள்ளார்.வான்புகழ் வள்ளுவர் தமிழ்ப் பேரவை நடத்தி வருகிறார்.தமிழ்மண் சார்ந்த பழமொழிகள்,இலக்கியங்களில் நூல்கள் உருப்பெற உதவி செய்துள்ளார்.எங்கள் பேராசிரியர் முனைவர் கட்டளை கைலாசம் அவர்களின் இரு மாணவர்களும் அவர்முன் விழாவில் பங்கேற்றுப் பேசியதும் அவருடைய ஆசிகளுடன் தொடர்ந்து பயணிப்பதும் சுகமானதாய் அமைந்தது.

ஊக்குவிக்க ஆளிருந்தால்

ஊக்குவிற்பவனும் தேக்கு விற்பான்

என்பது உண்மைதான்.


சௌந்தரமகாதேவன்
திருநெல்வேலி

திருமதி. லதா ரஜினிகாந்தின் 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்;’ சௌந்தரமகாதேவன்,திருநெல்வேலி

Posted








பக்காப் படிகள், திருவைகள், உலக்கைகள்,
கிட்டில்கள், குதில்களின் வரிசையில்
அருங்காட்சியகத்தில்
அடுத்து வைக்கப்பட்டிருப்பது
பாட்டி தாத்தாக்களைத் தான்
வேறு முகத்தை எடுத்து நம் உடலில்  மாட்டிக் கொண்டதைப் போல் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் கழிந்த பின்னும் நம் தேசத்திற்கென்று தனித்துவம் மிக்க ஒரு கல்வி முறையை உருவாக்கவில்லை என்ற ஆதங்கம் வெகுநாட்களாக என்னுள் உண்டு.
            மூடு காலணிகளுடனும், கழுத்துப் பட்டைகளுடனும் முதுகு நிறைய புத்தக மூட்டையுடனும் பள்ளிக்குச் சென்று வருவது மட்டுமா கல்வி?
            நம் இந்தியப் பண்பாடு, வேதங்கள், உபநிடதங்கள், பக்தி இலக்கியங்கள், தேவாரப் பதிகங்கள், ஆழ்வார் பாசுரங்கள், சித்தர் பாடல்கள், குணங்குடியார், பீரப்பா மெஞ்ஞானப் பாடல்கள், நீதி இலக்கியங்கள் இவற்றை எல்லாம் புறந்தள்ளி உலக மயமாதல் என்ற பெயரிலே இங்கிலாந்துப் பாடத்திட்டத்தை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்?  என நினைத்த போது, ஆனந்த விகடனிலே அந்த அறிவிப்பு வந்தது.
                இந்தியக் கல்வி முறையை வேராகக் கொண்டு
 திருமதி. லதாரஜினிகாந்த் சென்னை வேளச் சேரியில் 'தி ஆஷ்ரம்' என்ற பள்ளியைத் தொடங்கி நடத்தி வருகிறார்கள் என்பதும், அதில் டாஸ்க் என்ற புதிய பாடப் பிரிவைத் தொடங்கி வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதையும் ஆனந்த விகடனில் திரு. மதன் அவர்கள், திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்களுடன் மேற்கொண்ட நேர்காணலில் தெரிவித்திருந்தார்கள்.
                'கல்வி முறையில் மாற்றம் தேவை' என்ற திருமதி. லதா ரஜினிகாந்தின் கட்டுரை ஆனந்த விகடனில் 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்; எனும் தலைப்பில் 36 வாரம் வந்தது. முப்பத்தாறு வாரக் கட்டுரைகளையும் வரிக்குவரி வாசித்தேன், கத்தரித்து  நூலாகக் கட்டமைப்பு செய்து வைத்திருந்தேன்.
            ஒவ்வொரு, வாரமும் விகடனில் வரும் தொடரைப் 'பாலம்'
அமைப்பின்
சமூக சேவகர் பாலம் பா. கலியாண சுந்தரம் அவர்களுடன் விவாதித்திருந்தேன்.  'அம்மையாரின் அந்நூல் பற்றிய உன் கருத்தியலை விமர்சனமாக எழுதேன்' என்றார்கள்.  எழுதினேன் 82 பக்க அளவில் என் கட்டுரை நீண்டது...  பாலம் ஐயா மூலம் திருமதி லதா ரஜினி அவர்களுக்கு அனுப்பி வைத்திருந்தேன்
.
பாலம் பா. கலியாணசுந்தரனார் அப்பழுக்கற்ற காந்தியவாதி
'தேவையே பெரிதென்று தேடுவோர் பலரிருக்க
சேவையே உயிரென்று கருதி உருக வந்தார்
பாவை மணமுமின்றி பந்தபாசம் ஏதுமின்றி
நாவை அடக்கி வாழும் நற்சேவை முனிவரிவர்

ன்று அவர் வாழ்க்கை வரலாற்றில் நான் எழுதியிருந்தேன்.   பாலம் ஐயா என் விமர்சனக் கட்டுரையைத் திருமதி. லதா ரஜினிகாந்த் அம்மையாரிடம் தந்திருந்தார்.
                பிப்ரவரி 2, 1998, நான் பாளை சேவியர் கல்லூரியில் எம்பில் வகுப்பறையில் அமர்ந்திருக்கிறேன். திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து கடிதம் வருகிறது.
                28.02.1998 ஆம் நாளில் சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் நடைபெறும். 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து
கொள்ள வேண்டும் என்று அக்கடிதத்தில் திருமதி. லதா ரஜினிகாந்த் என்னை அழைத்திருந்தார்கள்.
            என்னால் நம்ப முடியவில்லை! தன் தொடரின் சாதக பாதகங்களை விமர்சித்திருந்த ஒரு சாதாரண மாணவனை அந்நூல் வெளியீட்டு விழாவுக்கே அழைத்திருந்தது ஆச்சர்யமாக இருந்தது.
            அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையால் யாவரையும் தமதாக்கி அன்பு அன்னையாய் பாசம் பொழிய ஒரு சில பேரால் மட்டுமே முடிகிறது.
                உடன் விழாவில் பங்கேற்பதாகக் கடிதம் அனுப்பினேன்.  அங்கிருந்து ஓரிரு நாட்களில் பதில் வந்தது.  பிப்ரவரி 28 அன்று காலையில்
‘போயஸ்
கார்டன் வாருங்கள்’ என்று திருமதி லதா ரஜினிகாந்த் பதில் எழுதியிருந்தார்கள்.
            இன்ப அதிர்ச்சியில் அன்றிரவு தூக்கம் பிடிக்கவில்லை.  ஒரு பக்கம் நம் எழுத்தை மதித்து அழைத்திருக்கிறார்களே! என்ற மகிழ்ச்சி, மறுபுறம் வெகுநாட்களாய் சந்திக்க வேண்டும் என்று நினைத்து ஆனால் சந்திப்பதற்குச் சந்தர்ப்பம் ஏதும் அமையாத இனிய மனிதர் திரு. ரஜினி காந்த் அவர்களை, அவர்களுடைய இல்லத்திலேயே, அதுவும் அவர்களுடைய அழைப்பின் பேரில் சந்திக்கப் போகிறேன் என்ற போது எப்படித் தூக்கம் வரும்?
            'பெரியவர்களை முதன் முதலாய் சந்திக்கப் போகிறோமே' என்ன பரிசு தரலாம்? என்று மண்டையைப் போட்டு உடைத்தெடுத்தேன்.  என்ன கொண்டு சென்றாலும் அது ஏற்கனவே அவர்களிடம் இருக்கத்தானே செய்யும்.
            திடீரென உள்மனம் உரக்கச் சொல்லியது பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதை நடையில் எழுது, அதுவே மிகச் சிறந்த பரிசாக திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு அமையும்' என்றது.
            இரண்டே நாளில் எழுதி முடித்தேன்.  அழகான முன்னுரையை
திரு
. ரஜினிகாந்த் அவர்களை மனத்தில் கொண்டு எழுதினேன்.
            அவலைக் கட்டிமுடித்து, பகவான்  ஸ்ரீ. கிருஷ்ணரைச் சந்திக்கச் சென்ற குசேலனாய் சென்னை புறப்பட்டேன்.
            போயஸ் கார்டன் எந்தப் பக்கத்திலிருக்கிறது என்று கூட எனக்குத் தெரியாது.
            ஆட்டோவை அழைத்தேன்.  முதலமைச்சர் வீடெல்லாம் உள்ள பகுதி உள்ளே கொண்டு விட முடியாது' என்று சொல்லி சாலையோரம் உள்ள மகளிர் கல்லூரிக்கு அருகில் விட்டுச் சென்று விட்டார். ஓட்டுநர்.
            நடக்கத் தொடங்கினேன்.  நெருக்கடியான சென்னை மாநகரில் சோலைச் சொர்க்கமாய் போயஸ் கார்டன், ஓங்கி உயர்ந்த அழகு மரங்களும் குல்மெஹர் பூக்களும் அப்பகுதியை இன்னும் அழகாக்கின.
            இருக்குமிடம் அருமையாக இருப்பதால், நடக்கும் பாதையும் அருமையாக இருக்கத்தானே செய்யும்!
            நம் மனத்திற்குப் பிடித்த மனிதர்களைச் சந்திக்கச் செல்கிற பொழுதுகளுக்குத் திடீரென தேன் தடவிய இனிப்பு எங்கிருந்து ஒட்டிக் கொள்ளும் என்று தெரியாது,  நாம் சந்தோஷமாயிருக்கும் போது எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாய் ஓர் உணர்வு.

வாசலில் விக்னத்தைக் களையும் வித்தகக் கடவுளாய் விநாயகர் வரவேற்கிறார்.
            அம்மையாரிடமிருந்து வந்த கடிதத்தைக் காட்டுகிறேன். அன்பாய் வரவேற்ற அந்த உதவியாளர்.  வரவேற்பறையில் அமரச் சொல்கிறார்.   எதிரே பார்க்கிறேன்.
            கம்பீரச் சிங்கமாய் திரு. ரஜினி அவர்களின் ஆளுயரப்படம்.  அவரது மனதைப் போன்று அகன்ற அறை. ரம்மியமான ஒளி பரவுகிறது.  எங்கிருந்தோ ஓம்கார ஒலி செவியைத் தாலாட்டுகிறது.  நடுநாயகமாய்
ஸ்ரீ.
கிருஷ்ணரின் மூன்றடி உயர அற்புதச் சிலை ஆனந்தமயமாக அமைந்திருக்கிறது. மனித மனங்கள் அமைதியாக இருந்தால் வரவேற்பறைகூடத் தியான அறையாய் காட்சியளிக்க முடியும்.  அழகாய் காட்சியளித்தது.
            மேகத்தை விலக்கிக் கொண்டு தண்மதி வெளிவருமே! அப்படி வந்தார் திருமதி. லதா ரஜினிகாந்த். என்னையும் அறியாமல் எழுந்து நின்று கை கூப்புகிறேன்.
            'நன்றாக இருக்கிறீர்களா மகாதேவன்?' அவர்களின் தேன்குரல் மவுனத்தைக் கலைக்கிறது.  ‘ஆமாம்... நன்றாக இருக்கிறேன்' சொன்னபடி எழுந்தவன், அவர்களுக்குப் பரிசாகக் கொண்டு சென்ற 'பகவான்
 ஸ்ரீ ரமணமகிரிஷியின வாழ்க்கை வரலாற்றுக் கவிதை நூலைப் பரிசாகத் தருகிறேன்.
            புன்னகைத்தபடி வாங்கிக்கொண்டு அமரச் சொல்கிறார். தொலைபேசியில் அழைத்து தேநீர்வரவழைத்துத் தந்து உபசரிக்கிறார்.
            'மகாதேவன்', ஆனந்த விகடனில் நான் எழுதியிருந்தது எப்படி இருந்தது? என்று கேட்டபடி, எந்தக்கவுரவமும் பார்க்காமல், அறை ஓரத்திலிருந்த மோடி நகலியில்' மாலை நிகழ்ச்சிக்கான நிகழ்ச்சி நிரலைப் படியெடுத்துக் கொண்டிருந்தார்.
            'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' சாதாரண பொழுதுபோக்குத் தொடராக விகடனில் வரவில்லையம்மா!  அது மக்கள் மத்தியியல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதை அறிவீர்களா?' என்றேன்.
            'அப்படியா?' என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? என்று கேட்கும்போதே அழகாய் ஒரு புன்னகை பூத்தார் திருமதி. லதா ரஜினிகாந்த்.
            'உங்கள் எழுத்தை ஆனந்த விகடனில் வாசித்தபின் பல பெற்றோர் தம் குழந்தைகளை அடிப்பதை நிறுத்திக் கொண்டார்கள்!
            குழந்தைகளோடு நட்பு பாராட்டக் கற்றுக் கொண்டார்கள்.
            பாடத்தைச் சுமையாகச் சுமத்தாமல் விளையாட்டாகக் கற்றுத்தர முயன்றார்கள்' என்றேன். “ஆஷ்ரம் பள்ளிக்கும் நிறையக் கடிதங்கள் வந்திருக்கின்றன” என்றார்கள் திருமதி. லதா ரஜினி அவர்கள்.
            'நான் முன்வைக்கிற கல்விமுறை சாத்தியம்தானே! ஒர் ஆய்வு மாணவராக என்ன நினைக்கிறீர்கள்?' என்று கேட்டார்.
            “அடிமைத் தளையிலிருந்து விடுபட்டு இத்தனை ஆண்டுகள் கழிந்தபின்னும் இன்னும் நம்மால் மெக்காலேவின் கல்வி முறையிலிருந்து மாற முடியவில்லை.
            பதினெட்டு  வருடங்கள் ஆய்வுப்படிப்பு வரை பயின்ற பின்னும் கூட, அரசாங்கத்திடம் வேலை கேட்டு மனு போடக் கூடிய நிலையில்தான் இன்னும் உள்ளோம். பாடத்திட்டத்தை நிறைய மாற்ற வேண்டியுள்ளது. ஆசிரியர் சார்ந்த பாடத்திட்டம் மாணவர் சார்ந்த பாடத்திட்ட முறையாக மாற வேண்டும்.”  என்றேன்.
இவ்வளவு சிந்திக்கும் நீங்கள் ஏன் ஒரு வேறுபட்ட கல்லூரியைத் தொடங்கக் கூடாது?' என்று 23 வயதேயான ஓர் இளைஞனான என்னிடம் திருமதி. லதா ரஜினிகாந்த் கேட்டார்.  சட்டென்று என்னால் என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
'உங்கள் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியைத் தரட்டும்' என்று அழகான கையெழுத்தால் திருமதி லதா ரஜினிகாந்த் ஆட்டோகிராப் போட்டுத் தந்தார்கள்.
கேட்கத் தயக்கமாக இருந்தது. 'திரு. ரஜினிகாந்த் அவர்களைப் பார்க்காமலேயே கிளம்புகிறோமோ!' என்று மனம் படபடத்தது. முகக்குறிப்பில் புரிந்து கொண்டராய்’  மாலை நடைபெறும் 'தி-ஆஷ்ரம்' பள்ளி ஆண்டு விழாவில் அவர்தான் நூலை வெளியிடுகிறார். 'அப்போது அறிமுகப்படுத்துகிறேன்'  என்றார்.  சொன்னவாறே செய்தார்.
28.02.1998 சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கு : தி ஆஷரம் பள்ளி ஆண்டு விழா
                எளிமையைப் பற்றிப் போதிப்பது எளிமையானது, கடைப்பிடிப்பது கடினமானது. எவனொருவன் வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் வேறுபாடில்லாமல் வாழ்கிறானோ அவனையே வரலாறு வரவு வைத்துக்கொள்கிறது.  மற்றவர்களைப் புறந்தள்ளி விடுகிறது.
                திரு. ரஜினிகாந்த் அவர்களும், திருமதி லதா ரஜினிகாந்த் அவர்களும் பொதுவாழ்வில் எளிமையைக் கடைப்பிடிக்கக் கூடியவர்கள் என்பதை பிப்ரவரி 28 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற திருமதி. லதா ரஜினிகாந்த் அவர்கள் எழுதிய 'அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள்' நூல் வெளியீட்டு விழாவே சாட்சி.
            பளிச்சென்ற, வெள்ளை வெளேர் உடையில் 'தி ஆஷ்ரம்; பள்ளிக்குழந்தைகள் வந்தோரை வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.  அதில் திரு. ரஜினி தம்பதியினரின் இரு மகள்களும் ஓடியாடி வரவேற்றுக் கொண்டிருந்தனர்.
            திரு. ரஜினியின் ஞானகுரு பூஜ்யஜீ சுவாமி தயானந்த சரஸ்வதிதான் அந்நூலை வெளியிட வந்தவர்கள்.  மோடி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் திரு. பி. கே. மோடி அதன் முதல் பிரதியைப் பெற வந்திருந்தார்.
            'ஆஷ்ரம்' பள்ளிக்குழந்தைகளிடம் திடீரென ஒரு பரபரப்பு காரணம்... எல்லோர் இதயங்களையும் அன்பால், உயரிய பண்பால், தன்பால் ஈர்த்த தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் தும்பைப்பூ போன்ற வெள்ளை உடையில் பழைய அம்பாசிடர் காரில் வந்திறங்கினார்.
            கூர்மையான கனிவுப் பார்வையால் அனைவரையும் அன்பால் நோக்கியபடி திரு. ரஜினிகாந்த் மின்னலென மேடை ஏறுகிறார். சுவாமி தயானந்த சரஸ்வதியைக் காலைத் தொட்டு வணங்குகிறார்.  ஆசி பெறுகிறார்.  இரு கைகளைக் கட்டியபடி அமர்ந்தவர்.  ஆட்காட்டி விரலைக் கன்னத்தில் ஊன்றி ஆழ்ந்த சிந்தனைக்குள் ஆழ்கிறார்.
            திருமதி. லதா ரஜினிகாந்த் என்னை மேடைக்கு அழைத்துச் செல்கிறார்.   திரு.  ரஜினிகாந்த் அவர்களிடம் இப்படி அறிமுகப்படுத்துகிறார்.
            “மகாதேவன் பாளை சேவியர் கல்லூரியில் இளம் அறிவியல் இரண்டாமாண்டு படிக்கும்போதே எழுத்துத் துறையில் பாரதப் பிரதமரிடம் சத்பவனா தேசிய விருது பெற்றவர்.  எட்டாம் உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதலமைச்சரிடம் விருது பெற்றவர்.  பாலம் கலியாணசுந்தரம் ஐயாவின் வாழ்க்கை வரலாற்றை எழுதி உள்ளார். என்று திருமதி லதா ரஜினிகாந்த் சொல்லச் சொல்ல ரஜினிகாந்த் என்னைக் கூர்மையாகப் பார்க்கிறார்.
            “இவர்தான் சி” அவர்கள் சின்னஞ் சிறு மனிதர்கள்' தொடரை விமர்சனம் செய்து 76 பக்க விமர்சனக் கட்டுரை எழுதியவர்.  அவரைப் பெருமைப்படுத்தவே இந்நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராய் வரவேற்றுள்ளேன். என்று 'திருமதி. லதா ரஜினிகாந்த் சொல்ல, ரஜினி பட்டென்று கையை நீட்டி கைகுலுக்கினார்.
            'சீக்கிரமே ஆசிரியராவீங்க...' என்று ஆசி தந்தார்.  மேடையில் நாங்கள் மூவரும் நின்றிருக்க சுவாமி தயானந்த சரஸ்வதி நடப்பவற்றை அமர்ந்தபடி பார்த்துக் கொண்டிருந்தார்.
            சட்டென்று ரஜினிகாந்த் என் தோள்களைப்பற்றித் தன்னோடு வலப்புறத்தில் நிறுத்திக் கொண்டார்.  அந்தக் கணம் அருமையானது. அன்புமயமானது.
            மாணவனாக இருக்கிறேன்.  படிப்பு முடியவே இன்னும் நான்கு மாதங்களிருக்கிறது. யார் நமக்கு ஆசிரியப் பணி தரப் போகிறார்கள்?  ஏதோதோ நினைவுகள்... ரஜினிக்குப் பக்கத்தில் நிற்கும்போது மனதில் ஊடாடின.
                'எல்லோரையும் ஊக்கப்படுத்துபவர் தானே ரஜினிகாந்த். ஊக்கப்படுத்த அவ்வாறு கூறியிருப்பார்' என்று நினைத்தபடி பக்கத்தில் நின்றேன்.
            'உங்களுக்காகப் பகவான் ரமணரின் வாழ்க்கை வரலாற்றைப் புதுக்கவிதையில் எழுதிக் கொண்டு வந்திருக்கிறேன்.'  இது நான். 
            'கண்டிப்பாக நான் படிக்கிறேன் மகாதேவன்' என்றார் ரஜினிகாந்த்.
            மேடையில் திருமதி. லதா ரஜினி அவர்களின் நூல் சுவாமிஜியால் வெளியிடப்பட்டது. ரஜினிகாந்த் அதன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
            என்னை மேடைக்கு அழைத்த ரஜினி தம்பதியினர்.  வெள்ளி விளக்கை பரிசளித்தனர்.
            அந்த வெளிச்சம்... இன்றுவரை என் வாழ்வில் பரவியுள்ளது.  ஒரு தீபம்தானே ஆயிரம் தீபங்களை ஏற்றி வைக்கும்!